புன்முறுவல்

"அழகி!
பேரழகி!
புஜ்ஜு குட்டி!
தங்கம்!
வைரம்!
செல்லம்!
பட்டுக்குஞ்சி!
கருப்பி!
குண்டுத்தக்காளி!
ஆசை குண்டுமல்லி!
கொத்தமல்லி!
அம்மு!
மன்னிச்சுடு டீ!
நான் பண்ணது தப்பு தான் அதுக்காக இப்டி ரெண்டு நாளா பேசாமயா இருப்ப?" பீச் பார்கிங்கில், மேகாவை கொஞ்சியபடி சமாளித்துக் கொண்டிருந்தான் ராகுல்.
"செல்லம்! வெட்க கேடு! பிச்சை ஒண்ணு தான் கேக்கல நான், ராகுல் பையன் பாவம் டீ!" நக்கலாக அவளை சிரிக்க வைக்க ஏதோ நய்யாண்டி செய்தான்.
பதிலுக்கு ஒரு நொடி ஆக்கிரோஷமாக முறைத்தாள் மேகா. பயத்தில் அவளை பார்க்காமல் எதிரே நோக்கினான் பார்க்கிங் வெளியில் உள்ள கடையை நோக்கி ,
"பிஜ்ஜி"
"பிஜ்ஜி!", பாவமாய் பசியுடன் மழலை மொழியில் கேட்டது அந்த குழந்தை.
ஏதோ ஒரு அப்பா தன் பையனுக்கு பஜ்ஜி வாங்கிக்கொடுத்துக் கொண்டே அந்த பிச்சை கேட்கும் குழந்தையை ஆக்கிரோஷமாக முறைத்தார் அந்த அப்பா. அந்த குழந்தைக்கு ஏதோ இனம் புரியாத பயம். வெட வெட என வேர்த்துப்போனது, வெறுத்தும் போனது.
அந்த பிஞ்சுக் குழந்தை குனிந்த தலையுடன் அந்த அப்பாவை பார்க்காமல் வேறொருவருடன் பிச்சைக் கேட்க நகர்ந்தது.
இதைப் அத்தனையும் பார்வையாலேயே புரிந்து கொண்ட ராகுல் துடி துடித்துப் போனான், "இங்கயே இரு வரேன்" என்று ராகுல் நகர்ந்தான்.
அவள் குழப்பத்தில் என்ன செய்வதென்று புரியாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் மேகா.
"திடீரென குழந்தைக்கு பஜ்ஜி வாங்கி கொடுக்கிறான், இதெல்லாம் இவன் பண்ண மாட்டானே! புதுசா இருக்கே! என்னனு தெரிலையே?"
"இதுக்கு மேலயும் கோவமா இருந்தா அவ்வுளவு தான் கோவத்துல கத்த ஆரம்பிச்சுருவான், மன்னிச்சுதொலைவோம்! என்ன பண்றது? ரெண்டு நாள் ரொம்ப கஷ்டப்பட்டுட்டான்! " என மனதில் பேசிக்கொண்டிருந்தாள்.
அந்தக் குழந்தை அவன் வாங்கி கொடுத்த பஜ்ஜியை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது, "போதுமா குட்டி? இல்ல இன்னும் வேணுமா?" என்றான் ராகுல்.
அந்த குழந்தை அவனை பார்த்து ஒரு புன்முறுவலிட்டு பின் தலைக் குனிந்து ஒன்னும் சொல்லாமல் சென்றது.
அவன் திரும்பி அவளை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான். அப்போது அவள் அவனை பார்த்து ஒரு புன்முறுவலிட்டு பின் தலைகுனிந்தாள் மேகா.
பெருமூச்சு விட்டான் ராகுல்.
எதற்கு? மன நிறைவா? இல்லை காதலியின் அந்த ஒரு நொடிக் காதலா?
சிந்திப்போம்!

- காவியா.

எழுதியவர் : காவியா (14-Apr-18, 5:35 pm)
சேர்த்தது : காவியா
Tanglish : punmuruval
பார்வை : 404

மேலே