266 புறங்கூற்றாளர் பொல்லாப் பகைவர் – புறங்கூறல் 8
அகவல் துள்ளலோசை (வெண்டளையும், கலித்தளையும்) உடைய கலிப்பா
வாட்படைவாங் குவரிலரேன் மாறுவரார் புறங்கூற்றைக்
கேட்பவர்தா மிலரென்னிற் கிளப்பவரார் பிறன்பழியை
வேட்பொடுசொல் வோரவதற்கு மேவலரென் றுனியதனைக்
கோட்புறலி லாதுசினங் கொண்டகற்றல் நெறியாமே. 8
– புறங்கூறல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை::
”வாள் ஆயுதத்தை வாங்குபவர் இல்லையென்றால் விற்பவரும் இல்லை. அதுபோல், புறங்கூறுதலைக் கேட்பவர் இல்லையென்றால், புறம் சொல்பவரும் இல்லை.
மற்றவருடைய குற்றத்தை விரும்பிப் புறங் கூறுவோர், கூறப்படுவார்க்குப் பகைவரென நினைத்து, அதனைக் கவனமுடன் கேட்டுக் கொண்டிராமல் அவரைச் சினந்து அகற்றுவதே முறையாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
மாறுவார் - விற்பார். வேட்பொடு - விருப்பொடு. மேவலர் - பகைவர்