உன் நினைவோடு நான்…

சில்லென்று வீசிய காற்று மெதுவாக விஸ்வநாதனின் முகத்தை தீண்டியது. இமைகள் இரண்டையும் மூடி கொண்டார், மனைவி பாக்கிய லட்சுமி மூடிய விழிக்குள் ஒரு கோடாய் தெரிந்து மறைந்தாள். சென்ற மாதம் இதே நாள் தான் '' என்னங்க நெஞ்சு கொஞ்சம் வலிக்குறாப்புல இருக்கு, '' என்று கணவனின் தோளில் சாய்ந்தவள் எழுந்திருக்கவே இல்லை. கணவனின் மடியிலேயே நிம்மதியாக இறுதி மூச்சை விட்டு விட்டாள் , ஆனால் அவளின் மறைவுக்கு பின்னால் விஸ்வநாதன் தான் இன்னும் பழைய விஸ்வநாதனாய் மாறவில்லை. கடமைக்கு சாப்பாடு ஒரு குளியல் பத்திரிக்கை என நடை பிணமாக அலைந்தார். நாளின் பாதி கட்டிலில் கழிந்தது. கனடாவில் உள்ள மகள் செந்தாமரையும் தந்தையை தம்மோடு வர பல தடவை கேட்டு சலித்து விட்டாள் . அவளுக்கும் இலங்கைக்கு வர முடியாத சூழ்நிலை. தந்தையின் தனிமை அவளை வெகுவாக பாதித்தது.
இருபத்தேழு வயதில் இளமையை உருவாக பதினெட்டு வயது பாக்கிய லட்சுமியை கரம் பிடித்த அன்று இருந்தே அதே நேசம் தான் அவள் இறக்கும் வரை விஸ்வநாதனிடம் இருந்தது. ஐம்பது வருட அன்யோன்யம். இரண்டு நாளுக்கு மேலாக இவர்களின் சண்டை நிலைத்தது இல்லை, இருவரில் ஒருவர் பச்சை கொடி பிடித்து சண்டையை முடிவுக்கு கொண்டு வருவார்கள். இருவருக்கும் தவ புதல்வியாய் பிறந்த செந்தாமரை கணவனுடன் கனடாவில் வசிக்கிறாள். அவளை பிரிந்த போது கூட உனக்கு நான் எனக்கு நீ என்ற அன்யோன்யம் அத்தம்பதியை பார்ப்போர் மெச்சும் அளவுக்கு வாழ செய்தது.
பழைய நினைவில் கட்டுண்ட விஸ்வநாதன் மனைவியின் புகைப்படத்துடன் மானசீகமாக உறவாடி கொண்டிருந்தார், புகைப்படத்தின் பின்னால் கத்தரி செடியில் பூ சிரித்து கொண்டிருந்தது. ஏதோ நினைவு வந்தவராக மனைவியின் மரக்கறி தோட்டத்தை ஜன்னலின் ஊடக எட்டி பார்த்தார், அவள் மறைந்ததில் இருந்து பார்போரேற்ற அனாதையாக வாடி வதங்கி இருந்தது. ஒரு மாதம் மனைவியை இழந்து இவர் தவித்தாலும் கடமைக்காவது உணவும் நீரும் இரைப்பையை நிரப்ப தான் செய்தது. ஆனால் இந்த செடி கொடிகள் தாயின்றி தவிக்கும் சேயாய் வாடி இருப்பதை பார்க்கையில் விஷ்வநாதனின் நெஞ்சில் சொல்லொணா வேதனை குடிகொண்டது. பாக்கிய லட்சுமி அவரை ஏக்கமாக பார்ப்பது போலொரு மனப்பிரம்மை. தாமதிக்காமல் பின்வாசல் கதவை திறந்தவர் குழாயை திறந்து தோட்டத்திற்கு நீரை பாச்சினார், நீரை கண்ட செடி கொடிகள் காற்றில் ஆடி மானசீகமாக நன்றி சொல்லியது.
பாக்கியத்தின் பொழுது கழிவது இந்த தோட்டத்தில் தான், வீட்டில் அவளை காணாவிடின் தோட்டத்திற்கு வந்து பார்த்தால் போதும் ஏதாவது ஒரு செடியோடு சிரித்து கொண்டோ சண்டையிட்டு கொண்டோ நேரத்தை கடத்தி கொண்டிருப்பாள். . விஸ்வநாதனுக்கு மனைவி வாயிற்கு ருசியாக சமைத்து போடும் மரக்கறி மட்டும் தான் வேண்டும் அதை வளர்க்க வேண்டும் என்ற என்னமோ அவற்றை பராமரிக்கும் என்னமோ அவருக்கு வந்ததில்லை, பாக்கியமும் கணவனிடம் உதவி கேட்டதில்லை. அவளால் முடிந்த அளவில் தோட்டத்தை அழகாக வைத்திருந்தாள். கடைசியாக கத்தரி செடியோடு பேசிவிட்டு கடைசியாக கணவனின் தோள் சாய்ந்தவள் தான். நினைவு மறுபடியும் மனைவியை சுழல மெதுவாக கணனியின் முன் அமர்ந்தார். 'ஹோம் கார்டன்' பற்றி பல தகவல்களை பெற்றார், மனைவிக்கு செய்யும் நன்றி கடனாய் தோட்டத்துடன் தன்னை இணைத்து கொண்டார். அவருக்கு தேவையான பசளைகளை மகள் கனடாவில் இருந்து பெட்டி பெட்டியாக அனுப்பி வைத்தாள். மகளுக்கும் தந்தை முன் போல் சிரித்து பேசுவதில் அலாதி மகிழ்ச்சி, அவரின் விருப்பத்திற்கு தடை விதிக்காமல் அவரின் நடவடிக்கைகளை மட்டும் கவனிக்க எடுபிடியாக ராமசாமியை வேலைக்கு வைத்து விட்டாள். பாக்கிய லட்சுமியின் தனி உழைப்பு விஸ்வநாதனின் கைபட்டு பல முன்னேற்றங்களை கண்டது, வெவ்வேறான பாத்திகளில் செடி கொடி என வேறாக நடப்பட்டு சிறந்த பலனையும் தந்தது. எண்ணி நான்கே மாதத்தில் கூடை நிறைய கத்தரிக்காய்க்களும், வெண்டிக்காய்களும், தக்காளியும் தோட்டத்தை மட்டுமல்ல இறந்து கிடந்த விஸ்வநாதனின் மனதையும் மகிழ்வித்தது.
மரக்கறிகளை நான்காய் பங்கு போட்டு ராமசாமி மற்றும் aஅக்கம் பக்கத்தாருக்கு ஒரு கூடையை ஒதுக்கினார். வருமானத்துக்கென ஒரு பங்கை ஒதுக்கினார். சமயலுக்கென மற்ற பங்கை ஒடுக்கி விட்டு எஞ்சிய பங்கை இணையத்தின் உதவியுடன் மணக்க மணக்க சமைத்தெடுத்து கொண்டு பாக்கிய லட்சுமியின் பிறந்த இடமான ''அன்னையே வாழ்வு'' அனாதைநிலையத்து பிள்ளைகளுக்கு அன்னதானமாய் வழங்க சென்றார். வயிறும் மனமும் நிறைய அந்த குழந்தைகளுடன் குழந்தையாக பாக்கிய லட்சுமியும் சாப்பிடுவது போல இருந்தது. அந்த சனிக்கிழமை அவரின் நான்கு மாத உழைப்பின் பயனை கண்ணுக்கு எதிரில் காணக்கிடைத்தது. அன்னையே வாழ்வு இல்ல குழந்தைகள் மாதத்தின் கடைசியில் விஸ்வநாதனின் வருகைக்காக காத்து கொண்டிருந்தது, விச்சு தாத்தா என்று குழந்தைகள் ஓடி வருகையில் சுவரில் மாட்டப்பட்ட பாக்கிய லட்சுமியின் புகைப்படம் முன்னதை விட இப்பொழுது பிரகாசமாக தெரிந்தது விஸ்வநாதனுக்கு.
முற்றும். ....

எழுதியவர் : மாஹிரா சிராஜ் (14-Aug-18, 9:34 pm)
பார்வை : 329

மேலே