புதுக்கவிதை

"இன்றைக்கு நாம புதுக்கவிதை படிக்கப்போறோம். அதனால வகுப்புல சில மாற்றம் செய்ய போறேன். அப்போதா உங்களுக்குக் கவிதை எழுத வரும்.", என்றார் விரிவுரையாளர்.

அவர் செய்த சிறு மாற்றம் என்னவென்றால் லாஸ்ட் பென்ஜில் அமர்ந்திருந்த பசங்களை எல்லாம் பெண்கள் அருகே இடம் மாற்றி அமர வைத்தார்.

சிவாவை நற்றமிழ் அருகே அமர சொன்னபோது பசங்க அனைவரும் சிவாவின் பெயரை உரக்க கத்தி கைதட்டி சிரித்தனர்.

அவர்களிடம் கோவமாய் தன் முகத்தைக் காட்டிக்கொண்டாலும் அவன் மனதினுள்ளே அவன் போட்ட குத்தாட்டம் பிரபு தேவா நடனத்தையே மிஞ்சியது.

விரிவுரையாளர் புதுக்கவிதை பற்றிய விளக்கம் கொடுத்தப் பின் அனைவரையும் புதுக்கவிதை ஒன்றனை எழுத சொன்னார்.

சில நிமிடங்கள் கழித்து விரிவுரையாளர் அனைவரின் புதுக்கவிதையை வாசிக்கப்போவதாகக் கூறிய போது அனைவரும் உஷாராய் ஆக சிவா மட்டும் பேனா மை சொட்ட சொட்ட கவிதை எழுதினான்.

அனைவரும் சிவாவையே உற்று நோக்க விரிவுரையாளர் அவன் எழுதிய தாளைக் கைப்பற்றி கவிதையை வாசித்தார்.

அவனது காதல் கவிதையை ஓசை நயத்துடன் விரிவுரையாளர் வாசித்தபோது பெண்கள் அனைவரும் உருகி உருகி இரசித்தனர். இறுதி வரியை வாசித்தபோது " சார்.. போதும் சார்", என்று சிவா உரக்கக் கத்த விரிவுரையாளர் இறுதி வரியை அப்படியே விழுங்கினார்.

வாழ்த்துக் கூறி அவன் தோளைத் தட்டி கொடுத்தார் விரிவுரையாளர். வகுப்பு முடிந்து அனைவரும் வெளியேறியபோது நற்றமிழ் சிவாவிடம் "உங்க கவிதை ரொம்ப அருமையா இருக்கு. அந்த கடைசி வரி மட்டும் படிக்கட்டுமா? என் கவிதை படிச்சு பாருங்க", என கூறியபோது சிவா கவிதையை நற்றமிழிடம் கொடுத்தான்.

கவிதையை இருவரும் மனதிற்குள்ளே வாசிக்க இறுதி வரியைக் கண்டதும் இருவரின் முகத்திலும் புன்னகை பூத்தது.

நாணம் கொண்ட நற்றமிழ் தன் முகத்தை மூடிக்கொண்டு ஓடினாள். வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே சிவாவிற்கு வார்த்தைகள் சிக்கிக் கொண்டது.

நான் வாசித்த புதுக்கவிதையில் சிறந்த கவிதை நற்றமிழ். என்னை மீண்டும் வாசி வாசி என்ற புதுக்கவிதை சிவா.
இருவரின் புன்னகைக்கும் காரணமான இறுதி வரிகள்.

எழுதியவர் : கனிமொழி ஞானசேகரன் (21-Jul-18, 6:15 pm)
Tanglish : puthukkavithai
பார்வை : 205

மேலே