போட்டியில் வென்ற கவிதை

கோபாலா வா..வாவென்று..
கோலாட்டம் போடுங்கடி..!
========================
பெண்களின் கலைநயத்தைக் காணுகின்ற கலையில்
..........பெருங் கலையே கும்மியடிக்கும் கோலாட்டமாம்..!
வண்ணம் கொண்ட கழிகளிரண்டைக் கையிலேந்தி
..........வகையாய்த் தட்டியே ஒலியெழுப்புமோர் ஆட்டம்..!
எண்ணத்தை வெளிப்படுத்தும் விசேட ஒலியாய்
..........இங்குமங்கும் ஓடியாடி உல்லாசம் கொடுக்குமாம்..!
கண்ணசைவால் கவரும் இளநங்கைகள் தாங்கள்
..........கால்விரலில் உடல்தாங்குமொரு உத்தியை அறிவர்..!
கண்ணுக்குக் குளிர்ச்சிதரும் பட்டாடை உடுத்தி
..........கண்ணன் பிறந்தநாளில் கோலாட்டம் குதூகலமாம்..!
மண்ணில் அன்னவனால் பிறவி கொண்டோமென
..........மாயவனைக் கூத்தாட அழைப்பதுவும் வழக்கமாம்..!
பண்ணிசையால் பாவையர்கள் பாடுமழகைக் காண
..........பறந்தோடி வருவான் மாயப்பிரான் கண்ணனுமே..!
அண்டத்தைத் தன்னண்ணத்தில் காட்டிய பெருமாயன்
..........அகமகிழ்ந்தே ஆயகலையும் கைவர அருளுவான்..!
பண்ணிய கடுந்தவத்தால் பார்வதியின் கறுத்தமுகம்
..........பளிச்சென முகம்வெளிரப்...பலமாகக் கும்மியடி..!
வெண்ணெய் திருடுமுன் அந்தத் தாழியுடையுமாறு
..........கண்ணன் வருவதற்குமுன் கழிதட்டி ஆடுங்கடி..!
உண்ணவும் உழைக்கவும் உடல்பயிற்சி பெறவும்
..........ஓடியாடி ஒன்றாய்ப்பின்னிப் பிணைந்து கும்மியடி..!
தண்டையணிந்த நம் குதிகாலும் தரையிலூன்றாது
..........வெண்தாடி விருத்தரும் விரைந்துவரக் கும்மியடி..!
==================================================
போட்டியில் தேர்ந்தெடுக்கப் பட்டது குறித்து என்னுரை
வல்லமை மின் இதழில், இந்த வாரத்தின் (24-04-18 – 28-04-18) சிறந்த கவிதையாகவும், கவிஞராகவும் தேர்ந்தெடுத்த நடுவர் திருமதி மேகலா ராமமூர்த்தி அவர்களுக்கும், கவிதைக்குப் படத்தை எடுத்த திருமிகு ஷாமினிக்கும், படக்குழுமத்தின் ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பனுக்கும், ஆசிரியர் திருமதி பவளசங்கரிக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இந்த வாரத்தில் வெளியிடப்பட்ட படம், தமிழ்நாட்டுப் பாரம்பரிய கிராமியக்கலைக்கு பெருமைசேர்க்குமாறு கவிதை எழுதுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.
பெண்கள் பலர் கூடி ஓரிடத்தில் வட்டமாகப் பாடிக்கொண்டே தங்கள் கைகளில் வண்ணம் தீட்டிய கழிகளைத் தட்டிக்கொண்டு, ,ஆடும் ஒருவகை நடனம்தான் கோலாட்டம். தொன்று தொட்டு வரும் தமிழ்நாட்டுப் பாரம்பரியக் கலைகளில் ஒன்று. இருபுறமாக சரிசமமாக நின்று இசைக்குத் தக்கவாறு தன் கைகளைத் தட்டி கால்களையும் இடுப்பையும், தலையையும் அழகுற அசைத்து, குனிந்தும் நிமிர்ந்தும் கூட்டாக ஆடுமொரு நடனத்தை தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் இன்றும் வழக்கில் உள்ளது.
குரவை என்ற கலையில் கும்மி பிறந்ததாகவும், கோலாட்டம் என்பது பொதுவாக கண்ணன் பிறந்த நாளில் வடநாடுகளில் பரவலாகக் கொண்டாடப்படுகிறது. கண்ணனுக்கு மிகவும் விருப்பமான ஆட்டமாகவே இந்தக் கோலாட்டம் பற்றி எங்கும் தகவல் உள்ளது. கவிதையின் கடைசியில்..ஒரு வரியாக..
பண்ணிய கடுந்தவத்தால் பார்வதியின் கறுத்தமுகம்
………பளிச்சென முகம்வெளிரப்…பலமாகக் கும்மியடி..!
சேர்த்திருந்தேன். அசுரருக்கும், தேவருக்கும் நடந்த போரில் தேவர்கள் வெற்றிபெற பார்வதிதேவி கடுந்தவம் புரியும்போது, அவள் முகம் கருத்ததாகவும், மீண்டும் மகேஸ்வரியின் முகம் ஒளிபெற, அங்கே தேவருலகப் பெண்கள் கோலாட்டமாடி மகிழ்வித்து, பார்வதியின் முகம் மலரச் செய்ததாகவும் ஒரு வரலாறு உள்ளது.
சிறந்த கவிதையாக இது தேர்வுற்றதால், நம் தமிழர்களின் பெருமை சொல்லும் நடனக்கலைக்கு இது வெகுமதியாக அமையும்.
அன்புடன் பெருவை பார்த்தசாரதி