அவனும் நானும்-அத்தியாயம்-05
....அவனும் நானும்....
அத்தியாயம் : 05
அன்று ஓர் வெள்ளிக்கிழமை நாள் என்பதால் வழமை போலவே அம்மன் கோவிலுக்குச் செல்வதற்காய் பூஜைப் பொருட்களைச் சரிபார்த்துக் கொண்டிருந்தார் சீதா...அதைப் பார்த்தவாறே படிகளில் இறங்கி வந்தவன்,தந்தையிடம்...
"இன்னைக்கு அவங்களை நானே கோயில்ல விட்டிறேன்...வெளிய காரில்ல வெயிட் பண்றேன்..தயாரானதும் வரச் சொல்லுங்க..."என்றவாறே வெளியே சென்றுவிட்டான்...ஆனால் அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த ராம் சீதா இருவருக்குமே தங்கள் காதுகளையே ஓர் நிமிடம் நம்ப முடியவில்லை...
கார்த்திக்கும் சிறுவயதிலிருந்தே சீதாவோடுஅந்த அம்மன் கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டவன்தான்..ஆனால் அவன் மொத்தமாகவே மாறிய பின் அங்கு செல்வதையுமே நிறுத்தியிருந்தான்...அதிலும் இத்தனை வருடங்களாய் தாயோடு முகம் கொடுத்தே பேசாதவன்,இன்று அவனாகவே வந்து கோயிலில் விட்டுவிடுவதாகச் சொன்னதும் சீதாவிற்கு மயக்கமே வந்துவிட்டது...
அவனில் தோன்றிய இந்த சிறிய மாற்றமே அவரிற்கு அவன் பழையது போலவே மாறிவிடுவான் என்ற நம்பிக்கையைத் தர அமைதியாகச் சென்று அவனது காரினில் ஏறிக் கொண்டார்...கோவிலில் அவரைக் கொண்டுவந்து விட்டதுமே அக் கோவிலை நிமிர்ந்து ஓர்வித ஏக்கத்தோடு பார்த்தவன்,தரிசனம் முடிந்ததும் தனக்கு அழைப்பெடுக்கச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டான்...ஆனால் அதையும் அவன் எங்கேயோ பார்வையைப் பதித்தவாறுதான் சொன்னான்...இருந்தும் அவனில் தோன்றிய இந்தவொரு மாற்றமே சீதாவிற்கு அப்போதைக்குப் போதுமானதாக இருந்தது...
அவன் கூடிய விரைவில் தன் பழைய கிருஷ்ணாவாக மாறிவிட வேண்டுமென்று வேண்டிக் கொண்டவாறே கோவில் படிகளில் ஏற ஆரம்பித்தார்...நூறு படிகளைக் கடந்தால்தான் சக்திவாய்ந்த அந்த அம்மனின் தரிசனத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்...வயதின் காரணமாக மெது மெதுவாகவே படிகளில் ஏறிக்கொண்டிருந்தவரின் கால் ஒருகட்டத்தில் இடறவும் தன்னைச் சமநிலைப்படுத்திக் கொண்டு ஓரமாய் நின்றவர்,பூஜைத் தட்டினைக் கரங்களில் இருந்து தவறவிட்டுவிட்டார்...ஆனால் அத் தட்டு கீழே விழும் முன்னதாகவே இரு கரங்கள் அதைத் தாங்கிப் பிடித்துக் கொண்டன...
"ரொம்ப நன்றிம்மா...ஒரு நிமிசம் மனசு பதறிடுச்சு..."
அவரின் நன்றியைப் புன்னகையோடு ஏற்றுக் கொண்டவள்,சீதா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவரது தட்டினையும் தானே கொண்டுவருவதாகக் கூறி அவருடன் இணைந்தே படிகளில் ஏறினாள்...நூறு படிகளைக் கடந்து அம்மனைத் தரிசித்து முடிக்கும் வரை இருவரும் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை...ஆனாலும் அவளிடம் தென்பட்ட அந்த அமைதியான அழகு சீதாவிற்கு மிகவுமே பிடித்துப் போய்விட்டது...
இங்கே கொஃபி சொப்பில் அஸ்வின்னோ ஸ்ருதியின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அவள் முன்னே யோசனையோடு அமர்ந்திருந்தான்...
ஸ்ருதியும் அஸ்வின்னும் கல்லூரிக் காலத்திலிருந்தே ஒருவரை ஒருவர் நேசித்துக் கொண்டிருக்கிறார்கள்...அவர்களிருவரையும் தவிர அவர்களது காதல் வேறு யாருக்குமே தெரிந்திருக்கவில்லை...அவ்வளவு இரகசியமாய் அவர்களது காதலைப் பேணிப்பாதுகாத்துக் கொண்டு வருகிறார்கள்...
அவர்களது காதலை மறைத்து வைக்க காரணமும் இருந்தது..ஸ்ருதியின் வீட்டில் அவர்கள் காதல் தெரிந்தாலோ உடனேயே கல்யாணம் பண்ணிக்கொள்ளென்று சொல்வார்கள்...
ஆனால் அஸ்வின்னோ கீர்த்தனா திருமணம் செய்து கொள்ளும் வரையிலும் தன் திருமணம் தொடர்பில் சிந்தித்துப் பார்க்கக் கூட தயாரில்லாதவனாய் இருந்தான்...ஸ்ருதியாலும் வீட்டில் இதற்குப்பின்னும் திருமணத்தைத் தள்ளிப் போட முடியவில்லை...
அவளுக்கோ இன்னும் மூன்று மாதங்களில் இருபத்தொன்பது வயதாகின்றது...தங்களின் ஒரே மகள் கல்யாணத்தைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வருவதில் அவளது வீட்டிலும் தினம் தினம் பிரச்சினைதான்...அஸ்வின் சிங்கப்பூர் சென்ற இந்த இரண்டு வருட காலத்தையும் மேலே படிக்கப்போவதாகச் சொல்லியே வீட்டில் சமாளித்திருந்தாள்...ஆனால் இப்போது மேற்படிப்பும் முடிந்துவிட்ட நிலையில் மீண்டும் அவளது வீட்டில் எழுந்த கல்யாணப் பேச்சிற்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பதென்று தெரியாத நிலையினில்தான் அவளும் அவன் முன்னே அமர்ந்திருந்தாள்...
"அஸ்வின் இப்படியே அமைதியா இருந்தால் என்ன அர்த்தம்..??..இதுக்கு மேலையும் என்னால கல்யாணத்தை தள்ளிப்போட முடியாது...அப்பாவும் அம்மாவும் இதுவரைக்கும் எனக்கு எதிலையுமே குறை வைச்சதில்லை...ஆனால் நான் அவங்களுக்கு இத்தனை வருசத்தில் அவங்க கேட்குற சந்தோசத்தைக் கூட கொடுக்க முடியாம அவங்களை மேலும் மேலும் கஸ்டப்படுத்திட்டே இருக்கேன்..."
"இரண்டு வருசத்துக்கப்புறம் நல்ல முடிவா சொல்றேன்னு சொன்னீங்க...ஆனால் இப்பவும் அதே மௌனத்தோடயே இருக்கீங்க..??.."
"உன்னோட நிலைமை எனக்குப் புரியாமலில்லை ஸ்ருதி...ஆனால் கீர்த்தனா கல்யாணமே வேண்டாம்னு இருக்கும் போது,என்னால மட்டும் எப்படி என்னோட கல்யாணத்தைப்பத்தி யோசிக்க முடியும்,சொல்லு..??.."
"அஸ்வின் உங்களுக்கு எப்படி உங்களோட தங்கச்சி கல்யாணத்துக்கு சம்மதிக்கலைன்னு வேதனையாய் இருக்குமோ,அதே வருத்தமும் வேதனையும்தானே என்னோட அப்பாக்கும் அம்மாக்கும் இருக்கும்...அதை ஏன் நீங்க புரிஞ்சுக்க மாட்டேன் என்குறீங்க...??..."
அவளின் ஆதங்கம் அவனிற்குப் புரியாமலில்லை..,ஆனால் கீர்த்தனாவைத் தனியாக விட்டுவிட்டு அவனுக்கென்று ஓர் வாழ்க்கையை சுயநலமாய் அமைத்துக் கொள்ள அவன் விரும்பவில்லை...ஏற்கனவே இக்கட்டான நிலையில் தங்கையின் மேலே மிகப்பெரிய பொறுப்பினைப் போட்டுவிட்டு தான் தன் குறிக்கோளிலேயே கவனமாக இருந்துவிட்டோமோ என்ற குற்றவுணர்ச்சி அவனை வாட்டிக் கொண்டிருக்கின்றது...அதே நேரத்தில் ஸ்ருதிபடும் வேதனையையும் அவனால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை...
அவளது கரத்தின் மேல் தனது கரத்தினை வைத்து அழுத்திக் கொண்டவன்,
"எனக்காக இத்தனை வருசம் நீ பொறுமையாக் காத்திட்டிருந்த,இன்னும் ஒரே ஒரு மாசம் பொறுத்துக்கோ..அதுக்குள்ள எப்படியாச்சும் கீர்த்துவை சம்மதிக்க வைச்சிடுறேன்...அதுக்கப்புறம் நானே உன் அப்பா அம்மாகிட்ட வந்து பேசுறேன்...."
"இத்தனை வருசத்தில மாறாத உங்க தங்கையோட மனசு...இந்த ஒரு மாசத்தில மாறிடும்னு நினைக்குறீங்களா அஸ்வின்...??.."
"மாத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கு ஸ்ருதி...ஆரம்பத்தில அப்பா அம்மாவோட திடீர் இறப்பு,நிறுவனத்தில ஏற்பட்டிருந்த பிரச்சினைகளால அவள் கல்யாணத்தை மறுத்திருக்கலாம்...ஆனால் இப்போதான் எல்லாமே சரியாயிடுச்சே...இனி அவளைச் சம்மதிக்க வைக்குறதில அவ்வளவு கஸ்டம் இருக்காதுன்னுதான் நினைக்குறேன்.."
"ம்ம்...நீங்க சொல்ற மாதிரியே நடந்திட்டால் எல்லாருக்கும் எல்லாமே சரியாயிடும்..."என்றவாறே அவனது தோளில் லேசாகச் சாய்ந்து கொண்டாள்...அப்படியே அவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டவன் கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டான்...நீண்ட காலத்தின் பின்னான அந்த அணைப்பு இருவருக்குமே மனதிலிருந்த போராட்டங்களைத் தள்ளி வைத்து சிறு அமைதியை வழங்கியது எனலாம்...
அம்மனின் தரிசனத்தை முடித்துக் கொண்டு கீழே வந்த சீதாவிற்கு கார்த்திக்கிற்கு அழைப்பெடுக்க வேண்டுமென்பது நினைவிற்கு வரவும்,கைப்பையில் அலைபேசியைத் தேடனார்...ஆனால் அது அங்கே இல்லாமல் போகவும்தான் அதை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்ததை எண்ணி தன்னைத்தானே நொந்து கொண்டவர்,வேறு வழியின்றி அருகில் நின்று கொண்டிருந்தவளிடமே தொலைபேசியைக் கேட்டுப் பெற்றுக் கொண்டார்...
அவளிடமிருந்து அலைபேசியைப் பெற்று கார்த்திக்கிற்கு அழைத்தவருக்கு கிடைத்ததென்னமோ ஏமாற்றம்தான்...ரிங் போய்க்கொண்டிருந்ததே தவிர அவன் அழைப்பினை எடுக்கவில்லை...மீண்டும் மீண்டும் முயற்சித்தும் அவன் பதிலளிக்கவில்லை என்றதும்,பேரூந்திலேயே சென்று விடுவோமென்று முடிவெடுத்துக் கொண்டவர்,அவளிடமிருந்தும் விடைபெற்றுக் கொண்டார்...ஆனால் அப்போதும் அவரின் உதவிக்கு வந்தாள் அவள்...
"ஒரு நிமிசம் மா...உங்களுக்குப் பிரச்சினை இல்லைன்னா நானே உங்களை வீட்டில விட்டிடுறேனே..."
"இல்லைம்மா உனக்கெதுக்கு வீண் சிரமம்...வீடு பக்கம்தான் நான் பஸ்ஸிலேயே போயிடுவேன் மா.."
"எனக்கு எந்த சிரமமுமே இல்லை...நான் போற வழியில உங்களை விட்டிட்டுப் போகப்போறேன்...அவ்வளவுதானே..வாங்கம்மா..."
அதற்கு மேலும் அவளிடம் மறுக்கத் தோன்றாததால் அவளிடம் தன் சம்மதத்தைத் தெரிவித்துக் கொண்டார்...காரில் செல்லும் போது அவர் தனது வீட்டிற்கு வழி சொல்லிக் கொண்டே வந்ததில் அவளைப்பற்றி பெரிதாக எதுவுமே அவரால் தெரிந்து கொள்ள முடியவில்லை...முதல் சந்திப்பிலேயே அவரின் மனதைக் கவர்ந்துவிட்டவளைப்பற்றி அறிந்து கொள்ளும் ஆவல் அவரிற்கு அதிகமாகவேயிருந்தது....
வீட்டில் கொண்டுவந்து விட்டதுமே அவள் கிளம்பத் தயாராகவும்,
"வீடு வரைக்கும் வந்திட்டு உள்ள வரலைன்னா எப்படி...??..வந்து ஒரு கோப்பைத் தேநீராவது குடிச்சிட்டுப் போம்மா..."
"இல்லைம்மா..எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு...இன்னொரு நாள் கண்டிப்பாய் வாறேன்..."
வேலை இருப்பதாகச் சொல்பவளிடம் அதற்கு மேலும் வற்புறுத்தவில்லை அவர்...
"நீ தினமும் அம்மன் கோவிலுக்கு வருவியா மா...??.."
"இல்லை ஒவ்வொரு வெள்ளியும்தான் வாறது வழக்கம்...அடுத்த வெள்ளியும் உங்களைச் சந்திக்க முடிந்தால் நிச்சயமாய் உங்க வீட்டிற்கு வாறேன் மா.."என்றவாறே அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டாள்...
அவளின் கார் சென்ற திசையையே சிறிது நேரத்திற்கு பார்த்துக் கொண்டிருந்தவரிற்கு கார்த்திக்கிற்கு மிகவும் பொருத்தமான பெண்ணென்று அவரை அறியாமலேயே வாய் முணுமுணுத்துக் கொண்டது...
தொடரும்...