உணர்வாயுன் சிறப்பு

' அன்பே கடவுள் '
கடவுளா சொன்னது
இல்லை அது
திருமூலரின்
தெளிவான சிந்தனை !

' யாதும் ஊரே யாவரும் கேளீர் '
மதங்களா சொல்லியது
கணியன் பூங்குன்றனின்
கண்ணியம் அது !

' தனியொரு மனிதனுக்கு
உணவில்லை எனில் - இந்த
ஜகத்தினை அழித்திடுவோம் '
இது புனித நூல்கள் சொன்னதில்லை
மனிதத்தை நேசித்த
எட்டயபுரத்து கவிஞனின்
கோபம் அது !

' கையைப் பார்த்து - உன்
எதிர்காலத்தை தீர்மானிக்காதே
கையில்லாதவனுக்கும்
எதிர்காலம் உண்டு '
உரைத்தது உபநிடதமல்ல
அறிவியலின் புதல்வன்
அப்துல்கலாம் சொல்லியது !

அன்பையும்
ஐக்கியத்தையும்
அறச்சீற்றத்தையும்
அறிவியல் பார்வையையும்
புகட்டியவன் தமிழன்.

வந்தவர் கலாச்சாரங்களை
வழி மொழிந்து
உன்னிருப்பைத் தொலைத்து
நாடோடி வாழ்க்கையில்
அல்லல்படும் தமிழா
உணர்வாயுன் சிறப்பை.
.
மனித குலத்தின்
கருவறுக்கும்
கடவுளரையும்
அது சார்ந்த
மார்க்கங்களையும்
மோதி மிதித்திடு
மனிதம் எழுச்சிபெற
ஒன்றுபட்டு நிமிர்ந்திடு.
_/ _/ _/
காற்றுவெளி இதழிலிருந்து....

எழுதியவர் : கனகசபாபதி செல்வநேசன் (24-May-18, 4:23 pm)
பார்வை : 43

மேலே