நாஞ்சில் ஓருமைகள் 6
நாஞ்சில் ஓருமைகள்.
தாளு எடுப்பு
கும்பப்பூ அறுப்பு இந்த வருசம் கொஞ்சம் பிந்தீற்று. மாசி மித்தையில அறுக்கணும் தொழிப்பட்டம் வெள்ளமில்லாம தள்ளுனதால நடவு தாமசமாயி அல்பசி விசு கழிஞ்சு தானே ஆச்சு.
எல்லா வயலறுப்பும் முடிஞ்சுற்று. வருசப்பொறப்புக்கு மின்னகூட்டி பள்ளிகூடம் முழாண்டு அவதி விட்டாச்சு.
இனிம கொண்டாட்டந்தானே.
செறமடத்து அத்தை வீட்டுக்கு போலாம். அத்தான்மாருகளோட முக்கடலணைக்கு போலாம். சானல் கரை நீல மாங்காயி வெள்ளரி மாங்காய களவாண்டு திங்கலாம்.
பழையாத்து குட்டித்தோப்பு குளித்துறையில பகலு முச்சூடும் ஆத்துக்க அகத்த கெடக்கலாம்.
கீழ மலைக்கு போயி கிளாக்கா பறிக்கலாம்.
கலியாண பொத்தை புலிப்பொடையில பொங்கி திங்கலாம்.
சொள்ளமாடங்கோயில் ஆலமரத்தடி மணலு திட்டுல அண்ணாமாரு கபடி ஆடையில விழுதுல நாம ஆடலாம்.
இதுக்கெடையில பெரிய கோயிலு திருலா. பத்து நாளும் கொண்டாட்டம்லா.
சரி செரி நம்மட விசயத்துக்கு வாறேன்.
இந்த அவதில சஞ்சாயிகா வுல பணம் கெட்ட நெறைய சேக்கணும். நம்மட சேக்காளிகோ எல்லாம் தாளு பொறக்க போறா. நானும் போட்டுமான்னு கேட்டா அம்மை ஏசுவாளே.
கண்ணை தப்பி வந்து அனந்தன் பொரவில கிட்டுனன் மகேசு லெச்சுமணன் இன்னும் நாலஞ்சு பேரு நம்மட கூட்டாளிக தாளு பொறக்கிற்று இருக்கத பாத்தேன்.
"லே நீ வராத மக்கா உங்கய்யாட்ட ஏச்சு வாங்க முடியாது" ங்கான் கிட்டுனன்.
நான் யாராம் வந்தா நான் ஒளிச்சிருகேன்டே ன்னு சொல்லிற்று அவ்வோ கூட தாளு புடுங்க ஆரம்பிக்கேன்.
எம்மா ஓரோரு மூடு தாளும் புடுங்க ஏலாம எவ்வளவு தண்டியா இருக்கு .
காலில நண்டுகோ உண்டாக்கின கரடுகட்டி தட்டுகே, நல்ல வலிக்கே.
நிமுந்து ரெண்டடி நடந்தா என் நிக்கருள்ள தாளுகோ குத்துகே.
எனக்கு ஏலமாட்டக்கு தொடைக்கு பொறத்த தாளு கிழிச்சு காந்தல் எடுக்க ஆரம்பிச்சுற்று. வெயிலு வேற ஏறுகு .கையும் கடுக்க தொடங்கீற்று. நானும் விட்டுற்று ஓடிரலாமா இருக்கையில தான் தூரத்தில பெரியப்பா தலை தெரிஞ்சு. முத்து தான் சொன்னா "ஏடே உங்கப் பெரிப்பா வாரேருன்னு"
எம்மாடே தப்பிச்சிற்றோம் ன்னு நம்பியாத்து தோப்புக்கு அகம் போயி ஒளிக்கேன்.