முகம் தெரியா நாயகன்

சில்மிஷ சமிஞ்ஙைகளுடன்
நாணங்கள் மத்தளமிட
மந்திரக் கயிற்றால்
மூன்று முடிச்சிட்டு
முத்தமிட்டாய்!
கண்ணீர் துளிகள்
எட்டிப் பார்ப்பதை
கணப் பொழுதில்
கண்டறிந்து, கைப்பிடித்து
சொல்லாமல் சொன்னாய்
நான் இருக்கிறேன் என்று
அதிகாலையில்
உன் சிகை முடியை
கோதி விடுவதில் இருந்து
தொடங்கும் நம் விளையாட்டு!
கம்பீரமாய் உடை அணிந்து
நீ பணிக்கு
கிளம்பும் வேளையில்
சின்னதாய் ஒரு தவிப்பு!
உனக்காய் அன்பினால் நான் செய்த
உணவை உண்ட பின்பு
உன் அழைப்புக்காக
காத்திருக்கும் என்னை
அழைத்து 'சாப்டியா?'
என்று கேட்கும் வேளையில்
சாப்பிட்ட திருப்தி எனக்கு!
மாலை மங்கும் வேளையில்
மன்மதனான உனக்காய்
வாசலில் நான்...
அன்றைய நிகழ்வுகளை
அலசிப் பேசும் நொடிகளில்
உன் ஆழ்ந்த பார்வையை
சந்திக்க முடியாமல் தடுமாற்றம்
என் இமைகளிடம்...!
என் மடியில் உன் தலையணைத்து
உன்னை உறங்க வைக்கும் வேளையில்
தாயாய் நான்!
என் செல்லக் குழந்தையாய் நீ...!
கண்களில் ஈரம் தெரியவர
கனவென்பதை அறிந்தேன்!
முகம் தெரியா நாயகனே!
ஒட்டு மொத்த அன்பையும்
ஒன்று சேர்த்து வைத்திருக்கிறேன்
என் வருங்கால உனக்காக...
வாங்கிக் கொள்ள
விரைந்து வாடா
என் கனவுக் கள்வா...!!!💞

எழுதியவர் : ரம்யா கலைவாணி (14-Apr-18, 11:22 am)
சேர்த்தது : ரம்யா கலைவாணி
பார்வை : 227

மேலே