381 உள்ளும் புறமும் ஒவ்வாச்சொல் உண்மையன்று - புகழும் இகழும் மதியாமை 6

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

அத்திசூ ழுலகிற் சில்லோர்
..அகத்தொன்றும் வாக்கி லொன்றும்
வைத்திதஞ் சொல்லா(லி) யாவும்
..வனச்செவி யேற்ப தன்றிச்
சத்திய மெனக்கொண் டேகல்
..சக்கினை மூடி நீண்ட
பித்திகை யேறிச் செல்லும்
..பேதைமை நிகர்க்கு மாதோ. 6

- புகழும் இகழும் மதியாமை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”கடல் சூழ்ந்த உலகில் சிலர் உள்ளத்தில் ஒன்றும், பேச்சில் ஒன்றும் வைத்து இனிமையான சொற்களால் சொல்லும் செய்திகளை நம் அழகிய செவிகளில் கொண்டு விடுவதை உண்மையெனக் கொண்டால், அது கண்ணை மூடிக்கொண்டு உயரமான சுவர் மேல் ஏறும் அறியாமைக்கு ஒப்பாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

அத்தி - கடல். இதம் - இனிமை. வனப்பு - அழகு.
பித்திகை - சுவர். பேதைமை- அறியாமை.
சக்கு - கண்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jun-18, 3:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

சிறந்த கட்டுரைகள்

மேலே