கேள்வியால் வேள்விசெய்

நாட்டில்பல நன்மைகள் நடந்த தெல்லாம்
நாள்தோறும் எழுந்தபல கேள்வி யாலே
பூட்டிவைத்த கேள்விகளால் விளைவ தென்ன?
பூமியிலே மாற்றமில்லை கேள்வி இன்றி
வாட்டுகின்ற வேதனைகள் விலகிச் செல்ல
வினவுகின்ற கேள்வியில்தான் விடைகள் கிட்டும்
மாட்டுகின்றார் கயவர்பலர் உலக மெங்கும்
மதிநிறைந்த கேள்விபல கேட்ப தாலே

விடைகிட்டும் கேள்விகள்கேள் என்று சொன்னார்
விண்ணுலகம் சென்றுவிட்ட சாக்ரட் டீசும்
உடையினிலே கருப்பணிந்த வைக்கம் வீரர்
உள்ளத்தில் மாற்றம்வர வினவச் சொன்னார்
தடையற்றக் குறள்தந்த தெய்வப் புலவர்
தவறாமல் மெய்ப்பொருளைத் தேடச் சொன்னார்
மடைதிறந்த வெள்ளம்போல் தோன்றும் கேள்வி
மண்மீதில் மாற்றத்தைத் தோற்று விக்கும்

கனவினிலே மிதக்கின்றார் வாழ்நாள் எல்லாம்
கருஇருட்டில் கிடக்கின்றார் முயற்சி இன்றி
வினவுகின்ற திறனற்று அச்சம் கொண்டு
விடைகானா கேள்விக்கே சொந்தம் ஆனார்
மனந்தெளிய பலநூல்கள் கற்றார் கூட
மனதினிலே துணிவின்றி மந்த மானார்
பனங்காட்டு நரிபோன்றோர் சொன்ன சொல்லை
பணிவுடனே மனங்கொண்டார் துணிவும் விட்டார்

விடைகாணும் நல்லெண்ணம் உள்ள பேர்கள்
விழித்துதினம் நூல்கள்பல படித்துத் பார்ப்பார்
குடைகின்ற கேள்விக்கெலாம் விடையைக் கண்டு
குவளையத்தின் வளர்ச்சிக்கு வழிகள் சொல்வார்
படைகள்பல இருப்பதினால் பயனே இல்லை
பண்பொன்றே பார்முழுக்க நற்பேர் ஈட்டும்
துடைத்தெறிவாய் மூடத்தனம் முழுதாய் மண்ணில்
துயில்கொள்ளார் லட்சியத்தை சுமப்போர் என்றும்

விளையாட்டு பருவமுள்ள பிள்ளை கட்கும்
வினவுகின்ற திறமைதனை வளர்க்க வேண்டும்
உளைச்சேற்றில் நட்டுவைக்கும் நாற்று போல
உள்ளத்தில் நல்லறிவை ஊட்ட வேண்டும்
களைகட்டின் வடிவமதும் கேள்விக் குறியாம்
களைகொண்ட வயலின்பயிர் விளைவைத் தருமா?
வளையில்வாழ் எறும்புக்கும் செல்லும் போதில்
வரிசையாய் செல்லுகின்ற பாங்கு உண்டு

எதுவந்த போதினிலும் ஏற்றுக் கொள்ளும்
இயலாமை தமிழர்க்கே சொந்ந மாச்சே
மதுவொன்றே மாண்பயனைத் தருமென் றெண்ணி
மதிமயக்கும் பாதையினில் பயணிக் கின்றார்
புதுவெள்ளம் போன்றிருந்தார் தமிழர் அன்று
புரையோடிப் போனார்கள் மதுவால் இன்று
இதுதான்இந் நாட்டிற்கு விதியேன் றெண்ணி
இருப்பதினும் வேறுவழி உண்டோ? சொல்வீர்!

பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : சொ. பாஸ்கரன் (22-Jun-18, 7:01 pm)
சேர்த்தது : BASKARAN
பார்வை : 24

மேலே