மலருண்டு மணமில்லை காகிதப்பூ

மலருண்டு
மணமில்லை
காகிதப்பூ !

சிகை இல்லை
சிந்தனை உண்டு
வழுக்கைத் தலை !

கொள்கை இல்லை
கூட்டம் உண்டு
அரசியல் கட்சி !

நல்ல தமிழ் இல்லை
நாவில் நாற்றமுண்டு
நரம்பில்லா பேச்சுண்டு
தமிழ் அரசியல் மேடை !

நயத்தக்க நாகரீகம் இல்லை
தரக்குறைவான பேச்சுண்டு
தாய் , உறவுகளை பழிக்கும் வசவுண்டு
வண்ணத் தமிழ் நீகுழாய் !

ஆடிப்பாடும் ஆட்டம் இன்னும் முடியவில்லை
ஆட்டமில்லா நாற்காலியில் அரசாளும் நாட்டமுண்டு
சினிமாக் கதாநாயகர்கள் !

தெளிவான சிந்தனை இல்லை
சாதி இல்லை இல்லையென்று சொல்லி அரை நூற்றாண்டு காலம் போனதுண்டு
சாதி உண்டென்று புதிது புதிதாய் பச்சை குத்தும் பழக்கம் இப்பொழுது உண்டு
எதைச் சொன்னாலும் ஏற்று கைதட்டும் இளிச்சவாய் தமிழர்கள் உண்டு
தலைவனென தலையெடுத்திருக்கும் புதிய அரசியல் தரகர்கள் !

எழுதியவர் : கவின் சாரலன் (20-May-18, 10:20 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 122

மேலே