முதுமொழிக் காஞ்சி 64
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
கால மறியாதோன் கையுறல் பொய். 4
- பொய்ப் பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், காலமறிந்து முயலாதோன் கருமமுடிதல் பொய்.
கையுறல் - கை செய்கை, கருமம். உறல் - அடைதல், பெறுதல் - செய்கையின் பலனைப் பெறுதல்.
பதவுரை:
காலம் அறியாதோன் - ஒரு காரியத்தைச் செய்யலுற்று அதற்குரிய காலத்தை அறியாதவன், கையுறல் – காரிய சித்தியடைதல், பொய் - பொய்யாம்.
உரிய காலத்தில் செய்யத் தொடங்கிய காரியம் கைகூடுவது நிச்சயம்.
அருவினை யென்ப உளவோ கருவியாற்
கால மறிந்து செயின். 483 காலமறிதல்
செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?