கலைஞருக்கு கவியஞ்சலி

திருக்குவளை தந்த திருமகனே
திராவிட இயக்கம் பெற்ற பெருமகனே
பெரியார் சேர்த்த பெருஞ்சொத்தே
பேரறிஞர் தந்த பேனாமுத்தே..!

சமூகநீதி காத்த சாம்ராஜ்யமே
சமத்துவபுரம் தந்த சாணக்கியமே
முரசொலி கொட்டிய முதல்வனே
கலைத்துறை போற்றிய புதல்வனே..!

பகுத்தறிவு பேசிய பராசக்தியே
மடமைகள் நீக்கிய மனோகரனே
கோபாலபுரத்தின் கோமானே
செம்மொழித்தாயின் சீமானே

அடிதட்டுகளின் அன்பனே
நடுத்தரங்களின் நண்பனே
ஒடுக்கபட்டோரின் உரிமையே
பிற்படுத்தபட்டோரின் பெருமையே

கழத்தின் காவலனே
கவிதைகளின் காதலனே
அரசவை புலவனே
அறிவதனின் புதல்வனே

சாதனைகளின் சரித்திரமே
சரித்திரத்தின் சகாப்தமே
காவேரி கண்ட காவியமே
கலைத்துறை ஆண்ட ஓவியமே

மொழிகளின் தாயாம்
தமிழன்னை, அவளுக்கு
சேவகம் செய்தாய்
செம்மொழி பட்டமும் தந்தாய்..!

தமிழர்தம் பெருமையாம்
வள்ளுவன், அவனுக்கு
கோட்டம் அமைத்தாய்
வானுயர சிலையும் வடித்தாய்..!

சாதி பேதம் பெருங்கொடுமை
ஏற்றத்தாழ்வு எனும் மடமை
ஒழிக்க உழைத்த உன்கடமை
தமிழர் கண்ட தனிதிறமை

சூத்திரமெனும் பெருங்கடலிலே
சுயமரியாதை யிழந்து தவிக்கையிலே
கரைசேர்த்த கட்டுமரமே
தமிழ் குடிகாத்த தனியறமே

காவேரிக்கு போராடிய
உன்னை
காவேரியில் போரடவைத்தது
காலத்தின் பெருங்கொடுமை

விழியெல்லாம் ஒளி வீச
கையில் துண்டேந்தி நீபேச
கரகரக்கும் உன் காந்தகுரலில்
இனி எப்போதய்யா கவிகேட்போம்

எமனை ஏங்க வைத்த ஏகாந்தனே
மரணத்தை மன்றாட வைத்த மானுடனே
சரித்திரம் பேசும் உன் சாதனையை
அச்சாதனை சொல்லும் நீகடந்த சோதனையை

சூரியன் மறைந்தாலும் அதன்
சுடரில்முளைத்த விதைகள் மறைவதில்லை
கொடுத்தவன் நீ மறைந்தாலும்
கொடுத்தஉன் கொள்கைஅது மறைந்திடாது

பயம் வேண்டாம், பதட்டம் வேண்டாம்
நீ தந்த பகுத்தறிவை
பத்திரமாய் பாதுகாப்போம்
சென்றுவா செம்மலே..உயிர்பிரிந்த உடன்பிறப்பே...!

(கலைஞர் இறந்த 07/08/2018 அன்று எழுதியது)

எழுதியவர் : அக்பர் ஷரிஃப் (29-Aug-18, 7:18 pm)
சேர்த்தது : அக்பர்
பார்வை : 67

மேலே