திகிலும் ருசிக்கும் 4

திகிலும் ருசிக்கும்...4

சின்னதாய் பதற்றம் தொற்றிக்கொண்டது, காண்பது கனவு தானா, கனவாக இருந்தால் எப்படியாவது எழுந்துவிட்டால் தேவலையே என்றெல்லாம் தோன்றியது...

ஆனால் நிஜத்தில் நின்றுகொண்டு கனவை வம்பிழுத்தால் என்ன மாறிவிட போகிறது, கரும்புகையில் வெளிச்சமும் என் தைரியமும் ஒன்றுசேர கரைந்தது...
கண்திறந்து தான் பார்த்துக்கொண்டிருக்கிறேனா என்ற சந்தேகம் எழும் அளவிற்கு சற்று நேரத்தில் கும்மிருட்டு சூழ்ந்துகொள்ள இனி நடப்பதை மோகினியே பார்த்துக்கொள்ளட்டும், எத்தனை நேரத்திற்கு தான் மனம் பதைத்து இத்தனை பீதியை தாங்கிக்கொள்வதென ஒரு முடிவுக்கு வந்தவனாய் மோகினியை காண தயாரானேன்...

மெல்ல மெல்ல மோகினி அரூபத்திலிருந்து உருவத்திற்கு வர ஆரம்பித்ததை பார்க்க எனக்கென்னவோ கனகா வயிற்றில் என் குழந்தை உருவாகியிருந்தால் இப்படி தான் மெல்ல மெல்ல கை, கால் முளைத்து முழு உயிராக ஜனித்திருக்கும் என்றெல்லாம் யோசனை வந்தது..அட என்ன இது, மோகினிக்கு என்றொரு மரியாதை இருக்கிறதல்லவா, எத்தனை தூரம் திகிலடைய வைக்க இந்த மோகினி இத்தனை முயற்சிகளையும் கையாண்டு கொண்டிருக்கையில் கனகா வயிற்று குழந்தை பத்தி புத்தி போகிறதே, இனி மோகினியை தான் முழுதாய் கவனிக்க வேண்டும் என்று புத்தியை புடனியில் அடித்து இழுத்துவந்து ஒருநிலையில் நிறுத்தினேன்...

முழுதாய் தங்க சிலை போல் கரும்புகையிலிருந்து உருவம் பெற்ற மோகினி இவளாகமட்டும் தான் இருக்க முடியும், இவளுக்கு போய் மோகினிப்பிசாசு என்றெல்லாம் பேர் வைத்ததற்கு இந்த நொடி நிச்சயம் வெட்கப்பட்டுக்கொள்ளவேண்டும் என்று ஒரு நிமிடம் தலைகுனிந்து கொண்டேன்...

மோகினியென்றால் குரூரமாக அருவருப்பாக பார்க்கவே பயங்கரமாக இருக்கும் என்று தான் நான் கேள்விப்பட்டதெல்லாம்...இப்படி பலதேவதைகளை உருக்கி ஒரே வடிவத்தில் அலுங்காமல் குலுங்காமல் வடித்துவைத்ததைப்போல் கரும்புகையிலிருந்து வெளிவரும் என தெரிந்திருந்தால் இத்தனை காலத்தை வீணடித்திருக்க மாட்டேனே...

என்ன ஒரு அழகு, என்ன ஒரு நேர்த்தி...இடுப்பில் குழந்தையை உட்காரவைத்தால் வழுக்காமல் கனகச்சிதமாக பொருந்திக்கொள்ளும்...அத்தனை சிறுத்த இடை...மை பூசாமலே மயக்கும் அகன்ற விழி..பளிங்கு போல பளபளவென மின்னும் கன்னம்...இதழை பற்றி எத்தனையோ வர்ணனை இருக்க இவள் இதழை எதற்கு ஒப்பிடவென குழம்பித்தான் போகிறேன்...இத்தனை அழகா...இதுவரை பார்த்ததில்லையே..கரும்புகையிலிருந்து வெளிவந்த காரிகை ஆயிற்றே, கருமையிலும் இத்தனை அழகிருப்பது இன்று தான் உரைக்கிறது.... பார்த்ததும் கண்ணைமட்டுமல்லாமல் மனதையும் கட்டி இழுக்கும் ரம்மியமான அழகு....மீண்டும் பார்க்கவேண்டுமென துடிக்கும் தூண்டுதல்,அத்தனையும் இவளிடம் இருக்கிறது....

அவள் அங்கங்களை காண நெஞ்சம் துடித்து கண்கள் பார்வையை திருப்ப அவளின் கழுத்திற்கு கீழே புலப்படாமல் கரும்புகை காவல் காத்தது சற்று ஏமாற்றம் தந்தது...குடுத்து வைத்தது அவ்வளவு தான்...இடை தரிசனமே இந்த ஜென்மத்திற்கு போதுமென தேற்றிக்கொண்டேன்...இத்தனை தூரம் ரசித்தாயிற்று இந்த மோகினி இன்னும் மௌனம் காப்பதேன்...இவ்வளவு நேரம் அழுத களைப்போ...என்ன தான் இருந்தாலும் பெண் ஆயிற்றே, நானே பேச்சை தொடங்குவது தான் சரிவரும் என்று குரலை உதவிக்கு அழைத்து பேச ஆரம்பித்தேன்...

யாரம்மா நீ??

கேட்டு இரண்டு நிமிடங்கள் வரையிலும் பதில் இல்லை...சரி அடுத்து எதாவது கேட்டு பார்ப்போம்....

எதற்கு இத்தனை அழுகை? தேம்பி பீறிட்டு அழும் அளவிற்கு என்ன நடந்துவிட்டது?எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லம்மா...

இந்த முறை கேட்டதும் மீண்டும் அழ ஆரம்பித்தது....

அட நீ என்னவோ மோகினி என்று நேற்றிலிருந்து பயந்து தெருத்தெருவாக நான் ஓடிக்கொண்டிருக்கிறேன், நீ என்னவோ இப்படி அழுகிறாயே, அழாமல் என்ன ஆனதென்று சொன்னால் தானே தெரியும்...

இந்த முறை அழுகை மெல்ல மெல்ல குறைந்து விசும்பலானது...சரி இனி இந்த மோகினியிடம் நேக்காக பேசி அதன் வருகையின் நோக்கத்தை தெரிந்துகொள்ளவேண்டும் என்று மனதில் திட்டம்வகுத்துக்கொண்டேன்...

நீ யார்? எங்கிருந்து வருகிறாய், என் வீட்டிற்கு எதற்காக வந்தாய்?

என் கேள்விகளில் மீதமிருந்த விசும்பலும் மறைந்து நிதானமாய் ஓர் ஆழ்மூச்சை இழுத்துக்கொண்டு என் முகத்தை ஆழ்ந்துப்பார்க்கஆரம்பித்தது....
அந்த ஆழ்ந்த பார்வையில் ஏக்கம், ஆசை..எதையோ அடைந்தே தீரவேண்டுமென்ற தீவிரமான எண்ணம்...

சில நிமிட மோனநிலைக்கு பிறகு அதன் மௌனத்தை கலைக்க மீண்டும் வார்த்தைகளை என்பக்கமிருந்தே விட வேண்டியதாயிற்று..

"ஏனம்மா, எத்தனை நேரத்துக்கு இப்படி பார்த்துக்கொண்டே இருக்க போகிறாய்?"

அதற்கும் பதிலில்லை...ஒருவேளை உருது, கன்னடம் பேசும் மோகினியோ...மொழி பிரச்சனையால் தான் மௌனமாக இருக்கிறதோ என்று தோன்றியது...

உனக்கு தமிழ் தெரியாதோ, மடையன் மாதிரி உனக்கு புரியாத மொழியால் கேள்வி கேட்டு நேரத்தை வீணடிக்கிறேனே என்று சொல்லியபடி லேசாக என் தலையில் அடித்துக்கொண்டேன்...

பதறியபடியே அவளும் தமிழால் வளர்ந்தவள் தான் என்று என் சந்தேகத்திற்கு பதில் கூறினாள் ....

சரி இப்போதாவது சொல்லேன், நீ ஏன் என் வீட்டிற்கு வந்து காபி போட்டெல்லாம் என்னை பீதியாக்கினாய்....ஒருவேளை இது உன் வீடோ, நாங்கள் குடித்தனம் வந்தது பிடிக்காமல் இதையெல்லாம் செய்துகொண்டிருக்கிறாயோ...எங்களை விரட்டி அடிக்க நீ போட்ட திட்டங்களுள் இதுவும் ஒன்றோ... பார்த்த பேய்படங்களின் கதையை சுட்டு என் சந்தேக கேள்வியாய் முன்வைத்தேன்...

அவளின் விழிகள் படபடத்து உதடுகள் துடித்தது...அவள் அசைவுகள் இதற்கான பதிலை வெளிப்படுத்திய போதும் அவளின் வார்த்தை பதிலுக்காக காத்திருந்தேன்...
சில நிமிட தவிப்பிற்கு பின் சொன்னாள் எங்களை விரட்டும் எண்ணமே அவளுக்கு இல்லை என்று...

சரி அப்படி இருக்க, இந்த மோகினி விளையாட்டெல்லாம் எதற்கு அரங்கேற்றிக்கொண்டிருக்கிறாய், உனக்கு என் வீட்டில் என்ன வேலை, உனக்கு என்ன தான் வேண்டும் இங்கு...

ஒவ்வொன்றிற்கும் யோசித்து நிதானமாக பதில் சொன்ன விதமே பிடித்துப்போனது...எப்படியாவது அவளோடு நெருங்க வேண்டுமென பேராசை பெருக்கெடுத்தது...

இப்படியொரு ஆசையா, விபரீதமென தெரிந்தும் மாற்றிக்கொள்ள மனமில்லை..

நான் கேட்டதற்கு இன்னும் பதில் சொல்லாமல் நிற்கிறாயே, எதற்காக என் வீட்டில் இருந்துகொண்டு தொல்லைகொடுக்கிறாய்..இங்கு உன்னுடைய பொருள் ஏதேனும் இருந்தால் எடுத்துக்கொண்டு கிளம்பிவிடு, என் மனைவி இரண்டொரு நாளில் வந்துவிடுவாள், அவள் நிம்மதியாக இந்தவீட்டில் நடமாட வேண்டுமென்றால் நீ தொந்தரவு தராமல் விரைவில் கிளம்ப வேண்டும்...வார்த்தையில் கொஞ்சம் கடுமை காட்டினேனே தவிர என் கண்ணுக்குள் மோகினி சென்றுவிட கூடாதென ஏக்கம் தான் இருந்தது...

என் ஏக்கம் அதற்கும் புரிந்திருக்குமோ, இல்லை அதனுடைய ஏக்கமும் இது தானோ தெரியவில்லை...

எந்த பொருளும் என்னுடையது இல்லை, எதையும் எடுத்துக்கொண்டு போகும் நிலையிலும் நான் இல்லை, உங்கள் மனைவி வரும் வரையிலும் உங்களின் விருந்தாளியாக இரண்டொருநாள் இருந்துவிட்டு போகிறேன், மறுப்பேதும் சொல்லிவிடாதீர்கள்.. என்றதே அந்த நொடியில் தான் என் ஆசை பேராசை அல்ல, நடக்கபோவதற்கான குறியீடென்று புரிந்தது...

கனகாவும் தான் இப்போது உடன் இல்லையே, இந்த ரெண்டொருநாள் மோகினி இங்கு இருந்தால் தான் என்ன...இருந்துவிட்டு தான் போகட்டுமே என்று மோகினிக்கு சாதகமாக மனம் கூத்தாட ஆரம்பித்தது...விபரீதத்தை தலைக்கிரீடமாய் வைத்துக்கொண்டே ஆகவேண்டுமென அடம்பிடித்தால் விதியை யாரால் மாற்றி எழுத முடியும்....

எழுதியவர் : ராணிகோவிந் (31-May-18, 4:24 pm)
பார்வை : 601

மேலே