தற்கொலை என்னும் பெரும்பிழை

தவறுதலாக நாவு கிழித்தால்
தண்டிப்பதில்லை நம் பற்களை!
தவறும் நமது முயற்சிக்காக
தகுமா இந்தத் தற்கொலை?
கல்லறைச் சுவராய் மாற்றுவதா நம்
கனவுக் கோட்டையின் கற்களை?
கல்விச் சாலையில் கற்றதில்லையா
தன்னம்பிக்கைச் சொற்களை?
தற்கொலை முயற்சி தகர்த்திடுமா
நமைத் தழுவியிருக்கும் சிக்கலை?
முடங்கிச் சரிந்தால் முறிப்பதெங்கே
நம் முயற்சிப் பாதையின் முட்களை?
வசந்தம் வருத்தம் இவற்றின் நடுவே
வாழ்தல் என்பது ஓர் கலை!
உணர்ச்சியின் வேகம்
உயிரைக் குடித்தால்
உலகில் அதுவே பெரும்பிழை!
கரைமேல் கொண்ட
காதலில் தோற்றும்
களைத்துப் போவதில்லை கடலலை!
கயிறோ விஷமோ
மீட்டுத்தருவதில்லை
கருகிப்போன நம் கனவினை!
நாளைய உலகம் திருடிவிடாது
நமக்கான சில நாள்களை!
வாழாதுபோனால் நெய்வதெங்கே
நம் வெற்றிக் கொடிக்கான நூல்களை?
இறப்போம் என்று
முடிவெடுக்க இங்கு
இரண்டு நொடிக்குமேல் தேவையில்லை!
இழந்து தவிக்கும்
இதயங்கள் அழுவதை
இறந்தவர் செவிகள் கேட்பதில்லை!
தோல்வி தொடாத
மனிதர் எவருமே
தொன்று தொட்டு
இந்த உலகிலில்லை!
தோல்வியும் ஒருநாள்
தோற்கும் என்கிற
உண்மையை சிலரிங்கு
உணர்வதில்லை!
ஏற்றத்தாழ்வுகள் எல்லோர்க்கும் பொதுவே
எதுவுமில்லை இங்கு கீழ்நிலை!
இறக்கும் எண்ணம்
இனியும் வேண்டாம்
இனிதே மாறும் சூழ்நிலை!
- நிலவை.பார்த்திபன்