தமிழன்னையின் தவப்புதல்வன்- கருணாநிதி
![](https://eluthu.com/images/loading.gif)
திருக்குவளையின் திருமகனாய் அவதரித்து,
திருக்குறளின் பெருமகனாய் வளர்ந்து,
தாய்தமிழின் தலைமகனாய் பரிணமித்த
வாய்ச்சொல் வள்ளல் அல்லவே நீவீர்.
மாணவ நேசனாய் அரும்பிய இலக்கிய நெறி,
முரசொலியாய் குறளோவியமாய் மலர்ந்ததே.
கல்லக்குடியில் துவங்கிய போராட்டம்- நும்
கல்லறைவரை நீண்டதே உணர்த்தும் நீவீர் போராளியென
மந்திரிகுமாரனை (எம் ஜி ஆர்)காட்டியதுவும் நீவீர்.
பராசக்தியை (சிவாஜி) தீட்டியதுவும் நீவீர்.
அழகிரியால் ஈர்த்து பெரியார் அண்ணாவால்
ஏற்றப்பட்ட திராவிட சூரியன் நீவீர்.
நின்ற தேர்தலில் அனைத்திலும் வென்ற சோழன் நீவீர்.
பதின்முன்று முறை பேரவை பார்த்த பகலவன் தாமே
ஐந்து முறை அரசோச்சிய காவிய கதிரவன்.
காமராஜ் அண்ணா எம்ஜிஆர் என்று பெருஞ்சூரியர்கள் மத்தியில்,
சிறு நட்சத்திரமாய் தோன்றி செஞ்சூரியனாய் சுழன்றீரே.
இயக்கத்தை நடத்த உலகிற்கே இலக்கணம் நீவீர்.
தயக்கத்தை தகர்த்தெறிந்து தமிழினம் நடைபோட,
தரமான சிந்தனைகள் நயமான யோசனைகள்.
திராவிடம் தழைத்தெழ வேட்கையுடன் உழைத்திட்டீர்.
ஹிந்தி எதிர்ப்பு, பெண்டிர்க்கு சொத்துரிமை,
சமூக நீதிக்கு சமத்துவபுரம் கண்ட சாணக்கியன் நீவீர்.
திருவள்ளுவரை தரணி யுணர சிலை கண்டீர்,
கோட்டம் கட்டி குறளுக்கும் தமிழுக்கும் அணி செய்தீர்.
சில பிழைகளும் அதிலுண்டு மனக்குறைகளும் எமக்குண்டு.
இறுதிப்போரில் இறுதிக்காலத்தில் சற்றே இடறிபோனது ஒன்றதிலே.
என்னவாகிலும் தமிழ்த்தாயின் தவப்புதல்வன் நீவீர்.
தமக்கென வரலாற்றிலே உமக்குண்டு இடமதிலே.
தமிழுள்ளவரை தரணியில் நும்புகழ் தழைத்திருக்கும்.
வாழிய நும்புகழ் வாழிய வாழியவே.
து. கிருஷ்ணமூர்த்தி