வயிற்று வலி

சாப் லிமாவு சிகப்பு தையலத்தின் எரிச்சல் அவள் கையை எரித்துக்கொண்டிருந்தது. வயிற்று வலி அவளை வாட்டி வதைக்க கண்களோரம் கசிந்த கண்ணீர் "ஏன் பெண்ணாய்ப் பிறந்தோம்", என யோசிக்க வைத்தது.

காலையிலே குளியறைக்குச் சென்றதும் " வந்துருச்சுடா கேடு", என புலம்பிக்கொண்டே வெளியானாள்.

சாமியறைக்குள் நுழைந்து மாதவிடாய் வலியைப் பனித்த சடையனிடம் கூறி வயிற்றில் வெந்நீறு பூசி வேலைக்குப் புறப்பட்டாள்.

ஒரே சமயம் வயிற்றில் 100 அம்புகள் குத்திக்கொண்டிருப்பது போன்ற உணர்வோடே மனுவல் வாகனத்தை அழுத்திச் செலுத்தினாள்.

காலையிலே மேனேஜரிடம் வாங்கிய ஏசு அவளுக்கு மேலும் வலியை உயர்த்தியது. லீவு போட்டு கட்டிலில் சுருண்டு படுக்க நினைத்த அவளுக்கு மாத சம்பளத்தை எண்ணி அழுகையே வந்தது.

மாதவிடாய் போது அவளின் மறுபக்கம் தென்படும். சின்ன சின்ன விஷயமும் அவளை ஆத்திரமடையச் செய்யும்.

சக ஊழியர்கள் பேசி சிரித்துக்கொண்டிருந்தது அவளுக்கு ஒரு வித எரிச்சலை ஏற்படுத்தியது. அந்த அலுவலக குளிரூட்டியை அடித்து நொருக்கலாம் போல இருந்தது அவளுக்கு.

வேலை முடிந்ததும் மூன்று மணி நேர கோலாலம்பூர் மாநகரின் சாலை நெரிசலில் சிக்கி வீடு வந்தடைந்தவள் சாப் லிமாவு தையலத்தைப் பரவலாக வயிற்றில் தேய்த்து படுத்தாள்.

வலியால் துடித்த அவளது கூந்தலைக் கணவன் கோத அவனை இருக்கக் கட்டி அணைத்து தேம்பி தேம்பி அழுதாள். "இது வலிக்கலங்க.. ஒவ்வொரு மாசமும் இத பாக்குறப்போ உங்க அக்கா சொன்ன மலடின்ற வார்த்ததா வலிக்குது" என்றவளைச் சமாதானப்படுத்தி அவன் கண்ணில் வழிந்த நீரை அவளுக்குத் தெரியாமல் துடைத்தான்.

எழுதியவர் : கனிமொழி ஞானசேகரன் (21-Jul-18, 6:13 pm)
பார்வை : 184

மேலே