எது நிறைவு

=============
கல்யாண மென்பதொரு கட்டாயத் தொல்லை
=கவலைகளால் வழிகின்றக் கண்ணீரே எல்லை
பொல்லாத தென்றறியாப் புகழ்மிக்கப் பசிக்கு
=பலியாகப் புசிக்கின்றோம் பூமுடித்தப் புல்லை
.எல்லோரு மிடுகின்றா ரென்றேதான் தூக்கி
=இருகாலி லிடுகின்றோ மெழிலானக் கல்லை.
இல்லாம லிருந்திருந்தா லிங்கெவரும் காதால்
=எதற்கேனும் கேட்டறியா ரின்னலெனும் சொல்லை.
௦௦
ஒன்றுக்கு இரண்டென்று உருவாகும் பிள்ளை
=உறவுக்குப் பாலமென உண்டான முல்லை.
நன்றாக வளர்த்தெடுத்து நலம்காக்க வேண்டி
=நயமாக வளைப்பார்கள் நல்லுழைப்பு வில்லை.
இல்லாதக் கனவெல்லாம் இயன்றமட்டுங் கண்டு
=இதயத்தில் விதைத்துவைக்கும் எதிர்பார்ப்பு நெல்லை
அல்லுபகல் பாராமல் அயராமல் காத்து
=அறுவடையும் செய்யுமுன்னே அரைதலையில் வெள்ளை.
௦௦
பெண்ணிரண்டு பெற்றெடுத்தப் பெரும்பேறு கொண்டால்
=பெரும்பாலும் வாசல்வரும் பிச்சைக்கும் ஈயார்
கண்ணிரண்டை இமைநான்கும் காத்திடுதல் போலே
=கல்யாணம் கட்டியொரு கரைசேர்க்கும் நோயால்
அண்மிக்கும் உறவுகளின் அரவணைப்பைக் கூட
=அண்டாத வகையினிலே அறுத்துவிடும் தீயார்
கொண்டாட வருகின்ற குதூகலங்கள் தன்னைக்
குழிதோண்டிப் புதைக்கின்ற கொள்கையுள்ளோ ராவார்.
௦௦
சிக்கனத்தின் பெயராலே செலவனைத்தும் சுருக்கி
=சிறந்தபடி வாழ்வதுபோல் சிரித்திருக்க வேண்டி
சிக்கல்களில் உழலுகின்ற சிறுகுடும்ப மெல்லாம்
=சிறைப்பட்ட கைதிகளாய் சிதைவதுவோ வாழ்வு?
தக்கபடி வாழ்வதற்குத் தகுதிப்பண மென்று
=தலைமுறைக்கும் சேர்த்துவைக்கும் தன்னலத்தை நெஞ்சுள்
பக்குவமாய் விதைத்துவிட்டு பார்த்திருக்கும் இறைவா
=பரிதவிப்பு நிலையொன்றே பாமரர்க்கு நிறைவா?
௦௦
**மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (14-Jun-18, 3:33 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 106

மேலே