கண்ணன் நினைவினில்---வஞ்சி விருத்தம்---

வஞ்சி விருத்தம் :

கண்ணன் நினைவிற் கருங்குயிலோ?...
புண்ணில் நெருப்புப் புகும்வலியிற்
கண்ணீர் நதியுங் கரையுடைக்கத்
தண்ணீர் மறந்தே தவமிருந்தாள்...

நெற்றிச் சுருக்கம் நெளிபுழுவாய்ச்
சற்றே உடலுந் தளர்நிலையாய்ச்
சுற்றி அணிந்த துகிலழுக்காய்க்
கற்றைக் குழலுங் கவினிழந்தாள்...

ஊடற் பொழுதோ?... உளமலர்ந்து
கூடற் சுகமோ?... குடைந்தெடுக்கக்
கோடைப் பருவக் கொடிமலராய்
வாடை இழந்து வருந்திநின்றாள்...

சுள்ளி மனமோ?... சூழ்கனலிற்
துள்ளி விழுந்துந் துன்பமெனும்
முள்ளிற் பனியாய் வீழ்ந்துடைந்தும்
உள்ளு யிரோடூ னுந்துடித்தாள்...

தன்னை வருத்துந் தனிமைநீக்கப்
புன்னை மரத்தின் புதுநிழலாய்
மன்னன் வருவான் மரைவிழிகள்
இன்னும் வழியில் இமைவிரித்தே...

எழுதியவர் : இதயம் விஜய் (22-Aug-18, 11:29 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 764

மேலே