அறுபதிலும் காதல்

உன் கைக் கோர்த்து
நடக்க ஆசை..
ஆனால்
கைக் கோர்த்து நடக்க
பேரப்பிள்ளை வந்துவிட்டான்
தயங்கி நிற்கிறேன்..

உன்னால் குனிந்து
சரிசெய்ய முடியாத
உன் புடவை மடிப்புகளை
சரிசெய்துவிட ஆசை..
ஆனால்
மருமகள் வந்துவிட்டாள்
தயங்கி நிற்கிறேன்..

உன்னை இருச்சக்கர
வாகனத்தில் பின்னமர்த்தி
உலா வர ஆசை..
ஆனால்
வயதாகிவிட்டதாம்
வாகனம் அனுமதியில்லை
என்று மகன் சொல்ல
தயங்கி நிற்கிறேன்..

நீ வலியோடு படியேறும் பொழுது
உன்னை தூக்கி வர ஆசை..
ஆனால்
மகன் மகனெடுத்து
பக்கத்தில் இருக்க
தயங்கி நிற்கிறேன்..

எனக்கு விருப்பம் இல்லையென்றாலும்
உன்னோடு கோவிலுக்கு வருகிறேன்..
தனிமையில் உன்னோடு
நடக்கும் ஆசையில்..

நீ என் அருகில் இருந்தும்
பழைய நினைவுகளோடு
இன்னும் வாழ்கிறேன் நான்

உனக்காக...

எழுதியவர் : கலா பாரதி (29-Jun-18, 12:11 pm)
சேர்த்தது : கலா பாரதி
Tanglish : arupathilum kaadhal
பார்வை : 86

மேலே