எழு போரிடு வாழ்ந்திடு
எழு ...போரிடு ...வாழ்ந்திடு
~~~~~~~~~~~~~~~~~~~
எழுத எழுத எரியும் வரிக்குள்
வாழ்வைத் துரத்தி வாழும்
என் வீட்டுப் பிள்ளையை
உலகறியச் சுட்டு...பின்
பிணமாய் அனுப்பிய
அதிகார வர்க்கமே....
போரிடும் பாதமே ...உன்
உயிரெடுக்க போதும் ...
போகும் உயிரைப்
பிடித்து கேட்பினும்...
அடித்து கேட்பினும்
வெடித்து சொல்லும்
போரிடப் போகிறேனென்று
உயிர் காக்க சாகிறேனென்று..
அதிகாரமே...ஓயா திமிரே
உடல் பிதுங்க பணம் தின்னும்
ஒப்பற்ற வீண் பிறவிகளே...
எம் பணத்தில் எம்மை சுட்டு
எமக்கே இழப்பீடு தரும்
இணையற்ற இழி பிறவிகளே....
நச்சு காற்றில் நாசி நுழைத்து
நான்கு நாள் வாழும்...உன் படை
குறியில் நீயே சாகும் ...
வெறும் பணத்திற்கு...உன்
வீட்டைக் கொளுத்தும் மூடனே..
உம் சந்ததி எங்கே வாழும்...
நடு கடலில் பிணமாய் வீழும்...
சுடு...எங்களை சுடு...
பெரும் பணத்தின் வாசலில்
உன்னையும் சுடுகையில்
மறவாதே...மானுடத்தை...
கலவரம் என்கிறாய்... எம்
வரமே போர் களம் தான்...
ஊடகமே நாடகமாயின்
இருட்டில் இதயம் வெடிக்கும்
தூத்துக்குடி துயரத்தை...
நமதென பாராத நாம்
நாக்கைப் பிடுங்கி சாகலாம்...
தோட்டா பாய்ந்தும் வீழலாம்...
அரசியல் அறியாமை
எதற்கும் ஆயுதம் ஏந்தாமை
நிஜ வாழ்விற்கே வராமை
கோரமாய் கொல்லும்...
நம்மை..நம் பிள்ளையை...
இனி வரும் சந்ததியை...
இரக்கமின்றி வெட்டும்...
வேடிக்கை பார்க்கும் வரை...
அவர்களல்ல கொலையாளிகள்...
அவர்களோடு நாமும் தான்...
வெளி வருவோம்...
கரு காப்போம்...
உரு தருவோம்...
வழி பெறுவோம்...
ஒவ்வொரு செயலும் நேராக
வாழ்வியல் நிலையே போராக..
தாக்கும் தலையே வேறாக..
காக்கும் கலையே வேராக..
நம் மானுட விதை...
பெரும் பல்லுயிர் படை....
- காதலாரா