கவிதைக்குள் ஒரு கதை

கவிதைக்குள் ஒரு கதை

நான் கவிஞனல்ல !
ஒரு கதையை
கவிதையாக நினைத்து
எழுதி உள்ளேன்
கவிதையை மன்னித்து
கதையை இரசியுங்கள்


தண்டவாள ஊர்தியில் வந்திறங்கிய
வாலிபனை !
“ஆஸ்ரமம்" என்னும் பதாகை
ஏந்திய ஒரு கூட்டம்
கட்டியணைத்து வரவேற்றது
கூட்டத்தின் நடுவில் இருந்த
பெரியவரை கால் தொட்டு
வணங்கினான் வாலிபன்
ஆசிரமத்தில் வளர்ந்து ஐ.ஏ.எஸ்.
தேறிய முதல் ஆள் நீ !
உச்சி முகர்ந்து வாழ்த்து கூறினார்

சென்று கொண்டிருந்த வாகனம்
பெரியவரால் நிறுத்தப்பட்டு வாலிபனை
இறக்கி கூட்டி சென்றார் பெரியவர்
பாதையோரம் இருந்த குப்பை
தொட்டியை தொட்டு காட்டி
இங்குதான் நீ பிறந்தாய் !

கண்ணீருடன் எட்டி பார்த்து
என் பெற்றோரும் இந்த
குப்பைகள்தானே !

பெருமூச்சுடன் சொல்லி திரும்பியவனை

‘தம்பி’ அழைக்கும் குரல்
கேட்டு திரும்பியவன்
குப்பை தொட்டியின் அருகில்
படுத்திருந்த மூதாட்டி இரு
கைகளையும் நீட்டினாள்

கால் சாராயில் கை விட்டு
கையில் வந்த பணம் முழுவதும்
அவள் கையில் திணித்தான்

வேண்டாம் தம்பி நீ
நல்லா இருப்பே வாங்கியதை
திருப்பி கொடுத்து முகத்தை
மூடியபடி அழுதாள்

அம்மா அழுகாதே எங்களுடன்
வந்துவிடு ! கேட்டவனை
அன்புடன் பார்த்த அந்த
மூதாட்டி

அருகில் இருந்த பெரியவரின்
காலை தொட்டு வணங்கினாள்

பதறிப்போன இருவரும் விலகி
நிற்க சட்டென ஓடி
மறைந்தாள் அந்த மூதாட்டி

ஏதும் புரியாத இருவருமே
திரும்பி திரும்பி பார்த்து
சென்றனர்

சற்று தொலைவில் ஓளிந்து
இவர்களை பார்த்த மூதாட்டி

“குப்பை தொட்டியில்” விழுந்தவன்
வாட்ட சாட்டமாய் வளர்ந்து
பேசி கொண்டு போவதை
கண் கொண்டு பார்த்து நின்றாள்

தவறான வழியில் பெற்று
குப்பை தொட்டியில் போட்டுவிட்டு
இத்தனை வருடம்
குற்ற உணர்ச்சியில் தினம் தினம்
அங்கே சுற்றி சுற்றி
வந்த மூதாட்டி பெரியவர்
வாலிபனிடம் சொன்னதை
கேட்டு கொண்டவள்.

நான் செய்த பாவத்தின்
பலன் நன்றாய் இருப்பதை
கண்டு மன நிறைவுடன்
கண்ணீர் வழிய நின்றாள்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (28-Jun-18, 3:24 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 99

மேலே