கேள்வியால் வேள்விசெய்

நாட்டில்பல நன்மைகள் நடந்த தெல்லாம்
---------நாள்தோறும் எழுந்தபல கேள்வி யாலே
பூட்டிவைத்த கேள்விகளால் விளைவ தென்ன?
--------பூமியிலே மாற்றமில்லை கேள்வி இன்றி
வாட்டுகின்ற வேதனைகள் விலகிச் செல்ல
-------- வினவுகின்ற கேள்வியில்தான் விடைகள் கிட்டும்
மாட்டுகின்றார் கயவர்பலர் உலக மெங்கும்
----------மதிநிறைந்த கேள்விபல கேட்ப தாலே

விடைகிட்டும் கேள்விகள்கேள் என்று சொன்னார்
-----விண்ணுலகம் சென்றுவிட்ட சாக்ரட் டீசும்
உடையினிலே கருப்பணிந்த வைக்கம் வீரர்
------ உள்ளத்தில் மாற்றம்வர வினவச் சொன்னார்
தடையற்றக் குறள்தந்த தெய்வப் புலவர்
------தவறாமல் மெய்ப்பொருளைத் தேடச் சொன்னார்
மடைதிறந்த வெள்ளம்போல் தோன்றும் கேள்வி
--------மண்மீதில் மாற்றத்தைத் தோற்று விக்கும்

கனவினிலே மிதக்கின்றார் வாழ்நாள் எல்லாம்
--------கருஇருட்டில் கிடக்கின்றார் முயற்சி இன்றி
வினவுகின்ற திறனற்று அச்சம் கொண்டு
--------விடைகானா கேள்விக்கே சொந்தம் ஆனார்
மனந்தெளிய பலநூல்கள் கற்றார் கூட
--------மனதினிலே துணிவின்றி மந்த மானார்
பனங்காட்டு நரிபோன்றோர் சொன்ன சொல்லை
--------பணிவுடனே மனங்கொண்டார் துணிவும் விட்டார்

விடைகாணும் நல்லெண்ணம் உள்ள பேர்கள்
--------விழித்துதினம் நூல்கள்பல படித்துத் பார்ப்பார்
குடைகின்ற கேள்விக்கெலாம் விடையைக் கண்டு
---------குவளையத்தின் வளர்ச்சிக்கு வழிகள் சொல்வார்
படைகள்பல இருப்பதினால் பயனே இல்லை
---------பண்பொன்றே பார்முழுக்க நற்பேர் ஈட்டும்
துடைத்தெறிவாய் மூடத்தனம் முழுதாய் மண்ணில்
---------துயில்கொள்ளார் லட்சியத்தை சுமப்போர் என்றும்

விளையாட்டு பருவமுள்ள பிள்ளை கட்கும்
----------வினவுகின்ற திறமைதனை வளர்க்க வேண்டும்
உளைச்சேற்றில் நட்டுவைக்கும் நாற்று போல
---------உள்ளத்தில் நல்லறிவை ஊட்ட வேண்டும்
களைகட்டின் வடிவமதும் கேள்விக் குறியாம்
---------களைகொண்ட வயலின்பயிர் விளைவைத் தருமா?
வளையில்வாழ் எறும்புக்கும் செல்லும் போதில்
---------வரிசையாய் செல்லுகின்ற பாங்கு உண்டு

எதுவந்த போதினிலும் ஏற்றுக் கொள்ளும்
--------இயலாமை தமிழர்க்கே சொந்ந மாச்சே
மதுவொன்றே மாண்பயனைத் தருமென் றெண்ணி
------- மதிமயக்கும் பாதையினில் பயணிக் கின்றார்
புதுவெள்ளம் போன்றிருந்தார் தமிழர் அன்று
--------புரையோடிப் போனார்கள் மதுவால் இன்று
இதுதான்இந் நாட்டிற்கு விதியேன் றெண்ணி
--------இருப்பதினும் வேறுவழி உண்டோ? சொல்வீர்!

பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : சொ. பாஸ்கரன் (22-Jun-18, 7:06 pm)
பார்வை : 49

மேலே