பொல்லாத உலகம் மகளே

இந்த உலகம் மிகவும் பொல்லாதது மகளே....
சதையும் சரீரமுமாய் காமக்குழி சுகிர்தமாய்
சுணங்கறை வாயிலாய் சவப் பிண்டங்கள் உனைக் காண்கிறது.....

தன்னிலை மறந்த தந்தையும்
புணர்வான்-உனை
தறிகெட்ட நெறியற்ற தமையனும் புணர்வான்
சொந்தமென்று சூழ்ந்திடும் சூது கள்ளங்களும்
சூழல் சாதகமாயின் உன் சூல்வழியை ருசித்திடும்

மகளே.....
அண்மையில் நடந்த அதிர்ச்சியூட்டும் செய்தி இது
எட்டுவயது எட்டிய இளம்பிறை ஒன்றை
எட்டுகோர மிருகங்கள் வன்புணர்ந்த செய்தி
ஈரெட்டுத் திக்கும் கானகத் தீயாய் பரவியது...
நாற்று நசிந்து நாறிப் பிணமாய் கிடந்தது
நாலைந்து நாட்களாய் தலையங்கமாகித் திரியுது

வாலிப வாஞ்சை தூண்டல்களா- இது
வக்கிர விரச உணர்வுகளா..?
இல்லை இல்லை இதுமட்டுமில்லை.....
ஊனிலும் உதிரத்திலும் உரமேறிய மதவெறி

சாதிமத வெறிகளுக்கும் நீயே பலியாவாய்
சாமிகள் லீலைகளுக்கும் நீயே பலியாவாய்
பரலோக தெய்வங்கள் பார்வையாளராய் இருந்து
பாவிகளுக்கு மட்டுமே அருள் பாலிக்கும்

கடுமையாய் சட்டங்கள் திருத்தப்பட்டு
வன்புணர் மிருகங்களை நாற்சந்தியில் நிறுத்தி
குருதி கொப்பளிக்க குறியறுப்புச் செய்தால்
அச்சமின்றி மகளே நீ வீதியில் உலவலாம்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (16-Apr-18, 10:49 am)
பார்வை : 103

மேலே