நம்பிக்கை மனிதர்கள் 1- நர்த்தகி நட்ராஜ்

நர்த்தகி நடராஜ்!!!


மதுரையில் பிறந்த இவர் , தன்னை நிலைநிறுத்த இடையறாது போராட்டங்களை சந்தித்து தாண்டி வந்த சாதனையாளர் .

தனது பாலினம் பற்றிய குழப்பம் ,குடும்பத்தினரும் , சுற்றி இருந்த சமூகமும் கட்டிய எதிர்ப்பு , எதிர்கால வாழ்வைப் பற்றிய பயம் , அழுத்தம் ஆகியவற்றை தனது முன்னேற்றத்திற்கான அடித்தளமாக மாற்றிக்கொண்டவர் .

தனது ஆர்வத்தையும் , ஈடுபாட்டையும் மட்டுமே மூலதனமாக கொண்டு , இவரும் , தன்னை போலவே எண்ணம் கொண்ட இவரின் நண்பர் சக்தியும் தொடங்கிய நெடும் பயணம் அமெரிக்கா , கனடா , ஐரோப்பா என அரங்கேற்றங்களாகவும் , விருதுகளாகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது .

திரு கிட்டப்பா பிள்ளை அவர்களிடத்தில் பதினான்கு ஆண்டு காலம் பரதம் பயின்றவர் .தனது குருவிற்கு உதவியாளராக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் நான்கு ஆண்டு காலம் பணியாற்றி உள்ளார் .

மரபு மாறாத பரதநாட்டியம் என்பதை தீவிரமாக கடைபிடிக்கும் இவர் "நாயகி பவா" , " மதுர பக்தி " , "மாதுர்ய பக்தி" என பல்வேறு விதமாக அறியப்படும் நடன வகைக்கும் , கி பி 19 நூற்றாண்டில் வாழ்ந்த "தஞ்சை நால்வர்" அறிமுகப்படுத்திய அரிய முத்திரைகளுக்கும் வாழும் களஞ்சியமாக உள்ளார் .

இலக்கியங்களில் தீராத தேடல் உள்ள நர்த்தகி , சங்க இலக்கியங்கள் , தேவாரம் , திருவாசகம் , திருப்புகழ் , நாலாயிர திவ்யப் பிரபந்தம், ஆழ்வார் பாசுரங்கள் முதலியவற்றில் இருந்து தனது நாட்டியப்படைப்புக்களை உருவாக்குகிறார் .

ஒவ்வொரு படைப்புக்கும் , பாடலுக்கும் , அதன் அர்த்தங்களை , வார்த்தைகளுக்கு பின் உள்ள உணர்ச்சிகளை, பாடல் பாடப்பெற்ற சூழ்நிலைகளை புரிந்துகொள்வதற்கான மிகுந்த சிரத்தை எடுத்து படிக்கும் இவர் அரிய புத்தகங்களைக் கொண்ட சிறிய நூலகத்தையும் தன்னிடம் வைத்துள்ளார் .

"தமிழ் அமுது " , "சிவதரிசனம்" ,"சக்திதரிசனம்" , "குமாரவிஜயம்" , "அரங்கன் வைபவம்" முதலியவை இவர் உருவாக்கிய படைப்புகள் .

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம் , ஜனாதிபதி அளித்த சங்கீத நாடக அகாடமி விருது , தமிழக அரசின் கலைமாமணி , ஸ்ரீ கிருஷ்ண காண சபா அளித்த நிருத்ய சூடாமணி விருது , பிரசார் பாரதி விருது என் இவரின் திறமைக்கு சான்றாக அணிவகுத்து நிற்கின்றன இவர் வாங்கிய பட்டங்களும் , விருதுகளும் .

இவரது நடனப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் மூலம் தொடர்ந்து ஒலிக்கும் சலங்கை ஒலி இவரின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் , நிராகரிப்புகளுக்கும் பதிலாக உள்ளது .

எழுதியவர் : பாவி (19-May-18, 11:50 pm)
சேர்த்தது : பாவி
பார்வை : 681

சிறந்த கட்டுரைகள்

மேலே