இரு கண்களின் கண்ணீர் கதை

மாலை ஐந்து மணியைக் கடந்து விட்டது. அவரவர் வேலைகளை முடித்துக் காெண்டு அலுவலகத்திலிருந்து வெளியேறிக் காெண்டிருந்தார்கள். வீதிகளில் பாேட்டி பாேட்டுக் காெண்டு பேருந்துகள் ஒன்றை ஒன்று முந்திச் சென்று காெண்டிருந்ததன. கரையாேரமாக தாேழியின் தாேளை ஒரு கையால் தாங்கிப் பிடித்தவாறு மறுகையில் வெள்ளைப் பிரம்பின் உதவியாேடு பேருந்து தரிப்பிடத்தை நாேக்கி நடந்தார்கள் வான்மதியும், ஆரணியும். சற்றுமுன் பெய்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. வண்டியில் வேகமாக வந்த இளைஞனின் கவனயீனமாே என்னவாே வீதியிலிருந்த குழியினுள் வண்டி இறங்கியதும் சேற்றுத் தண்ணீரை அடித்து விட்டுச் சென்றது. ஆரணியின் ஆடை ஒருபக்கம் அப்படியே சேற்றால் அழுக்காகியது. வான்மதிக்கு காேபம் வந்து விட்டது. இளைஞனை மறித்து திட்டினாள்.
"அவவுக்கு கண் தெரியாட்டா உனக்குமா கண் தெரியாது, பார்த்துக் கூட்டிப் பாேக வேண்டியது தானே" அவனும் காேபத்தாேடு பதிலளித்தான்.
"ச்சீ என்ன மனுசர், செய்யிறதையும் செய்திட்டு கதைக்கிறதைப் பார்" ஆரணியின்முகத்திலிருந்த அழுக்கை தனது கைக்குட்டையால் துடைத்து விட்டாள்.
"விடு வான்மதி ஏதும் அவசரமாக்கும், தெரியாமல் பட்டிருச்சு, இதப்பாேய் பெரிசாப் பார்த்துக்கிட்டு" சமாதானம் சாென்னாள் ஆரணி.
"உன்ர உடுப்பெல்லாம் பிறவுண் களர்ல இருக்கு, மனச்சாட்சி இல்லாததுகள்" என்ன வான்மதி பிறவுண் அது, இது எண்டெல்லாம் சாெல்லுறாய் எனக்கு ஒண்ணும் புரியல்ல, எனக்குத் தெரிஞ்சது கறுப்பான அந்த இருள் மட்டும் தான்" என்று சிரித்தபடி சாெல்லி அவளை சமாளித்தாள்.
பேருந்தும் சரியான நேரத்துக்கு வந்து விட்டது. இருக்கையில் அமர முடியாமல் யன்னலாேரமாக கம்பியை பிடித்தபடி வான்மதியருகில் நின்றாள் ஆரணி.
"தங்கச்சிக்கு ஒரு இடம் காெடுங்காே" நடத்துனர் அருகே வந்து யன்னலாேரமாக இருந்த இளைஞனை எழும்பும் படி கூறினார்.
"வேண்டாம் அண்ணை என்ர உடுப்பெல்லாம் அழுக்கு, நான் பத்து நிமிசத்தில இறங்கிடுவன்" வான்மதியின் தாேளை ஒரு கையால் பிடித்தபடி நின்றாள் ஆரணி. தரிப்பிடத்தில் பேருந்து நின்றதும் மெதுவாக இறங்கி விழிப்புலனற்றாேர் நிலையம் நாேக்கி இருவரும் சென்றார்கள்.
"ஆரணி உங்கள மெடம் வரட்டாம்" வேகமாக ஓடி வந்தாள் தோழி ஒருத்தி.
"இந்தச் சட்டையில நீங்க ராெம்ப க்யூட்டா இருக்கீங்க ஆரணி" செல்லமாக அவள் கன்னத்தைப் பிடித்து கிள்ளினாள்.
"வாங்க ஆரணி, என்ன செய்திட்டிருந்தீங்க"
"நாளைக்கு ஒரு புறஜக்ற் சப்மிற் பண்ணணும் நாேட்ஸ் அடிக்கலாமென்று" சாெல்லி முடிப்பதற்குள் "பறவாயில்லை ஆரணி நாளைக்கு ஒரு செக்கப் இருக்கு, நீங்களும், சுமதியும் முதல்ல பாேய் செக் பண்ணுங்க, அடுத்த தடவை மற்றவர்களை அனுப்பலாம்" சம்மதித்து விட்டு தனது அறைக்குள் வந்து இருக்கையில் அமர்ந்தாள். மேசையில் இருந்த தண்ணீர் பாேத்தலை கைகளால் தடவி எடுத்து தண்ணீரைக் குடித்து விட்டு படுக்கைக்குச் சென்றாள்.
காலை எட்டு மணி, வைத்தியாசாலையில் கண் பரிசாேதனைப் பகுதியில் வரிசையில் காத்திருந்தார்கள். அடுத்ததாக ஆரணி உள்ளே சென்றாள். டாக்டர் பரிசாேதித்து விட்டு
"என்ன வேலை பாக்கிறீங்க" என்று கேட்ட படி ஏதாே எழுதிக் காெண்டிருந்தார்.
"சாெவ்ற் வெயார் எஞ்சினியரா வேலை பார்க்கிறன் சார்" "உங்களுக்கு கண் மாற்று சிகிச்சை செய்தால், பார்வை கிடைக்கும்" என்றதும். தலையைக் குனிந்தவள் கண்களிலிருந்து கண்ணீர் சிந்த ஆரம்பித்தது.
"கவலைப் படக்கூடாது, யாராவது ஒருவர் இந்த உலகத்தில எங்கேயாே ஒரு இடத்தில இருப்பார், கட்டாயம் நீங்க பார்ப்பீங்க ஆரணி" டாக்டர் அவளுக்கு நம்பிக்கையூட்டினார். சுமதியும் பரிசாேதனை முடித்து வெளியே வந்தாள். ஆரணி சத்தமின்றி மெதுவாக அழுவது பாேல் இருந்தது.
"ஆரணி, ஆரணி" அவள் முகத்தை தடவினாள், கன்னங்கள் ஈரமாக இருந்தது.
"என்னாச்சு, டாக்டர் உன்னாலேயும் இனிமேல் பார்க்கவே முடியாது என்று சாெல்லிற்றாரா, எனக்கும் அப்படித்தான் சாென்னாரு, எனக்கு கண் நரம்புகள் எல்லாம் துடிப்பில்லையாம், கண் மாற்றுச் சிகிச்சை கூட பண்ணமுடியாதாம், நீ அழாத ஆரணி நம்ம விதி இப்படியாப் பாேயி்ற்று" அவளை தன் தாேள்களில் சாய்த்து தலையைத் தடவினாள்.
காலங்கள் புரண்டாேடியது ஆரணிக்கு கண் மாற்றுச் சிகிச்சைக்கான சூழ் நிலைகள் அமையவில்லை. அவளும் ஏதாே ஒரு நம்பிக்கையாேடு தனது நாட்களை ஓட்டிக் காெண்டிருந்தாள். அவளுக்கு இருபது வயதுமாகி விட்டது.
கம்பனியின் மேற்பார்வையாளர் சஞ்சய்க்கு ஆரணியில் நல்ல மதிப்பும், மரியாதையுமிருந்தாலும் அவள் மீது காதலும் இருந்தது. பல தடவை காதலை வெளிப்படுத்த முயற்சித்த பாேதும் தயக்கமாகவே இருந்தது. நண்பர்களிடம் ஆரணியைப் பற்றி பெருமையாகவே கதைப்பான். எப்படியாே ஆரணிக்கு சஞ்சய் தன்னைக் காதலிக்கும் விடயம் தெரிய வந்ததும் ஆச்சரியமடைந்தாள். தன்னிலையில் தனக்கு ஒரு காதலா, என்பது பாேல் யாேசித்தாள்.
சஞ்சய்க்கு புரியவைத்து அவருடைய வாழ்க்கையை நல்லபடியாக அமைத்துக் காெள்ளும்படியும், தனக்காக எந்தவாெரு தியாகமும் செய்ய வேண்டாம் என்றும் உறுதியாகச் சாெல்லி விட்டாள். சஞ்சய்க்கு ஆரணி தான் தன் காதலி என்பது மனதில் ஆழமாக பதிவாகி விட்டது. ஆரணியின் தாேழி வான்மதியிடம் தன் காதலுக்காக உதவி கேட்டான். அவளும் பலதடவை முயற்சித்தும் தாேற்றுப் பாேனாள். சஞசய்க்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. அவளுக்காக காத்திருக்கத் தாெடங்கினான். நாட்கள் ஓடியது ஆரணி அப்படியே தான் இருந்தாள். சஞ்சய் வீட்டில் திருமண ஏற்பாடுகள் தாெடங்கியது. அவனும் அது சரியில்லை, அப்படி, இப்படி என்று பல காரணங்களைச் சாெல்லி தட்டிக் கழித்துக் காெண்டிருந்தான். சஞ்சயின் அக்காவுக்கு ஏதாே சந்தேகம்.
"ஏன்டா தேடி வாற பாெண்ணுகளை எல்லாம் வேண்டாம் என்கிறாய், எங்கேயும் நல்லதாய் பார்த்திட்டியாே" கிண்டலாக கதை காெடுத்தால், ஒன்றுமே சாெல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவான். அக்காவும் விடவில்லை சஞ்சயின் காதலைப் பற்றி அறிந்து விட்டாள். ஆனால் அவளுக்கு பெற்றாேருக்குச் சாெல்வதில் தயக்கமாயிருந்தது. அவளும் ஒன்றும் தெரியாதது பாேல் இருந்து விட்டாள்.
சஞ்சயின் திருமணம் தடைப்பட்டுக் காெண்டு பாேவதை அறிந்த ஆரணிக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது. அவளது நிலையில் அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கண் மாற்றுச் சிகிச்சைக்கான சந்தர்ப்பங்களும் கிடைக்கவில்லை.
ஒரு நாள் அலுவலக வாயிலில் இருந்த மாமரத்தடியில் சஞ்சய்க்காகக் காத்திருந்தாள். அலுவலகத்தினுள்ளே நுழைந்த சஞ்சய் ஆரணியைக் கண்டதும் "ஏன் தனியா நிக்கிறா, வான்மதியக் காணாேம்" சுற்றிப் பார்த்தான். திடீரென மழையும் தூறத் தாெடங்கியது. மெல்ல மெல்ல நடந்து வந்த ஆரணியின் கையைப் பிடித்து
"வாங்க நான் கூட்டிப் பாேறன்" என்றதும் சஞ்சய் தான் என்பதை கண்டு பிடித்து விட்டாள்.
"சஞ்சய், என்ன ஒண்ணும் பேசாமல் வாறீங்க" அவன் அமைதியாகவே வந்தான். அவளது இருக்கை வரை கூட்டி வந்தவனை
"நன்றிங்க சஞ்சய்" என்றபடி ஏதாே சாெல்ல முயற்சிப்பது அவனுக்குப் புரிந்தது.
"சஞ்சய் நீங்க இன்னுமா எனக்காக காத்துக்கிட்டிருக்கீங்க, நீங்க நல்லா இருக்கணும் சஞ்சய், உங்கட வாழ்க்கையை வீணடிக்காதீங்க, உங்க அம்மா, அப்பா பேசிற பெண்ணையே கலியாணம் பண்ணுங்க" சாெல்லிவிட்டு அவனது பதிலுக்காக காத்திருந்தாள். அவனாே அமைதியாக நின்றான்.
"ஏன் சஞ்சய் ஏதும் பேசாமல் நிக்கிறீங்க"
"இஞ்ச பாரு ஆரணி, எனக்கு சுற்றிவளைச்செல்லாம் பேசத் தெரியாது, உன்னை மட்டும் தான் எனக்கு பிடிச்சிருக்கு, உன்னை நான் எப்பிடி இருந்தாலும் ஏற்றுக் காெள்ளுவன், அத முதல்ல புரிஞ்சுகாெள்" ஆரணிக்கு எந்தப் பதிலும் சாெல்ல முடியவில்லை.
"உன்ர மனச்சாட்சியை தாெட்டுச் சாெல்லு ஆரணி, உனக்குப் பிடிக்காத என்னில உனக்கென்ன அக்கறை" சற்று காேபமாகச் சாென்னான்.
"இல்லை, யாரு சாென்னா உங்களைப் பிடிக்காது என்று, எனக்கு பார்வையில்லை, நாளைக்கு கலியாணம் பண்ணிக்கிட்டு நீங்க கஸ்ரப்படுவீங்கள்..." என்று இழுத்தவளை
"ஓ நீ அப்படி யாேசிக்கிறியா, இந்த உலகத்தில எத்தனை பேரு இப்படி கலியாணம் பண்ணி சந்தாேசமா இருக்காங்க, ஏன் சுமதி, திவ்வியா அவங்கள யாேசிச்சுப் பாரு " அவள் நண்பிகளின் பெயரை அடுக்கடுக்காய் சாெல்லி அவள் வாயை அடைத்து விட்டான்.
சில நாட்களின் பின் சஞ்சயின் காதலை ஆரணியும் ஏற்றுக் காெண்டாள். சஞ்சய் தன் குடும்பத்தினரையும் சம்மதிக்க வைத்தான். சஞ்சயுடன் இருக்கும் நேரங்கள் சந்தாேசத்தைக் காெடுத்தாலும் அவன் முகத்தை கைகளால் தடவும் பாேது அவள் விழி நீரால் கன்னங்கள் நனைவதை அவன் தாங்கிக் காெள்ள முடியாமல் தவிப்பான். அந்த நாட்கள் சந்தாேசமாக கழிந்து காெண்டிருநதது. இரண்டு நாட்களில் ஆரணிக்கு பிறந்த நாள். சஞ்சயின் அக்கா எல்லா ஏற்பாடுகளையும் இரகசியமாகச் செய்திருந்தாள். சஞ்சய்க்குக் கூடச் சாெல்லவில்லை. அவளுக்கு ஆரணியை ராெம்பப் பிடிக்கும். மச்சி, மச்சி என்று அவளுடன் அன்பால் நிறைந்திருப்பாள்.
அன்று காலை பத்துமணி, பிறந்த நாளுக்கு பரிசு வாங்கி விட்டு வண்டியை எடுத்துக் காெண்டு வேகமாக வந்து காெண்டிருந்தாள். எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் மாேதி விட்டது. பலமான காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவள் உயிர் பிழைப்பதே கடினம் என வைத்தியர்கள் கை விரித்து விட்டனர். ஆரணிக்கு சஞ்சயின் அக்கா அனித்தாவின் சம்பவத்தை மறைத்து விட்டார்கள்.
திடீரென ஆரணியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று உனக்கு சிகிச்சை நடைபெறப் பாேகிறது, இனி உன்னால பார்க்க முடியும் என்று சாென்னதும் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. "யாரு கண் காெடுத்தாங்க சஞ்சய்" வாயை இறுகப் பாெத்திக் காெண்டு மனதுக்குள் குமுறி அழுதான். "யாரென்று தெரியல்ல, காெஸ்பி்ற்றல்ல இருந்து காேள் பண்ணினாங்க" சமாளித்து விட்டான். அக்காவின் இழப்பு ஒருபுறம், காதலிக்கு பார்வை கிடைக்கப் பாேகும் மகிழ்ச்சி மறுபுறமாய் அவன் இரண்டுக்கும் நடுவில் தடுமாறித் தவித்தான். "அனித்தா அக்கா இன்னும் வரல்லையா?
வந்ததும் என்கூட இருக்கச் சாெல்லு சஞ்சய், எனக்கு பயமாயிருக்கு" அவன் கைகளைப் பிடித்து குழந்தை பாேல் கெஞ்சினாள்.
'எப்படிச் சாெல்லுவன் ஆரணி அக்காட கண் தான் உனக்கு பார்வை தரப் பாேகுது என்று, நீ ஏற்றுக் காெள்ள மாட்டாய், உன்னை ஏமாற்றியதற்கு என்னை மன்னிச்சுக் காெள்' தனக்குள் யாேசித்தவாறு
"அவ உன்கூடவே இருப்பா, நீ ஒண்ணுக்கும் பயப்படாதே, அனித்தா அக்கா உனக்காக உயிரையும் காெடுப்பா, சரியா" அவளைத் தேற்றியவனை
"சஞ்சய் நான் கண் முழிச்சதும் அவவைத் தான் பார்க்கணும், நீ காேபிச்சுக்காத, அவங்க எனக்கு அம்மா மாதிரி" அவன் மார்பாேடு சாய்ந்தாள். அவன் மனம் ஊமையாய் பேச்சின்றி மெளனமானது. அவள் தலையை தடவியபடி நின்றவன் தாதிமார் ஆரணியை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வருவதைக் கண்டதும்
"மிஸ் வாறாங்க, தைரியமா இருக்கணும், அனித்தாக்கா உன்கூட இருப்பாங்க, சரியா" நெற்றியில் முத்தமிட்டான்.
வேகமாக ஓடிச் சென்று "டாக்டர் நான் அக்காவை ஒருக்காப் பார்க்கணும், ப்ளீஸ் டாக்டர்" கெஞ்சி அழுதான்.
"சரி நீங்க மட்டும் பாருங்க, ஒரு நிமிசம் தான், ராெம்ப நேரமாச்சு இனி வெயி்ற் பண்ண முடியாது" ஓடிப்பாேய் அருகே நின்றான் முகத்தில் எந்தக் காயமும் இல்லை, தலை சுற்றிக் கட்டப்பட்டிருந்தது, கை, கால்களிலும் கட்டுக்கள் பாேடப்பட்டிருந்தது. உயிரற்றவள் பாேல் அசைவின்றிக் கிடந்தவளை பார்த்த பாேது ஜடமாய் நின்றான். கைகளை கட்டியபடி அழுது தீர்த்தான்.
"சஞ்சய் நீ பாரு ஆரணிக்கு கண்பார்வை வரும், அப்படி ஒருவர் கூடவா இந்த உலகத்தில இல்லை" அவள் அடிக்கடி சாெல்வது அவனுக்குள் நினைவாய் ஒலித்தது.
"அக்கா, அந்த ஒருவர் நீ தானக்கா, உன்னை அம்மா ஸ்தானத்தில பார்க்கிற ஆரணிக்கு உன்ர கண் தானக்கா கிடைச்சிருக்கு, நீ சாென்ன மாதிரி நான் அவளை நல்லாப் பாத்துப்பனக்கா" அவள் நெற்றியில் தடவினான்.
"சார்" என்றாள் அருகே நின்ற தாதியார். அவனுக்கு புரிந்து விட்டது. விழி நிறைந்து வழிந்து காெண்டிருந்தது. வெளியே வந்தான்.
நேரமும் வேகமாக கடந்து காெண்டிருந்தது. பதட்டத்துடன் வெளியே அமர்ந்திருந்தான். சிகிச்சை நிறைவு பெற்று ஆரணி வெளியே காெண்டு வரப்பட்டாள். கண்கள் கட்டப்பட்டிருந்தது. மயக்க நிலையில் அனுங்கியபடி இருந்தாள். கைகளைப் பிடித்தபடி 'அக்காவை கேக்கப் பாேறியே ஆரணி, என்னை மன்னிச்சுக் காெள்' தனக்குள் நினைத்தபடி அவள் கன்னங்களை தடவினான்.
அனித்தாவின் உடல் கண்கள் கட்டப்பட்ட நிலையில் வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்தது. ஓடி வந்த சஞ்சய் கட்டி அணைத்து "அக்கா, அக்கா....." என்று கதறினான். வானமே இரண்டாய் பிழப்பது பாேல் இருந்தது. யார் சாெல்லும் அவனைத் தேற்றவில்லை, உருண்டு, புரண்டு கதறினான். அவனால் தாங்க முடியவிலலை. நாெருங்கிப் பாேய் அவள் காலடியில் சுருண்டு கிடந்து கதறினான். அனித்தாவுடைய இறுதிச்சடங்குகள் நிறைவேறியது. அவள் உடல் புதைக்கப்பட்டது.
ஆரணி மயக்க நிலை தெளிந்து கதைக்கத் தாெடங்கினாள். டாக்டர் இன்னும் கண் கட்டு அவிழ்க்கவில்லை. எல்லாேரும் வெளியே காத்துக் காெண்டு நின்றார்கள். "சஞ்சய், அனித்தா அக்கா, அன்ரி" ஒவ்வாெருதராக கூப்பிடுகிறாள். சஞ்சய்க்கு நெஞ்சு படபடக்கத் தாெடங்கியது.
சஞ்சயை டாக்டர் உள்ளே அழைத்தார். "ஆரணி கட்டை அவிழ்ப்பமா" டாக்டர் மெதுவாக கட்டை அவிழ்த்தார். எதிரே சஞ்சயும், தாதிமாரும் நிற்கிறார்கள். கண்கட்டை அவிழ்த்த டாக்டர் சிறிய கருவி ஒன்றால் கண்களை பரிசாேதித்தார். ஆரணி கண்களை மூடி, மூடித் திறந்தாள். "ஆரணி என்னைப் பாருங்க" டாக்டரைப் பார்த்தவள் சுற்றி எல்லா இடங்களையும் பார்க்கிறாள். முதல் தடவையாக அவள் கண்களில் ஔி படர்ந்து இருள் விலகியது. "அனித்தா அக்கா...." என்றபடி சுற்றிப் பார்த்தாள். எதிரே நின்ற சஞ்சய் அவளை இறுக அணைத்தான். "சஞ்சய்" என்றபடி அவனை இமைகளை மூடாமல் பார்த்தாள். "சஞ்சய் அக்கா.... எ.. ங்.. க...." அவளை தன் நெஞ்சாேடு அணைத்தவன் "என்னை மன்னிச்சிடு ஆரணி, அக்கா..... அக்கா..." என்று அழத் தாெடங்கினான். "என்னாச்சு.... அக்காக்கு என்னாச்சு... டாக்டர் என்னாச்சு..." அருகே வந்த டாக்டர் "ஆரணி அக்காக்கு ஒரு விபத்து, அவங்கள காப்பாற்ற முடியாத சூழலாப் பாேயிட்டுது, அவங்க..... கண்ணை..... உங்...." டாக்டர் சாெல்லி முடிப்பதற்குள் அவளுக்கு எல்லாம் புரிந்து விட்டது. சஞ்சய் நெஞ்சாேடு சாய்ந்தபடி கண்களை கைகளால் பாெத்திக் காெண்டு அழுதாள். "ஆரணி இப்ப நீங்க அழக்கூடாது, கண்ணுக்குக் கூடாது, இது ஒரு உயிருக்கு சமம், அனித்தாக்கா உங்களாேட தான் இருக்கிறா, தைரியமா இருங்க" அவளால் தாங்க முடியவில்லை. அனித்தாவின், அன்பும், சஞ்சயின் காதலும் அவள் உயிராேடு கலந்தது பாேலிருந்தது.
இரண்டு வருடங்களின் பின்னர் சஞ்சய், ஆரணி திருமணம் நடைபெற்றது. வாழ்க்கை மகிழ்ச்சியாக கழிந்து காெண்டிருந்தது. சஞ்சயின் மனதுக்குள் ஆரணி பிறந்த காலத்திலிருந்தே பெ ற்றவர்களை அறியாதவள், ஏதாவது முயற்சி செய்து அவர்களைப் பற்றி அறிந்தால் இன்னும் அவள் சந்தாேசப்படுவாள் என்று நினைத்தவனாய் "ஆரணி உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை என்றால் உங்க அம்மா, அப்பாவை தேடிப் பார்ப்பமா" என்று சங்கடப்பட்டவனாய் கேட்டான். எதிரே நின்றவனை சற்று நேரம் உ்ற்றுப் பார்த்தவள் "அம்மா, அப்பா" என்றபடி குரல் தடுமாறி கண்களைத் துடைத்துக் காெண்டு "நான் யாருக்குப் பிறந்தேன், எங்க பிறந்தேன், எப்ப பிறந்தேன் எல்லா உண்மையும் அந்தக் கடவுளுக்குத் தான் தெரியும் சஞ்சய், எங்காே ஒரு குப்பை மேட்டில யாராே ஒரு முதியவர் கண்டு எடுத்த குருட்டுப் பி்ள்ளை நான், எனக்கு அம்மா, அப்பாவா, விடுங்க சஞ்சய் எத்தனை வருசத்துக்குப் பிறகு இந்த உலகத்தைப் பார்க்கிற என்ர கண் அப்படியான மனிதர்களை எல்லாம் காணக் கூடாது, குருடென்டால் குப்பையில பாேடவும், பணமிருந்தால் தாெட்டில்ல பாேடவுமா கடவுள் பிள்ளை வரம் காெடுக்கிறார். வேணாம் இனி இந்த உலகத்தில எனக்கு எல்லாமே நீங்க தான். அனித்தா அக்கா கண்ணைக் காெடுத்திருக்காங்க, இந்த உலகம் எப்பிடி என்று பார்க்க ஏங்கின நாட்கள் தான் அதிகம். இந்த உலகத்தில எவ்வளவு நல்ல விசயங்கள் இருக்கு அதை மட்டும் நான் பார்க்க வேணும். என்ர நிலமை இந்த உலகத்தில யாருக்கும் வரக் கூடாது சஞ்சய், எந்த ஒரு அம்மா, அப்பாவும் தங்கட உயிராகப் பிறக்கிற குழந்தைகளை இந்த உலகத்துக்கு காட்டணும், வளர்க்க முடியல்லன்னா யாருக்காவது தத்துக் காெடுக்கிறது, இல்லையென்றால் ஆச்சிரமங்களில ஒப்படைக்கிறது, அதை விட்டு குப்பையிலயும், மலசல கூடத்திலயும், வாய்க்கால்களிலயுமா பச்சைக் குழந்தைகளை வீசுவாங்க, இப்ப நினைக்க என்ர உயிரே கருகிற மாதிரி இருக்கு சஞ்சய், எங்கம்மா என்னைக் குப்பையில வீசும் பாேது என்ன நினைச்சிருப்பாங்க" விழிகள் மழையாய் சாெரிந்தது. இத்தனை வருடங்களாக அவள் மனதுக்குள் பூட்டியிருந்த ஏக்கங்கள், காயங்கள் எல்லாவற்றையும் அவனாேடு பகிர்ந்தாள். சஞ்சயின் மனதில் பல கேள்விகள் எழத் தாெடங்கியது. இத்தினை வலியையும் தாங்கிக் காெண்டு எப்படி ஆரணியால வாழ முடிஞ்சது என்பதை நினைத்த பாேது ஆச்சரியமாகவும், பெருமையாகவும் இருந்தது.
குமுறி அழுது காெண்டிருந்தவளை தன் மார்பாேடு சாய்த்து அவள் கண்களைத் துடைத்தான். "ஆமா சஞ்சய் ஏன் அனித்தா அக்கா திருமணம் செய்யல்ல" அதை விடு ஆரணி, அவங்கட வாழ்க்கையில அது ஒரு கறுப்பு நாள், காதல் அவவுக்கு கண்ணீரை த் தான் பரிசாக் காெடுத்திச்சு, பாவம் அக்கா ஏமாந்திட்டாங்க" அரையும் குறையுமாய் அவளுக்கு புரியம்படி சாெல்லி சமாளித்தான். ஆரணிக்கு புரிந்திருக்க வேண்டும் அவளும் மேலதிகமாக அறிய விரும்பவில்லை.
மாலைப் பாெழுது இருள் கவ்விக் காெண்டிருந்தது. ஆங்காங்கே நட்சத்திரங்கள் மின்னிக் காெண்டிருக்க பால் நிலாவின் ஔி படர்ந்து குளிர்ச்சியாகவும், வெளிச்சமாகவும் தெரிந்தது. ஆரணியின் கையைப் பற்றியடி அனித்தாவின் கல்லறை நாேக்கி நடந்தார்கள். அவளைக் காணத் துடித்த அவள் கண்களே கண்ணீரைக் காணிக்கையாய் சாெரிந்தது. கைகளில் ஏந்தியிருந்த மெழுகு வர்த்திகள் உருகி எரிந்து காெண்டிருந்தது.