ஆடவல்லான்-----------------------------------தமிழ் இணையக் கல்விக்கழகம்

தமிழகம் தோற்றுவித்த சிறந்த கலைப் படைப்புகளில் "ஆடவல்ல பெருமானாக - நடராஜ மூர்த்தியாக" உள்ள உருவே உலகோர் அனைவரின் கருத்தையும் கவர்ந்திருக்கிறது. நடராஜ உருவிலே வீசி எடுத்த பாதம்’ என்றும், ‘குஞ்சித திருவடி என்றும் சதுர நடம்’ என்றும் பல்வேறு தாண்டவங்கள் உண்டு. இவை அனைத்திலும் தில்லையில் ஆடுகின்ற 'ஆனந்தத் தாண்டவம்' என்னும் ஆடவல்லானி அமைதியே மிகவும் வனப்புடையது. இவ்வுருவைக் கண்டே உலகம் வியக்கிறது. ஆனந்தத் தாண்டவம் புரியும் ஆடவல்ல பெருமானின் செப்புத்திருமேனி இல்லாத கோயிலே தென்னகத்தில் இல்லை. இவ்வுருவம் பராந்தக சோழனுடைய காலத்திலிருந்துதான் காணப்படுகிறது என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அப்பர் பெருமான் காலத்திலிருந்தே இவ்வுருவம் சிறந்து விளங்கியது என்று மற்றும் பிறர் குறிப்பர். எப்படியிருப்பினும் தமிழ்நாட்டுக் கோயில்களில் காணப்படும் ஆடவல்ல பெருமானின் அற்புதத் திருமேனிகளை ஆயிரக்கணக்கில் செய்து அகம் மகிழ்ந்தது தமிழகம்.

உத்தமசோழனும், அவரது தேவியாரும் பல செப்பு உருவங்களைச் செய்து கோயில்களுக்கு அளித்திருக்கின்றனர். தமிழகமே வியக்கும் வண்ணம் தஞ்சையில் பெருங்கோயிலைத் தோற்றுவித்த "இராஜராஜப் பெருந்தகை” பல சிறந்த தெய்வ உருவங்களை செம்பில் வடித்து அளித்திருக்கிறானர். உருவங்களுடைய அமைதியைத் தெளிவாகக் கல்வெட்டிலும் குறித்து வைத்திருக்கிறானர். இவ்வாறு அளிக்கப்பட்ட பல செப்பு உருவங்களைத் தஞ்சைப் பெருங்கோயிற் கல்வெட்டுகள் பல குறிக்கின்றன. உருவங்களின் அமைதியை எவ்வளவு சிறப்பாகக் கல்வெட்டில் குறித்துள்ளனர் என்பதற்குக் கீழ் உள்ள கல்வெட்டு சான்று கூறும்.

"கீழ் கிடந்த முயலகனோடும் கூட பாதாதி கேசாந்தம் முக்காலே அரைக்கால் முழு உசரமும் பூரீஹஸ்தம் நாலும் ஜடைமேல் கங்கா பட்டாரகியும், ஜடை ஒன்பதும் பூமாலை ஏழும் உடைய கனமாக எழுந்தருளுவித்த ஆடவல்லார் திருமேனி ஒன்று: ரத்தின நியாசம் செய்து இவர் எழுந்தருளி நின்ற மூவிரல் உசரமுடைய பத்மம் ஒனர்று: ஐவிரல் உசரத்தில் அரைமுழ நீளத்து பதிற்றுவிரல் அகலமுடைய பீடம்" என்பதாகும் அக்கல்வெட்டு.

இராஜராஜன் காலத்தில் திருவெண்காடு கோயிலில் பல அழகிய செப்பு உருவங்கள் செய்து வைக்கப்பட்டன. அவற்றில் சில இப்போது கிடைத்துள்ளன. ஏறு ஊரும் பெருமான்' ஆன விருஷவாகன தேவர் சிலையும், அவரின் தேவி உமா பரமேச்வரி சிலையும் மிகச்சிறந்த அழகுடையவை. சிறந்த தமிழகக் கலைஞனால் தோற்றுவிக்கப் பட்டவை. இதுதவிர மலைமகள் மணவாளன், பிச்சை உகக்கும் பெருமான்', 'கரிய கஞ்சுகண் ஆன வைரவன்', 'சண்டேசன்", ஆடவல்லான்', 'வெண்காட்டில் உறையும் பெண் காட்டும் உருவான்' முதலிய உருவங்களும் அங்கு கிடைத்துள்ளன. அவற்றில் பல கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன. இவை இராஜராஜன், அவன் மகன் முதல் இராஜேந்திரன் அவன் மகன் முதல் இராஜாதிராஜன் ஆகிய மன்னர்களின் காலத்தில் செய்தளிக்கப்பட்டவை. இராஜேந்திர சோழன் தோற்றுவித்த கங்கைகொண்டசோழபுரத்துப் பெருங்கோயிலில் முருகப்பெருமானுடைய செப்புச் சிலை ஒன்று உள்ளது. அது இராஜேந்திர சோழன் காலத்தில் செய்தளிக்கப்பட்டது. இதுபோன்று பின்னர் வந்த சோழப் பேரரசர்களும் செப்புத் திருமேனிகளைச் செய்துள்ளனர். இதன் பின்னர் ஏராளமான செப்பு உருவங்கள் செய்தளிக்கப்பட்ட போதிலும் அவை அவ்வளவு எழில் வாய்ந்தவை அல்ல.

எழுதியவர் : (17-May-18, 5:27 am)
பார்வை : 18

மேலே