நவீன நாவல் -எதிர்வினை,---------- சுனீல் கிருஷ்ணன்

எழுத்தாளர் விஷால் ராஜா விரிவாக நாவல் உருவாகி உருமாறி வரும் பின்புலத்தை நவீனத்துவ பின் நவீனத்துவ புரிதல்களின் அடிப்படையில், ஏற்கனவே இங்கு நிலவிவரும் உரையாடலின் தொடர்ச்சியாக கருத்துக்களை தொகுத்து அளித்துள்ளார். அவருடைய கட்டுரையில் இருந்து சில மேலதிக புள்ளிகளையும், மாற்று பார்வைகளையும் முன்வைக்க முயல்கிறேன்.

2013 ஆம் ஆண்டு ஜெயமோகன் திருவண்ணாமலை வந்திருந்த போது எல்லோரும் கிரிவலம் சென்றோம். அப்போது அவரிடம் ந. பிச்ச்சமூர்த்தி எழுத்து இதழுக்கு அளித்த நேர்காணலில் “சொல்லை மந்திரம் என்பார்கள் சொல்லைக் கொண்டே சொல்லற்ற நிலையைக் காட்ட முயல்வது தான் இலக்கியம். அங்கே ஆன்மீக சிகரமும் உலகியல் சிகரமும் இணைகின்றன.” என்கிறார். மேலும் சொல்லின்மையே தன் இலக்கு என்றேனும் அது வாய்க்கும் என்றால் எழுதுவதை விட்டுவிடுவேன் என்பதாக சொல்லியிருந்தார். சொல்லின்மையை அடைவதற்கு எகிறி குதிக்கும் உந்து பலகையாக சொல்லிருக்கிறது. ஆன்மீகவாதியும் இலக்கியவாதியும் தங்களுள் ஒரு வெறுமையை உணர்கிறார்கள். இலக்கியவாதி அந்த வெறுமையை சொற்களை இட்டு நிரப்புகிறான். ஆன்மீகவாதி சாதகங்கள் வழியாக முன்னேறி செல்கிறான். இலக்கியவாதிக்கு விடை முக்கியமில்லை. கேள்வியை கொண்டு தன் படைப்பூக்கத்தை தக்கவைத்து கொள்ளவேண்டும் என்பது மட்டுமே நோக்கம். சொற்களை கைவிட அவன் விழைவதில்லை. அவ்வகையில் தேர்ந்த இலக்கியவாதி ஆன்மீகவாதியாக முடியாது என்று என் புரிதலை ஜெயமோகனிடம் கூறினேன். நடந்து கொண்டிருந்தவர் நின்றார். ஏற இறங்க பார்த்தார். “ஒரு மரம் இருக்கிறது. அதில் பூ பூக்கிறது. அந்த மரம் இத்தனை சதுரடி வெறுமையை நிரப்புகிறது என்றா சொல்வீர்கள்? அந்த பூ இத்தனை கொள்ளளவை ஆக்கிரமிக்கிறது என்றா சொல்வீர்கள்? பூ தன்னியல்பில், எந்த நோக்கமும் இன்றி மலரலாம். படைப்பும் அப்படியே. நிறைவும் நிறைவின்மையும் நவீனத்துவ சொல்லாடல். அது நீங்கள் அறியாமல் உங்களை வந்து சேர்ந்திருக்கிறது” என்றார். அந்த இருட் பாதையில் நாங்கள் சென்ற நீண்ட நடையும் காட்சிகளாகவும் சொற்களாகவும் இன்னும் என்னுள் இனிய நினைவாக அப்படியே உள்ளன.

விஷால் ராஜாவின் கட்டுரையை வாசித்தவுடன் எனக்கு இந்த நிகழ்வு இயல்பாக மனதில் எழுந்தது பூ தன்னியல்பில் மலர்வது என்பது பின்நவீனத்துவ சிந்தனையா? இல்லை. நம் மரபில் உள்ள உருவகங்களில் ஒன்று. மரபிற்கும், நவீனத்துவத்திற்கும்,பின் நவீனத்துவத்திற்கும் உள்ள உறவை விஷாலின் கருத்துக்களைக்கொண்டு மேலதிகமாக பரிசீலிக்கலாம் எனத் தோன்றியது. மரபின் மீது நவீனத்துவம் எப்போதும் ஐயம் கொள்கிறது. ஏறத்தாழ பலவீனமான சர்வாதிகாரியைபோல், அதை புறக்கணித்து அடக்குவதன் வழியாக தனது அச்சத்தை கடக்க முயல்கிறது. யதார்த்தவாதம் மரபை பரிசீலனை செய்யாமல் கதைபோக்கில் பயன்படுத்தி வந்தது. நவீனத்துவம் ஏறத்தாழ யதார்த்தவாதத்தின் பார்வைகளை கொண்டிருந்தாலும் மரபை பிரக்ஞை பூர்வமாக எதிர்த்தது. மரபிற்கு எதிரான கலகமே நவீனத்துவம் என சொல்லலாம். வூடூ பொம்மைக்கு அஞ்சுவது போல் மரபின் ஆதிக்கத்தை அஞ்சி நவீனத்துவம் விலகி நிற்கிறது.

“எதிரிக்கெதிரி நண்பன் என்று சொல்வதுபோலத் தொடர்ந்து அல்லது முரண்பட்டுவரும் மரபின் ஒன்றிரண்டு கூறுகளோடு தன்னை இணைத்துக்கொள்ளவும் செய்கிறது.” என்று கோவை ஞானி பின் நவீனத்துவத்திற்கும் மரபிற்கும் உண்டான உறவைப் பற்றி அவருடைய தமிழில் நவீனத்துவம் மற்றும் பின் நவீனத்துவம் கட்டுரையில் சொல்கிறார். பின் நவீனத்துவம் மரபை தன்னுடைய களி தோழனாக,குழந்தைக்குரிய குறுகுறுப்புடன் கையாள்கிறது. தயக்கமின்றி அரவணைத்து கொள்கிறது. பொம்மையின் தலையையும் காலையையும் உடலையும் பிய்த்து இடம் மாற்றி விளையாடுகிறது. சில நேரங்களில் அதை கிழித்து உள் பொதிந்த பஞ்சை எடுத்து பார்த்து மீண்டும் தைக்கிறது. இதன் பொருள் மரபை நவீனத்துவம் அணுகவே இல்லை என்பதல்ல. ஆனால் மரபையும் கூட தன் பார்வைக்கு உகந்த மாதிரி வெட்டி எடுத்துகொண்டது. வியாச பாரதம் எனும் மரபான ஆக்கத்தை யதார்த்த நாவலாக கொம்மை,நவீனத்துவ பிரதியாக எம்.டிவி மற்றும் பைரப்பா அணுகிய விதத்திற்கும் ஜெயமோகனும் எஸ்.ராமகிருஷ்ணனும் அணுகிய விதத்திற்கும் உள்ள வேறுபாடை ஒரு உதாரணமாக சொல்லலாம்.

நவீனத்துவ பின் நவீனத்துவ பகுப்புக்களைப் பற்றி விஷால்ராஜா கூர்மையான கருத்துக்களை முன்வைத்தார். இப்போது யோசிக்கையில் நவீனத்துவத்துடன் அடையாளபடுத்தப்படும் “இருத்தலியல்”கேள்விகள் நவீன மனிதனுக்கு மட்டும் உரியதா என்றொரு கேள்வியை எழுப்பி பார்க்கிறேன். இருத்தலியல் எனும் தத்துவம் வகுக்கப்பட்ட பின்னர் பின்னோக்கி தேடுவது என்பது ராமாயணத்தில் அணு ஆயுதங்களை கண்டுபிடிக்கும் முயற்சியாக தோன்றலாம், எனினும் இருத்தலியலின் சாயை கொண்ட கேள்விகள் மானுட குலத்தை தொன்றுதொட்டு துரத்தி வருகிறது. அவ்வகையில் மகாபாரதத்து அர்ஜுனனையும், கவுதம புத்தரையும் நாம் இருத்தலியல் கேள்விகள் கொண்ட மனிதர்களாக கருத முடியுமோ என்றொரு யோசனை எழுகிறது.

“ஆணை துரப்ப அரவு உறை ஆழ்குழி

நாநவிர் பற்றுபு நாளும் ஒருவன் ஓர்

தேனின் அழிதுளி நக்கும் திறத்தது

மானுடன் இன்பம் மதித்தனை கொள்நீ”

என்று ஒரு சூளாமணிப் பாடலை பற்றி நாஞ்சில் நாடன் எழுதியுள்ளார். ‘யானை துரத்துகிறது ஒருவனை. பாழுங்கிணற்றில் இறங்கித் தப்ப முயல்கிறான். கீழே பாம்புகள் படமெடுத்து ஆடுகின்றன. புற்கற்றைகளைப் பற்றி, பாழ்குழியில் விழாமல் தொங்குகிறான். ஒன்று யானையிடம் மிதிபட்டு சாகலாம். அன்றேல் அரவம் கொத்தி இறக்கலாம். எது நல்ல சாய்ஸ்? இந்நிலையில் பாழ்க்குழியின் பக்கத்தில் நிற்கும் மரத்தில் தொங்கும் தேன் கூட்டில் இருந்து கொட்டும் தேன் துளியை நக்க முயல்வது போல் வாழ்க்கை.’

இந்த பாடல் வரிகளை வாசித்தவுடன் இயல்பாக என் மனம் பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலில் வரும் சென்னிகராயனுடன் தொடர்புபடுத்திக் கொண்டது. கொள்ளைநோயால் ஊர் காலியாகிக் கொண்டிருக்கும். வீட்டு பெண்கள் துன்புற்று அவதியுறுவார்கள் ஆனால் சென்னிகராயன் ஓட்டல் சாப்பாடிற்கு ஏங்கித் தவித்து கொண்டிருப்பான். பைரப்பா இந்திய நவீனத்துவ இலக்கியத்தின் முகம். .

ஒவ்வொரு காலகட்டத்திலும் அறிதலின் பாய்ச்சல் நிகழும்போது அறிதல் வேட்கைக்கொண்ட மனிதன் பெரும் உவகை கொள்கிறான். சின்னச்சின்ன முடிச்சுக்களால் ஆன நீளமான கயிறில் மனிதன் பிணைக்கப் பட்டிருக்கிறான். (இதுவே கூட நவீனத்துவ உருவகம் தான்) அவன் கழுத்து கயிறின் ஒரு சுருக்கு அவிழ்ந்தவுடன்,துள்ளிக்குதிக்கும் கன்றைப் போல் ஓடுகிறான், ஓடி சற்றே நீண்டிருக்கும் கயிற்றின் எல்லையை உணர்கிறான். அந்தந்த காலகட்டத்தின் அறிதலின் எல்லையை முட்டித் திரும்பி வாழ்வின் நோக்கத்தை, அர்த்தத்தை அர்த்தமின்மையை பற்றி கேள்விகளை எழுப்பிகொள்கிறான். இது மீண்டும் மீண்டும் நிகழ்வதோ எனத் தோன்றுகிறது. ஆனால் இதற்கான எதிர்வினை, அல்லது அடுத்த கட்டம் வெவ்வேறு வகையாக உள்ளன. அப்போது அவன் வெட்டவெளியில் நிற்கிறான் அல்லது ஏற்கனவே இருக்கும் பற்றுகோலை இறுகப் பற்றுகிறான் அல்லது புதிய பற்றுகோலை உருவாக்குகிறான். நவீனத்துவத்தில் அவன் கரிப்பும் சிரிப்புமாக எதிர்கொள்கிறான். ‘மத்துறு தயிர்’ தானே ‘பாரதியின் விசையறு பந்து’. ‘யாக்கை நிலையாமை’ நாம் எப்போதும் பேசிய படிதானே இருக்கிறோம். .

“ஒரு கதையை உண்மைக்கதை என்று சுட்டுவது கலைக்கும், உண்மைக்கும் என இரண்டிற்குமே நிகழும் அவமானம்” என்கிறார் விளாதிமிர் நபகோவ். யதார்த்தவாத கதைகளுக்கும் இது பொருந்தும். கதைகள் ‘முழு உண்மைகளுக்கான’ களம் அல்ல. கதைகளில் உள்ள உண்மையில் ஒரு தேர்வும் வரிசையும் உள்ளது. ஆர்வல் ‘கலை என்பதே தேர்வுதான்’ என்கிறார். ஆகவே யதார்த்தவாத புனைவுகள் முன்வைப்பதை போல் புனைவை அளவிட புற உண்மையின் உதவியை நாட வேண்டியதில்லை, புனைவுண்மை தான் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.

நவீனத்துவத்தின் இரு முக்கிய கூறுகள் என விமர்சனபூர்வ அங்கதம் மற்றும் ஆராயும் நோக்கு ஆகியவற்றை குறிப்பிடலாம். விர்ஜினீயா வுல்ப் “கருணையை காட்டிலும் அங்கதத்தை தேர்வதைற்கும், தனி மனிதர்களை புரிந்து கொள்வதை காட்டிலும் அவர்களை ஆராய்வதற்கும் ஆங்கில நாவல்கள் எப்படியோ பழக்கப்பட்டுள்ளன” என்று எழுதுகிறார். “யதார்த்த இலக்கியம் என்பது ஆரம்பத்திலிருந்தே “பாதிக்கப்பட்டவனின்’ இலக்கியமாக இருந்திருக்கிறது. சாமானியர்களின் புற உலகை எதிர் கொள்கிறார்கள், அதனால் வெல்லப்படுகிறார்கள்” என்று எழுதும் சால் பெல்லோ, நினைவேக்க அஞ்சலி (elegy) மற்றும் அங்கதத்தைத் தவிர வேறு எதையும் எங்களால் அப்போது எழுத முடியவில்லை என சொல்கிறார்.

மைக்கேல் மிட் அவருடைய ‘நாவல் ஒரு சுய சரிதை நூலில்’ இதற்கான காரணத்தை சொல்கிறார். “தேம்ஸ் நதியில் வேறுவழியின்றி சாக்கடை நீர் ஓடுவதை பார்க்கும்போது நவீன நாகரீகம் அவர்களுடைய கலை மனதின் மீது எல்லா தளங்களிலும் வன்முறை செலுத்தியதை உணர முடிகிறது.” தமிழில் நவீனத்துவத்தின் வெளிப்பாட்டு முறைகளான முரண்நகை மற்றும் அங்கதத்தை வெளிபடுத்திய மிகச் சிறந்த எழுத்துக்கள் என்று புதுமைபித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஆதவன், திலீப்குமார், கோபி கிருஷ்ணா போன்றவர்களுடையதை குறிப்பிடலாம். அசோகமித்திரன் அவருடைய நேர்காணலில் “எளிய மனிதர்களின் நினைவுகளை போற்றுவதற்காக நான் கதைகளை எழுதுவதுண்டு என்கிறார்”. தேம்ஸ் சீரழிவு எப்படியோ தாமிரபரணியின் நினைவுகளும் நெல்லை எழுத்தாளர்களுக்கு அப்படியே. காலத்திற்கு எதிராக வெளிர்ந்து கொண்டிருக்கும் நினைவுகளால் ஓர் காலாதீத நினைவுச்சின்னத்தை எழுத்தாளன் எழுப்ப முற்படுகிறான்.

ஆயுர்வேதத்தில் ஆறு பருவங்களை ஒரு நாளுடைய பகுப்பாக பார்க்கும் பார்வை உண்டு. கீதை உரையில் நால்யுகங்களை பற்றி ஜெயமோகன் குறிப்பிடுகையில் அவை quantitativeஅளவுகள் அல்ல qualitative என்று குறிப்பிடுகிறார். அதாவது இயல்பு சார்ந்த வரையறை. அப்படியென்றால் ஒரே சமயத்தில் வெவ்வேறு இயல்புகள் கொண்ட நான்கு யுகங்களும் வெவ்வேறு பிரதேசத்தில் உயிர்த்திருக்க முடியும். அல்லது ஒரே மனிதனுடைய வாழ்விலும் கூட இந்த நான்கு யுகங்கள் இருக்க முடியும் என்றெல்லாம் அதை நான் நீட்டித்துக் கொண்டேன். ‘இலக்கிய வரலாற்றில்’ இவை ஒவ்வொன்றும் உருவானதற்கு சமூக வரலாற்று காரணிகள் இருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. வெவ்வேறு காலகட்டங்களில் சுயம் சார்ந்த புரிதலும், சமூகத்துடன், வரலாற்றுடன் கொள்ளும் உறவும் மாறி வருகிறது என்றாலும் ஒரு புதிய சிந்தனை போக்கு முன்னதை முற்றிலுமாக காலாவதியாக்குவதில்லை. நான் மரபு,யதார்த்தவாத, நவீனத்துவ,பின்நவீனத்துவ பகுப்பிற்கும் இந்த இயல்பு சார்ந்த அளவையை போட்டு பார்க்கிறேன். இவை ஒரே சமயத்தில் ஒரே மொழியில் ஒரே எழுத்தாளரிடம் கூட இயைந்து வெளிப்பட முடியும் (அனல் காற்று, ஏழாம் உலகம் எழுதிய ஜெயமோகன் தான் விஷ்ணுபுரத்தையும் வெண்முரசையும் எழுதினார்). நவீனத்துவம் முடிந்துவிட்டது,பின்நவீனத்துவம் எழுந்துவிட்டது, பின் நவீனத்துவம் முடிந்துவிட்டது என்றெல்லாம் புற அளவைகளை கொண்டு நாம் திட்டவட்டமாக காலவரையறை செய்தாலும், இந்த அனைத்து போக்குகளும் ஒரு மொழியில் அதற்கான தேவை இருக்கும்வரை நீடிக்கவே செய்யும். மரபின் மைந்தன் முத்தையாவும்,பூமணியும், யூமா வாசுகியும்,ஜெயமோகனும் அவரவருக்கே உரித்தான அழகுடன், வீச்சுடன்,ஆழத்துடன் ஒரே மொழியில் இயங்க முடிகிறது. மரபு –யதார்த்தவாதம் – நவீனத்துவம் – பின் நவீனத்துவம் எனும் வரிசையில் ஒன்றைக் காட்டிலும் மற்றொன்று மேலானது என்பதை விட ஒன்றின் எல்லை மற்றும் போதாமைகளில் இருந்து மற்றொன்று கிளைத்தது என்றும் ஒன்று பிறிதொன்றின் நீட்சி என்றும் முழுமை பார்வையை நோக்கி செல்ல முற்படலாம்.

கவிஞர் இசையின் கவிதையைப் பற்றி விஷால் playfull depthlessness எனும் பின்நவீனத்துவத்திற்கு உதாரணமாக சொல்வது எனக்கு ஏற்புடையது அல்ல. அவரிடம் விளையாட்டு உள்ளது ஆனால் ஆழமின்மை இல்லை என்றே எண்ணுகிறேன். இன்னும் சொல்வதானால் அவருடைய கவிதை விளையாட்டை ஒரு பாவனையாக சூடிக் கொண்ட ஆழமான அற கேள்விகளை எழுப்புபவை என்பது என் எண்ணம். நாவலைப் பொறுத்தவரை விஷாலின் பார்வை எனக்கு ஏற்புடையதே. நவீனத்துவத்தை விமர்சித்து எழுந்த பேரலையே பின் நவீனத்துவம். “தனது சொந்த கூண்டை நேசிக்க பழகிய பறவையின் பாடல் தான் முரண் நகை” என நவீனத்துவத்தின் ஆதார இயல்பை கேலி செய்கிறார் டேவிட் ஃபாஸ்டர் வாலஸ். நவீனத்துவத்தின் இறுக்கத்திலிருந்து படைப்பையும் படைப்பாற்றலையும் பின் நவீனத்துவம் விடுவித்தது.

“நவீனத்துவம் மறுக்கப்பட்டு தோன்றுகிறது பின் நவீனத்துவம் அல்லது நவீனத்துவத்திற்குள் தொடர் இயக்கம் பின் நவீனத்துவம் என்ற இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன” என்று இரு போக்குகள் நிலவுவதை சுட்டிக்காட்டுகிறார் கோவை ஞானி. நவீனத்துவத்தின் வருகை யாதார்தவாதத்தை நெகிழ செய்திருக்கிறது. நம்மை மேலும் மனிதர்களோடு நெருக்கமாக்குகிறது. யதார்த்தவாதம் இதை பயன்படுத்திக்கொண்டு முன்நகர முடியும் என்கிறார். பின் நவீனத்துவம் நவீனத்துவத்தின் மீது விமர்சனப் பூர்வமாக நிராகரித்தாலும், கொஞ்ச காலத்திற்கு அதன் கேள்விகளுக்கு செவி சாய்க்காத பாவனைகளை பூண்டிருந்தாலும் இன்று மேலும் தீவிரமாக, மேலும் பல குரலில் அக்கேள்விகளை நோக்கி திரும்பி இருக்கிறது. இதற்கு தமிழில் மிகச் சிறந்த உதாரணம் விஷ்ணுபுரமும் வெண்முரசும் என சொல்லலாம்.

ஆக ஒவ்வொரு அலையும் இலக்கிய பரப்பை நிரந்தரமாக சில வகைகளில் மாற்றியமைக்க முயல்கிறது. பின் நவீனத்துவம் நவீனத்துவத்தையோ யதார்த்தவதத்தையோ அழிக்கவும் இல்லை அதை முழுவதுமாக பெயர்த்து தான் வந்து அமரவும் இல்லை. மாறாக அதன் வருகை நவீனத்துவத்திற்கும், யதார்த்தவாதத்திற்கும் பெரும் சவாலை எழுப்பியுள்ளது. அசலான, காத்திரமான படைப்புகளை உருவாக்க முடியுமா? என்பதே அந்த சவால். ஆக இன்றைய நாவல்களும் வருங்கால நாவல்களும் நவீனத்துவ பின் நவீனத்துவ பட்டிகளுக்கு அப்பால் இயங்க கூடும். தேர்ந்த படைப்பாளிகள், படைப்புகள் எப்போதுமே இப்பட்டிகளை பொருட்படுத்துவதில்லை. யதார்த்தவாத நாவல் பின் நவீனத்துவத்தின் சிதறுண்ட, மையமற்ற வடிவத்தை ஏற்கிறது. ஸ்வெட்லான அலேக்சிவிச்சின் ‘second hand time’ ஏறத்தாழ நேர்காணல்களின் தொகை. நழுவி செல்லும் காலத்தைப் பற்றிய பார்வையை கொண்டது. ஆனால் சன்னமான இணைப்பு சங்கிலி வழியாக, மையமற்ற போக்கை அடைகிறது. தேர்வும் வைப்புமுறையும் அதை நாவலாக்குகிறது. நவீனத்துவ எழுத்தாளர் என்று அடையாளபடுத்தப்படும் அசோகமித்திரன் அவருடைய நாவல்களான கரைந்த நிழல்களில் பின் நவீனத்துவ கூறாக சொல்லப்படும் மையமற்றத்தன்மை மற்றும் பலகுரல் தன்மையை அடைந்திருக்கிறார் என சுட்டிக் காட்டுகிறார் கோவை ஞானி. யூமா வாசுகியின் ‘ரத்த உறவுகள்’ அடிப்படையில் நவீனத்துவ நாவலாக இருந்தாலும் அதில் வரும் சிறுவனின் கனவு சார்ந்த பகுதிகள் அதன் எல்லையை உடைத்து புதிய நிலைக்கு கொண்டு செல்கிறது. நவீனத்துவத்தின் அமைப்புகள் மீதான நம்பிக்கையின்மை மேலும் வலுவடைந்து பின் நவீனத்துவத்தில் உருகொள்கிறது. இன்றைய காலகட்டத்தில் உருவாகும் சிறந்த நவீனத்துவ மற்றும் யதார்த்தவாத பிரதிகள் பின் நவீனத்துவத்தின் மீதும் தாக்கம் செலுத்துகிறது. சாரமற்ற சொல் விளையாட்டாக பின் நவீனத்துவம் எஞ்சிவிடாமல் இருப்பதற்கு அது தன்னை தகவமைத்து கொள்ள வேண்டிய அழுத்தத்தை அளிக்கிறது. பின் நவீனத்துவ நாவல் வாழ்க்கையின் பொருளை, பொருளின்மையை, அபத்தத்தை, அதன் சிக்கல்களை பேசுவதை தவிர்க்க முடியாது. ராபர்டோ போலனோவின் 2666, ஜெயமோகனின் வெண்முரசு ஆகியவை இதற்கு உதாரணம்.

வருங்கால நாவல்கள் உண்மையின் பன்முகங்களை ஒரே நேரம் உணர்சிகரமாகவோ அல்லது விலகளுடனோ பரீசிலிக்கலாம். மாற்று வரலாற்றுகளை உருவகிக்கும் ஊகப் புனைவுகள் அயல் இலக்கியங்களில் செல்வாக்குடன் திகழ்கின்றன. வருங்கால நாவல்களில் சமூக ஊடக பயன்பாட்டின் தாக்கம் திட்டவட்டமாக புலப்படும். சன்னமான இணைப்பு கொண்ட வாழ்க்கை துண்டுகள் சேர்ந்து நாவல் வடிவம் கொள்ளலாம். சமூக ஊடகத்தின் வருகை சுயம் பற்றிய குழப்பத்தை மேலும் கூர்மையாக்குகிறது. ஊடக சுயத்திற்கும் அதற்கு வெளியே உள்ள சுயத்திற்குமான விரிசல் புலப்படுகிறது. எது தன் அசல் சுயம் என்றொரு குழப்பம் மேலிடுகிறது. ஊடக ஆவண நாவல்கள் தற்காலத்தில் செல்வாக்குடன் இயங்குவதை கவனிக்க முடிகிறது. பல போக்குகள் கொண்ட ஆரோக்கியமான படைபூக்க சூழலே நிலவும் என்று எதிர்பார்க்கிறேன்.

கோவை ஞானி அவருடைய கட்டுரையில் “பவுத்தனும், சங்கரனும் இன்றைய புதிய சூழலில் பின் நவீனத்துவ போக்கை புரிந்து கொள்ளமுடியும். பொருளையும் அதிகாரத்தையும் மதிக்காதவர்கள் உயர்வகை உயிரிகளுடன் கலந்டஹ்து கரைந்தது பிரபஞ்சம் என்பதை ஆழ உணர்ந்தவர்கள் பின் நவீனத்துவத்தோடு முரண்பட முடியாது. யதார்த்தவாதம் தான் இந்தப் பின் நவீனத்துவ வீச்சுக்கான களம். என்பதையும் புரிந்துகொள்வார்கள். வரலாற்றை விட்டு நாம் எங்கே தப்பிச்செல்ல முடியும்? நிலத்தையும் நீரையும் நம்மால் எப்படி ஒதுக்க முடியும்? நேயம் இல்லாமல் எப்படி வாழ முடியும்?” என்று சாராம்சபடுத்தி எழுதுகிறார்.

நவீனத்துவ பின் நவீனத்துவ பகுப்புகளுக்கு அப்பால் மனிதனின் ஆதார கேள்விகளை விவாதிக்கும் களமாக நாவல் எப்போதும் நீடித்திருக்கும்.

தரவுகள்

The Novel – A biography – Michael Schmidt

ஆனை துரப்ப அரவு உறை ஆழ்குழி- நாஞ்சில் நாடன்

தமிழில் நவீனத்துவமும் பின் நவீனத்துவமும் – கோவை ஞானி

எழுதியவர் : (21-Jun-18, 4:49 am)
பார்வை : 121

மேலே