மகளோடு மழலையாய்---ஆனந்தக் களிப்பு---
ஆனந்தக்களிப்பு :
வானவில் வண்ணங்கள் நீயே - என்றன்
வாசலில் வந்தாடும் அன்பான சேயே
கானகப் பூக்களின் தேனே - உன்றன்
கண்களில் நீந்திடும் வாவியின் மீனே...
வானம்போல் ஆசைகள் நீளும் - கொஞ்சும்
வாய்மொழி கேட்கையில் இன்பமே நாளும்
கானமுந் தந்திடு வாயே - என்னைக்
கங்கையின் தீர்த்தமாய் மாற்றிடுந் தாயே...
புன்னகை வீசியே வந்தாய் - வெள்ளைப்
பூமணங் காட்டிம யக்கமோ?... தந்தாய்
தென்றலாய் உள்ளத்தை நீயும் - மெல்லத்
தீண்டிட ஓடைக ளாயிரம் பாயும்...
நெஞ்சினில் நீயாடும் நேரம் - போன
நிம்மதி வந்திட ஓடிடும் பாரம்
பஞ்சென மார்பினில் சாய்ந்தாய் - உன்றன்
பால்மண எச்சிலோ டென்னிலுந் தோய்ந்தாய்...