பாம்பு சட்டையில் ஒரு நாடு

பாம்பு தன் சட்டையை
உரித்து கழற்றியது.
ஹேங்கரில் மாட்டியது.
போனது ஒரு வழியில்.
பாம்பு சட்டையில்
பைகள் இருந்தன.
பை உள்ளே சில
கோலி குண்டுகளும்
சில சிறுவரும்.
விளையாடினர்.
விளையாடும் வெளியில்
மரங்கள் இருந்தன.
மரங்களில் பறவைகள்.
பறவைகள் பறக்க
நகரம் இருந்தது.
நகரத்திற்கு அப்பால்
பள்ளதாக்குகள்.
தாண்டிப்போனால்
நாடு விரியும்.
பெரும் நாட்டில்
முட்டாள்கள் இருந்தனர்.
முட்டாள்கள் கூடி
ஒரு முட்டாளை
தேர்ந்தெடுப்பர்.
கோலி விளையாடும்
சிறுவர் அப்போது
அனுமதிக்கப்படார்...
தேர்ந்த முட்டாள்
சட்டம் போடுவார்.
பாம்பு வாரியம் அமைக்க...
பாம்புகள் எப்போதும்
உள்ளூரில் மட்டும்
சட்டை உரிக்க
ராஜ்யம் பெருகுமாம்.
பக்கத்து ராஜ்யம்
வாரியம் எதிர்க்கும்.
முரடனாய் நிற்கும்.
முட்டாளும் முரடனும்
வார்த்தையால் கடிப்பர்.
கடிக்க கடிக்க
விஷமேறும் சிறுவர்க்கு.
சிறுவர்கள் தாக்குவர்
தங்களுக்குள்.
கோலிகள் கற்களாக மாறும்.
காலம் செல்லும்.
பாம்பின் சட்டை
உதிர்ந்தது பொடிபொடியாக.
மழையில் கரைந்தது.
தவளைகள் பெருகின.
பாம்புகள் பெருகின.
பாம்பு சட்டைகளும்
பெருகி தொங்கின
ஹேங்கர்களில்...
பைகள் இருந்தன.
கோலிகளும்... சில
சிறுவர்களும் கூட...

எழுதியவர் : ஸ்பரிசன் (15-Apr-18, 7:16 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 76

சிறந்த கவிதைகள்

மேலே