சிதிலமடைந்தேன்

சிதிலமடைந்தேன்..
******************
*ஆர்.சரண்யா

(பாழடைந்து இடிந்த நிலையில் உள்ள
கோவில் ஒன்றின் புலம்பல் வார்த்தைகள்)

வயதாகிவிட்டது..
கண்டுக்கொள்ளவும் ஆளில்லை..
கவனிக்கவும் ஆளில்லை..
காலம் எல்லாவற்றையும்
மறக்கவும் செய்கிறது..
மறையவும் செய்கிறது..
இன்னும் சில காலங்களில்
என் நிலையும் மறையலாம்..
மறக்கப்படலாம்..
உதிரப் போகும்
பழுத்த இலையின் உறவு
மரத்தின் கிளையில்
ஊசலாடுவது போல..
இறுதி மூச்சு காற்றை
உள்ளிழுக்க சக்தி இல்லாமல்
சிறிது சிறிதாய் சிதிலமடைந்துக் கொண்டே
இருக்கிறேன்..
சுடும் வெய்யலிலும்
குளிர் மழையிலும்
அழுது கிடக்கும் சிலைகளுக்கு
ஆறுதல் சொல்ல
வார்த்தைகள் இல்லாமல் போனது..
என்னை கட்டி எழுப்பி
உயிர் கொடுத்த-வனின்
பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு
புதர் செடிகளினூடே
புதைந்து போனதை
எத்தனையோ நாட்கள் தேடியும்
கிடைத்தப்பாடில்லை..
முகில் உரசி சென்ற கோபுரக் கலசம்
திருட்டுப் போன கதையை
ஊர் மக்கள் சிலர்
என்னை கடந்து போகும் போது
பேசுவதை கேட்டு
மனம் உடைந்து போகிறேன்..
என் அனுமதியின்றி
என்னை பற்றி வளர்ந்த
ஆலமரத்தின் மீது
நான் கோபம் கொண்டதுண்டு..
ஆனால்
இப்பவோ.. அப்பவோ.. என
இழுத்துக் கொண்டு கிடக்கும்
என் நாடித்துடிப்புக்கு
வேரூன்றி உயிர் கொடுத்து நிற்பதை நினைத்து
அமைதிக் கொண்டேன்..
சற்று குற்ற உணர்வாய் இருக்கிறது
பனித்துளிகளை
தன் தலையில் சுமந்து நிற்கும்
புற்களை பார்க்கும்போதெல்லாம்..
இருப்பினும் அவற்றிடம்
நான் உண்மையை கூற
முற்பட்டதில்லை..
அவைகள் சுமந்து நிற்பது
பனித்துளிகள் அல்ல..
என் கண்ணீர் துளிகள் என்று..
கடைசியாய் ஒரு ஆசை
சிதைந்த கோபுர இடுக்கிலே
இருக்கும் புறாக்குஞ்சுகள் இரண்டிற்கும்
இறக்கை முளைத்து பறக்கும் வரை
என் ஆயுள் கொஞ்சம் நீளட்டுமே..

எழுதியவர் : ஆர்.சரண்யா (26-Jul-18, 1:20 pm)
பார்வை : 85

மேலே