அப்பா
நிமிர்ந்த நெஞ்சும் நெருப்பு போன்ற பார்வையும்
அந்த சராசரி உருவத்தை அண்ணாந்து பார்க்க வைக்கும்
அந்த சிம்ம நடையில் அவன் தொழிலின்
நேர்மையின் வீச்சடிக்கும்
சந்திக்க நேரிட்ட மனித மொட்டுகளை
சிப்பிக்கு முத்தே எனத் தோள்களில் தூக்கிவைப்பான்
போதும் என்ற குழந்தைக்கு பரிமாறச் சொல்லி
தாயிடமே பரிந்துரைப்பான்
அன்பு பரிமாற உள்ளம் தடுமாறி
மழலை போல் கதை பேசுவான்
தவறு செய்தவரை தன் ஒலியின் அதிர்வைக்கொண்டு
மலை அதிர அவன் வீசுவான்
நட்பின் அழகை அவன் கற்பை சுமப்பதுபோல்
கரைந்தோடித் தோள் கொடுப்பான்
உறவின் எதிர்பார்ப்பையும் உரிமையாய் கையெடுத்து
பூரணமாய் பூர்த்திசெய்வான்
அவன் நூல்களை வாசிக்கும் அழகைக் கண்டு
இந்தப் பூமியே நின்று ரசிக்கும்
கலைகளில் ஆழ்ந்து நெகிழ்வதைக் காண
ஆழ் கடலும் கொந்தளிக்கும்
எதிரே நின்று இவன் ரசிகனாய் மாறி
அக்கறையோடு பேசுவான் பகைவன்
உன் போல் மனிதன் வேறெங்கும் இல்லை
நீ ஒருவனே என் தலைவன்