திகிலும் ருசிக்கும் 8

திகிலும் ருசிக்கும் 8
மிகுந்த யோசனைக்கு பின்பு கூற ஆரம்பித்தாள்...

என் வீட்ல நான் அப்பா மட்டும் தான், அப்பா அதிக கண்டிப்போட இருப்பாரு, அவருக்கு தேவையானதெல்லாம் ஒழுக்கம்,கட்டுப்பாடு மட்டும் தான்...அம்மா சரியா எனக்கு நினைவிலில்லை, எனக்கு நினைவுல இருக்கறதெல்லாம் அம்மா உடம்பு சுகமில்லாம படுக்கையில கிடந்தது தான்,அப்பா அம்மாவை அவ்ளோ பாசமா பார்த்துப்பாரு, அம்மா மேல அதிக அன்பு வச்சிருந்தார், ஆனா அம்மா காலமான பின்னாடி அப்பாவோட அன்பு எல்லாம் அம்மாவோடவே போய்ட்டது... அப்பா என்ன செல்லமா கொஞ்ச மாட்டாரான்னு ஏக்கமா இருக்கும், ஆனா அது நடக்கல....

கொஞ்சம் நஞ்சம் என்னோட பேசிகிட்டு இருந்தவரு நான் வயசுக்கு வந்தப்பறம் என்னோட பேசுறதையே நிறுத்திட்டாரு, அதுவரை பள்ளிக்கூடம் சொர்க்கமா நினைச்சி வாழ்ந்தேன், ஆனா அதுக்கப்புறம் அதுவும் இல்லாம போச்சி, வயசு பொண்ணு வெளில போகக்கூடாதுனு வீட்டுக்குள்ளேயே இருக்க சொன்னாரு, அது ஒரு நரகம்...

என் உலகம் கதை புத்தகம் தான், என் பள்ளிக்கூட தோழி தான் கதை புத்தகத்தை படிக்க கொடுப்பா....அந்த கதைகள் தான் என் பொழுதுபோக்கு, என் சந்தோசம், என் சோகம், என் காதல்...அத்தனையும் அந்த கதைகள் தான், அந்த கதைகளோடு வாழ ஆரம்பிச்சேன், அப்பா பேசலன்னு கவலை இல்லை, வீட்டுக்குள்ள அடஞ்சி கிடக்கறேன்னு வருத்தம் இல்லை..

வானத்துல பறக்கறாப்புல இருக்கும், அந்த கதை புத்தகங்களை தாண்டி எதுவும் தேவைப்படலை, ஒரு கட்டத்துல அப்பாவே தேவைப்படல, அப்போ தான் அப்பா என்ன கல்யாணம் பண்ண சொல்லி நெருக்கடி கொடுத்தாரு, நான் மறுத்தேன், அப்பா விடல...இந்த கதைகளாலே தானே நீ என் பேச்சை கேட்க மறுக்கற, இனி இந்த புத்தகம் எதுவும் இங்க இருக்க கூடாதுனு புத்தகத்துக்கு தீ வச்சாரு, அத்தனையும் எரிஞ்சி போச்சி, என் கண்ணு முன்னாடியே அத்தனையும் வெறும் சாம்பலா மாறிட்டு இருந்துச்சி, அதை என்னால தாங்க முடியல, அப்போ தான் புத்தகத்தில் இருந்த நெருப்பு வீடு முழுக்க பரவிக்கிட்டு இருந்ததை அப்பா கவனிச்சாரு, என்ன வெளில இழுத்துட்டு போக முயற்சி செஞ்சாரு, ஆனா அப்பாவை வெளிய தள்ளி கதைவடைச்சேன், என்னை சுத்தி கரும்புகை...அந்த கரும்புகைல என் மூச்சு கரைஞ்சி நான் அங்கிருந்து விடுதலை அடஞ்சிட்டேன்....
தன் கதையை கூறிமுடித்துவிட்டு மோகினி மௌனம் காக்க, என் மனமோ கனமானது...ஒரு இளம்பெண் எந்த சுகமும் காணாது கதையை கட்டிக்கொண்டு இப்படி காலம் ஆகிவிட்டாளே, பாவம்....மோகினியின் மேல் பரிதாபம் தொற்றிக்கொண்டது...ஆனால்....

அவள் இறந்ததிற்கான காரணம் புரிந்துவிட்டது, மீண்டும் உருவெடுத்ததற்கான காரணம் என்னவாய் இருக்கும், மண்டைக்குள் அடுத்த கேள்வி முளைக்கவே அதையும் தெரிந்துகொள்ள மனம் ஆர்வமானது...ஆனால் அதையும் அவளாகவே சொல்லட்டுமே என்று மீண்டும் பொறுமையாக காத்திருந்தேன்...

ஒரு பெருமூச்சுக்கு பின் மோகினி என்னை பார்த்தாள்...கதைகளோடவே என் காலம் முடிஞ்சிடுச்சினு நினச்சேன், ஆனா என் ஆழ்மனசுல இருந்த ஏக்கம் என்னை மோட்சம் அடையவிடாம இங்க உலாத்த விட்ருச்சு, தனிமையில வாழ்ந்த எனக்கு உறவுகளோடு இணக்கமா வாழணும்னு ஆசை, அப்படி ஆசையை தணிச்சிக்க நான் உலாத்தின போதுதான் கனகம்மாவை பார்த்தேன், என் அம்மாவை போல ஒரு உணர்வு... குழந்தைக்காக அவங்க ஏங்கினது என்னை என்னவோ பண்ணிடுச்சி...அவங்க கூடவே ஓட்டிகிட்டேன் , கூறிமுடித்துவிட்டு மெல்ல என்னை பார்த்து என் முகத்தில் எதையோ தேடினாள்....

அவள் கனகாவை அம்மாவாக நினைத்தேன் என்று சொன்னதும் எனக்கு எதையோ கொண்டு என் கன்னத்தில் அறைந்ததை போல் இருந்தது...கனகா அம்மாவென்றால் நான் அப்பாவாயிற்றே...அன்புக்காக ஏங்கி ஒட்டிக்கொண்டவளை கொஞ்ச நேரத்தில் எப்படியெல்லாம் ரசித்துவிட்டேன், சீ என்று இருந்தது...இருந்தாலும் என் மனஓட்டத்தை வெளிகாட்டிக்கொள்ளாமல் சமாளித்தேன்...

"மோகினி, நீ எங்களை அப்பா அம்மாவா நினைச்சிருந்தா இப்படி ஓடி ஒளிஞ்சி எங்களை பயமுறுத்த என்ன அவசியம் இருக்கு?" சரியான கேள்வியை தான் கேட்டிருக்கிறேன் என்று தோன்றவே கேட்டு முடித்ததும் மனதுக்குள் எனக்கு நானே சபாஷ் போட்டுக்கொண்டேன்...

சின்ன மௌனத்திற்கு பின் மோகினி சபாஷ் போடும்படியான சரியான பதிலை சொன்னாள்..

“யாரும் மோகினியை மகளா ஏத்துக்க துணியமாட்டாங்களே...”

சரி தான், இந்நேரம் மோகினியை கனகா பார்த்திருந்தால் பேயோட்டுபவனையும், பூசாரியையும் மணிக்கொருமுறை வீட்டுக்கு அழைத்துவந்து வீட்டையே மடம் ஆக்கியிருப்பாள்...மோகினி சொல்வதும் சரிதான்....

"இருந்தாலும் நேத்திலிருந்து என்னை நீ ரொம்பவே ஓடவிட்டுட்டே, அது ஏன்?"

“இப்படி எல்லாத்துக்கும் காரணம் தேடிட்டே இருந்தா எப்படி...உங்களோடவும் அம்மவோடவும் கொஞ்சம் விளையாடினேன்...”

“அது சரி, இனி இப்படியெல்லாம் விளையாடிடாதே, என் இதயம் தாங்காதும்மா...”

இந்தமுறை மோகினி மெல்ல சிரித்ததால் என் வீடு தப்பியது...

கொஞ்ச நேரமாக என் மனதில் குறுகுறுத்ததை வாய்ப்பொறுக்காமல் மோகினியிடம் கேட்டே விட்டேன்...

"என்னை பார்த்தா உனக்கு அப்பா மாதிரியா தெரியறது, அவ்ளோ வயாசாயிடுச்சா என்ன? கிழவன் ஆகிட்டேனா"

கொஞ்சம் பலமாக சிரித்தாள்...

“உங்களை அப்பான்னு கூப்பிடலையே, ஆனா கனகாம்மாவை பார்த்தா மாத்திரம் மனசு உருகிடுது, அவங்க குழந்தை ஏக்கமும் என் அம்மா ஏக்கமும் ஒண்ணா கலந்திட்டதால இருக்கலாம்....”

“எப்படி வேணா இருக்கட்டும், நீ என்னை அப்பாண்ணே கூப்பிடலாம், நான் ஒன்னும் தவறா நினச்சிக்க மாட்டேன்...பெருந்தன்மையாக அனுமதி கொடுத்தேன்..”

"சரிப்பா, இப்போ உங்களுக்கு காபி போட்டு தரட்டுமா"

மோகினியின் இந்த கேள்வியில் அதுவரை இருந்த கடினமான சூழ்நிலை கரைந்து குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்துவிட்டேன், இந்த காப்பியால் தானே காலையில் இருந்து கதிகலங்கிப்போனேன்....நடந்ததை நினைத்து பார்க்கையில் அத்தனையும் வேடிக்கையாக இருந்தது....

இன்னும் மீதம் இருக்கும் இரண்டு நாளும் மோகினியோடு வேடிக்கையாகவே கழியும் என்று தோன்றியது, இதுவரை மோகினி பார்க்காத அப்பா பாசத்தை அவள் உணர்ந்ததாக வேண்டும், அதை உணர்த்தியாக வேண்டும் என்று மனதுக்குள் முடிவெடுத்தேன்...

அப்பொழுது தான் என் மொபைல் சிணுங்கியது, போனை எடுத்து பேசினால் அடுத்த திருப்பம் காத்திருந்தது...

எழுதியவர் : ராணிகோவிந் (21-Jul-18, 2:07 pm)
பார்வை : 500

மேலே