காஷ்மீரத்துக் கண்ணம்மா
கண்ணே ஆஷிபா
காஷ்மீரத்துக் கண்ணம்மா
எதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறாய்
இன்னும் நீ ??
எட்டு வயது உடலுக்குள் சிறைப்பட்டு
சிதைக்கப் பட்ட கதியற்ற சிறுபெண் இல்லை
இனி நீ ...
அகண்ட பிரபஞ்சத்தில் இணைந்து விட்ட
எல்லையில்லா சக்தி நீ ....
உன்னைத் துடிக்க வைத்த கயவர்களின்
தொடை பிளக்க எந்த
பீமனும் இங்கில்லை கண்ணே
கண்ணீர் சிந்தி
அறிக்கை விட்டு
குரல் எழுப்பி
விதம் விதமாய் இரக்கம் காட்டும்
எங்களையா நம்புகிறாய் நீ?
வழக்கமான ஒன்றுதானே கண்ணம்மா ?
உன் அக்கா தங்கைகள் எத்தனையோ பேரைக்
கயவர்கள் கையிலே காவு கொடுத்து விட்டுக்
கண்ணீர்க் கவிதைகளை சமர்ப்பித்து விட்டு
மறந்து விடுவோம் அடுத்த வன்மரணம் நிகழும் வரை
இங்கு கோனும் சரியில்லை
குடியும் சரியில்லை
உனக்கான நியாயத்தை நீயே தேடு
ஐம்பூதங்களின் துணை கொண்டு
சுனாமியாய்
சூறைக்காற்றாய்
பெரு நெருப்பாய்
கொடும் நோயாய்
உன்வலியின் விஸ்தீரணம் புரியும்
அளவிற்கு பழி தீர் ஆஷிபா ..
உன்னைத் தீண்டிய மிருகங்களை
வதைத்து வதம்செய் கண்ணம்மா ...
உன் மரணத்தைப் பாடமாக்கு.....