அக்காவும் உண்டியலும்
உண்டியல்
90களில் பிறந்தவர்களின் வங்கி
என் அக்காவும் ஒரு உண்டியல் வைத்திருந்தாள்
அந்த வங்கியில்
ஒரு கொள்ளை சம்பவம் நடந்தது
நானே அந்த கொள்ளைக்காரன்
அவள் தமிழ் புத்தகத்தில் உள்ள
ஒரு துணைப் பாடத்தை
பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் சேர்த்து
உரக்க படித்துக் கொண்டிருந்தாள்
“அக்கா பந்து வாங்க வேண்டும்” என்று
முறைப்படி கேட்டேன்
தரவில்லை
உண்டியல் அருகே சென்றேன்
ஆஹா என்ன கனம்
எப்போதும் துடைப்பத்தில் இருந்து
எடுத்து வரும் ஒரு குச்சி ஆயுதமாகும்
ஒவ்வொரு நாணயமாக விழுந்தது
அதிலொரு நாணயம்
கீழே விழுந்து காட்டிக் கொடுத்துவிட்டது
வெளியே பார்த்தேன்
அவள் படித்துக் கொண்டே இருந்தாள்
மீண்டும் சம்பவத்தில்
தீவிரமாக பணியாற்றினேன்
ஒரு ஐந்து ரூபாய் நாணயம்
வராமல் மாட்டிக்கொண்டது
திடீரென ஒரு சீப்பு
என் முகத்தருகே வந்தது
எனக்கோ பேரானந்தம்!
சீப்புடன் “இத யூஸ் பண்ணுடா வரும்”
என்ற குரலும் வந்தது
“அக்கா…..!”
பிறகென்ன அடி உதை தான் 😂