இப்படியே விட்டு விடு

இப்படியே விட்டு விடு என்னை


காதலென என்மீது நீ
உருகி வழிவது அமுதமழையல்ல
அமிலமழை
வெந்துத்தணிய நானொன்றும் அக்னிகுஞ்சல்ல
வண்ணத்துப்பூச்சி....

நீ கனவில் கரம்கோர்த்து உணர்வில் உறவாடி
இமைமூடி இல்லறம் நடத்துகிறாய்
இனியேனும் என்னை நிஜத்தோடு வாழவிடு

அன்பெனும் எண்ணத்தில்
என்இதயத்தை
நீ கிழித்துப் போடுவதும்
நான் தையல் போடுவதும்மாய்

இனி நீ கிழித்துப் போட இடமுமில்லை
தையல் போடவழியுமில்லை...

விலங்கிட்டாய் மகிழ்ந்தேன்
விலங்கானாய் பயந்தேன்....

தேடித்தவிப்பாய்
பேசிவதைப்பாய்
உயிரோடு
சமைப்பாய்
ரணத்தோடு சுவைப்பாய்
அதையும் காதலென்றே
உரைப்பாய்....


அத்திப்பூத்ததென்று
அகம் ம்கிழ்ந்தேன்
அதில் அரளி காய்த்தப்போது
அதிர்ந்து நின்றேன்
விஷமென்று தெரிந்தும் விரும்பி உண்டேன்
உன்னை விடமுடியாமல் தானேடா
உயிர் செத்தும் வாழ்ந்தேன்


தலைக்கோதி விழிநீர் துடைத்தாய்
என் புதிய உலகை
புன்னகையால் படைத்தாய்
அதை ஏனடா
நீயே உடைத்தாய்?

பிடிவாதங்களின் பிடியில் சீக்கி பிரித்துதிர்ந்த பிரியங்கள் நாம்
உதிர்ந்த ஒவ்வொரு துகளிலிருந்தும்
மீண்டும் உயிர்ப்பெற்றெழ நாம் தேவர்களுமல்ல
அரக்கர்களுமல்ல

இப்படியே விட்டுவிடு என்னை

எழுதியவர் : இ.பாலாதேவி (24-Apr-18, 4:00 pm)
Tanglish : ippadiye vittu vidu
பார்வை : 834

மேலே