அலை பாயும் மனதினிலே

நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு:: 02nd April’2018

நன்றி படம் :: கூகிள் இமேஜ்

=========================
அலை பாயும் மனதினிலே..!
=========================

மரக்கிளையில் அற்புதமாய் கூடுகட்டும் பறவைக்கு
=====மகத்தான சக்தியதை மனதுக்குள் புகுத்தியதாரோ..?
இரவிலொளி உண்டாக்கும் மின்மினிப் பூச்சிக்கு
=====அடிவயிற்றின் முடிவில் ஒளிகொடுத்தது யாரோ..?
மரங்கொத்திப் பறவைதன் கூரலகால் உளிபோல
=====மரத்தைச் செதுக்கும் உத்தியைத் தந்ததுயாரோ..?
குரங்குபோலத் தாவும்நம் அலைபாயும் மனதினில்
=====கோடி கோடியறிவியல் கேள்வியெழும் அன்றாடம்.!



குறையில்லா வாழ்வுவாழ வியனுலகில் இருக்கிறது
=====கொட்டிக்கிடக்கும் எண்ணற்ற இயற்கை வளங்கள்,!
அறைகுறையா யிதையறிந்த அறிவிலியோ ரெலாம்
=====அழித்தொழித்து விடவே கங்கணம் கொண்டிடுவார்,!
கறைபடிந்த மனதுக்குள் அலைபாயும் நினைவினில்
=====கரைகின்ற கரியவெண்ண மெழாதிருக்க வேண்டும்.!
நிறையிருட்டை நீக்குகின்ற முழுமதிபோல…நம்மின்
=====நினைவும் எண்ணமும் நல்லதையே நாடவேண்டும்.!



அருங்கல்வி பயின்ற ஆசானும்தன் மாணவனுக்கு
=====அற்புதமாய்ப் புரிய வைக்குமாற்றல் பெறவேணும்.!
ஒருமித்த கருத்துகளும் உருவாகி வரும்வரையில்
=====இருவரும் ஒன்றாயிருந்தே செயல்படல் வேணும்.!
குருவொருவன் நல்வழிகாட்ட..சீடனுமதைத் தன்
=====கருத்தில் கொண்டால்..குவலயமதில் சாந்திதவழும்.!
பெரும்ஆய கலைகளும் கைகூட வேண்டுமெனில்
=====பெரிதாயலையும் மனதையடக்கும் திறன் வேணும்.!

====================================================

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (14-Apr-18, 12:07 am)
பார்வை : 133

மேலே