நாஞ்சில் ஓருமைகள் 9

நாஞ்சில் ஓருமைகள்.


தை பொறந்தா வழி பொறக்கும் ன்னு சொலவடை சொல்லுவா ஆச்சி. ஆமா இனி எல்லா சனியாச்ச ஞாயிறாச்ச விடியம்பற பல்லே தேய்க்காமே பயினி குடிக்கலாம்லா.

ஊரம்மன் கோயிலு கோணம் கீழமல தாவரத்துல இருக்குல்லா அத அடுப்பிச்சு தான பனைமரங்கோ நெறைய இருக்கு.

நம்ம களத்து சோலி பாக்க காணி பாட்டா கிட்ட அப்பா சனியும் ஞாயிறும் பயினி கொண்டாந்து குடுக்க சொல்லியிருக்காள்லா அதனாலே தவறாமெ பயினி கெடைக்கும். நாங்கோ குடிச்சிற்று மிச்சமிருக்க பயினிய அம்மை ஆப்பமாவுக்கு எடுப்பா. அதுனால திங்களாச்ச தீர்ச்சயா ஆப்பமும் மசலாகறியும் தான்.

பயக்கோ நாங்க பயினி குடிக்க மலைக்கு போகாண்டான்னு அப்பா ஏம்மா சொல்லுகான்னு கேட்டதுக்கு அம்மையும் பழமொழி தான் சொன்னா. பய்ய தின்னா பனையும் திங்கலாண்டே. ஆனா நீ பனைக்கு கீழே பாலே குடிச்சாலும் கள்ளுதான் குடிச்சேன் சொல்லிர கூடாது ல்லா மக்ளே அதான் அப்பா வீட்டுக்கு பயினி வருத்தி தாரா ன்னு சொன்னா.

சரிசரின்னு கேட்டுகிட்டேன். இரண்டு வாரமா தடஸ்தம் இல்லாம காணிபாட்டா பயினி கொண்டாந்தேரு . நான் தம்பி மாரு மச்சினம்பிள்ளை அக்காமாரு எல்லாமா பத்து பதினோரு உருப்படில்லா, நம்மட வரில வரையில ஒரு செம்பு தழும்பு காலே வரமாட்டக்கு. இது காணுமா எனக்கு என்ன செய்யன்னு ஆலோசனை பண்ணுனேன்.


அன்னைக்கு ஞாயிறாச்ச அப்பா தென்கால் பத்து வயிலுகள பாத்திற்று எறச்சி எடுத்திற்று வீடு வாரதுக்கு ஒம்பது மணிக்கு மேல ஆகும். நான் தம்பி மாருகோ மச்சினம்பிள்ளை யெங் சேக்காளி முருகன் எல்லாத்தையும் கூப்பிட்டேன். அம்மையிற்ற காணிபாட்டாவை எதித்தால பாத்தா பயினிய வாங்கிற்று வாரேன் இல்லேன்னா கீழ பத்துக்கு போயி பயினி குடிச்சிற்று வாரோம்ன்னு சொல்ல அம்மை ஏசிற்றே சின்ன மாணிக்க கூத்துதான் பாத்து போயிற்று வா ன்னா.

நாங்க சானலு அடுப்பிச்ச பனமரங்களை பாத்து விளைக்க அகத்தே போறோம் வழியிலே யேம்போ இங்க வாரையோ அப்பா பயினி வாங்கிற்று வர ஆள அனுப்பலயா அஞ்சாறு வேரு கேக்கா.

நான்தான் ரெண்டு பட்டை பயினி குடிக்க திட்டம் போட்டுல்லா வந்திருக்கேன்.
யேதேதோ சமானம் சொல்லி சமாளிச்சு வாறேன்.

அந்தா நம்மட சிலுவைபாட்டா பயினி எறக்கிற்று இருக்கேரே.

அவரு பனைல இருந்திட்டே மக்ளே இஞ்ச யேன் வாறே உங்க ஐயாக்க வர்த்தமானம் தாங்க ஏலாதே. யென்னையுமில்லா ஏசுவேரு ன்னு சொல்லிற்றே ஓடியாங்கடே ன்னு கூப்பிட்டேரு.
நாங்க அஞ்சுபேரும் அவருகிட்ட போறோம்.

இதெல்லாம் மரத்த விட்டு எறங்காமலே கேக்கேரு. அடிப்பிச்சு போகயில ரெத்தின அண்ணன் நாலஞ்சு கலயத்தில பயினியும் ஓலைப்பட்டையுமா இருக்கான்.

ஏடே புள்ளைகளுக்கு பயினி குடுங்கேரு சிலுவை பாட்டா. அந்த அண்ணனும் கலயத்தில இருந்த பயினிய எல்லாருக்கும் தேனீச்ச பூச்சி வண்டுகளை அரிச்சிற்று பட்டையில ஊத்தி தாரான். அமிர்தமா இருந்து ஆளுக்கு ரெண்டோ மூணோ பட்டை பயினி வாங்கி குடிக்கோம். தம்பிக்க தொண்டை யில தேனீச்ச போயிற்று .அவன் அழுது திருதூளி ஆக்கி குளத்து வெள்ளத்த குடிச்சம் பொறவு சரியாச்சு. நான் வெங்கல வாளி நிறைய பயினி எடுத்து வெச்சாச்சு. ரெத்தினம் அண்ணன் சக்கரம் தாடேன்னு கேட்டான் . உடனே பாட்டா ஏடே யாருற்ற என்னத்த கேக்கணும் தெரியாதாலே ன்னு அவனை ஏசிற்று மக்களே நீ செணம் வீடு போணும் உங்கய்யாற்ற நான் சக்கரம் வாங்கிக்காம் . பயினி கொள்ளாமா. ஐயமா ன்னு கேட்டேரு. நானும் தலைய நல்லாருந்துன்னு ஆட்டுகேன்.

நாங்க நடந்து வீடு வாறதுக்குள்ள அப்பா வீட்டுக்கு வந்துற்றா. எங்களுக்கு அஞ்சு வேருக்கும் தலைக் கெறக்கமா இருக்கு. அப்பா யேன்கிட்ட எத்தற பட்டை குடிச்ச மக்கா ன்னு கேட்டா நான் மூணு குடிச்சமில்லா ங்கேன். சரி எல்லாரும் அங்ஙன மங்களா வில கொஞ்ச நேரம் படுங்கோ யென்னா ன்னு சொன்னா.

நான் போயி படுத்தவன் மதியம் சாப்பாட்டு க்கு அம்மை எழுப்பி தான் எந்திச்சேன்.

பொறவு தான் தெரிஞ்சது நாங்க குடிச்சது தனி பயினி.
அக்கானி(சுண்ணாம்பு பயினி) இல்லேன்னு.

எழுதியவர் : சிவோஹம் சுப்பிரமணியன் தா (6-May-18, 6:50 am)
பார்வை : 103

மேலே