யாதுமாகி நின்றாய் ஹைக்கூ கவிதைகள் நூல் ஆசிரியர் கவிஞர் சாந்தி திருநாவுக்கரசு, எம்ஏஎம்ஃபில், டிஜிடி, டிசிடிடிஎம் நூல் அணிந்துரை கவிஞர் இரா இரவி

யாதுமாகி நின்றாய்!


ஹைக்கூ கவிதைகள் !


நூல் ஆசிரியர் : கவிஞர் சாந்தி திருநாவுக்கரசு,
எம்.ஏ.எம்.ஃபில், டி.ஜி.டி., டிசிடிடி.எம்.


நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.



******

நூலாசிரியர் கவிஞர் சாந்தி திருநாவுக்கரசு அவர்கள் மாதந்தோறும் மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி.வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவிதை பாடி வருபவர். பட்டங்கள் பல பெற்றிருந்த போதும் தமிழின் மீதுள்ள பற்றின் காரணமாக கவியரங்கில் கவி பாடி முத்திரை பதித்து வருபவர். புதுக்கவிதை மட்டுமல்ல, ஹைக்கூ கவிதைகளும் சிறப்பாக வரும் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக வந்துள்ள நூல் இது.



நிலவே! உனக்கு வெள்ளைப் புடவை
அங்கும் விட்டு வைக்கவில்லையா?
இந்த சமூகன் உன்னை!



விதவைகளுக்கு வெள்ளை உடை தந்து அவர்களை தனிமைப்படுத்திய, துன்பப்படுத்திய சமூகம் வானில் உள்ள நிலவிற்கும் வெள்ளை உடை தந்து விட்டார்களோ? என எள்ளல் சுவையுடன் பெண்ணுரிமை உணர்த்தி உள்ளார். தற்போது வெள்ளை உடை ஒழிந்து வருகின்றது. காரணம் தந்தை பெரியார்.



மனிதா! மனது வை!
மழை கெஞ்சியது
வீணாகப் போகிறேனே!



உண்மை தான். மழை நீர் சேமிப்பு, விழிப்புணர்வு நம் மக்களுக்கு வரவில்லை. சட்டம் போட்டு கட்டாயமாக்கிடல் வேண்டும். மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு விதைத்தமைக்கு நன்றி.



அத்தனைக் காதலா?
உரசியதும் பற்றியதே
தீக்குச்சி!



கவிப்பார்வை என்பது தான் தீக்குச்சி பலமுறை பற்ற வைத்து இருப்போம். நமக்கு தோன்றாத எண்ணம் நூலாசிரியர் கவிஞர் சாந்திக்கு தோன்றியுள்ளது. தோன்றிய சிந்தனை ஹைக்கூவாக மலர்ந்துள்ளது. வித்தியாசமான சிந்தனை, பாராட்டுக்கள்.



பொறுமைக்கும் கோபத்துக்கும்
சண்டை வென்றது கோபம்
விளைவு? சிறைச்சாலை!



சினம் காக்க என்பதை சிக்கனமான சொற்களுடன் உணர்த்தி உள்ளார். உண்மை தான். சில நிமிட கோபத்தை அடக்காமல் குற்றம் செய்து விட்டு கம்பி எண்ணிடும் சிறைவாசிகளை நினைத்துப் பார்த்து மற்றவர்கள் சினம் காக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது சிறப்பு.



நீ கனவில் வருவாய்
என்பதற்காகவே தூக்கத்தை
நான் விரும்புகிறேன்!



காதல் ஹைக்கூ கவிதைகள் நிரம்ப உள்ளன. பதச்சோறாக சில மட்டும் உங்கள் ரசனைக்கு. மற்றவை நூலின் உள்ளே சென்று காண்க! நேரில் தலைவன் வர முடியாத போது கனவிலாவது வரட்டும் அதற்கு தூக்கம் வேண்டும் என்கிறார். நன்று.



சொட்டுக்கள் கூட
சொத்துக்கள் ஆனது
சொட்டு நீர்ப் பாசனம்!



சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள். சொட்டு நீர் பாசனம் என்பது தண்ணீர் மேலாண்மை ஆகும். உழவர்கள் சொட்டு நீர் பாசனத்தின் நன்மை உணர்ந்து முன்வர வேண்டும் என்று உழவுக்கும் நல்வழியை ஹைக்கூவால் காட்டி உள்ளார். பாராட்டுக்கள்.



உயிர் வாழ்ந்தால் பச்சை
உயிர் பிரிந்தால் மஞ்சள்
உதிர்ந்த இலை!



உதிர்ந்த இலை பழுத்து மஞ்சளாக இருப்பதைப் பார்த்து இருக்கிறேன். உயிர் போனதால் நிறம் மாறி உள்ளது என்பதை இந்த ஹைக்கூ படித்த நேரத்தில் தான் உணர்ந்தேன். பிரிந்த சோகத்தால் உயிரை இழந்தது இலை என்றும் பொருள் கொள்ளலாம்.



யாரின் பிரிவால்
இவ்வளவு அழுகை?
மழை!



முகவரிகள் தொலைந்ததால் முகிலினங்கள் அழுகின்றதோ? என்ற கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வைர வரிகள் நினைவிற்கு வந்தது. வானிலிருந்து வரும் அமுதமான மழையையும் கண்ணீரோ என எண்ணிடும் இயற்கை நேயம் சிறப்பு.



சுழன்று அடித்தால்
சுனாமி தோற்றுவிடும்
நாக்கு!



பின்விளைவு அறியாமல் சிலர் கண்டபடி பேசிவிட்டு பின் வருந்துவதுண்டு. ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பது முற்றிலும் உண்மை. நமக்கான தீமையை நாமே தேடிக் கொள்கிறோம். நன்சொல் இருக்க வன்சொல் எதற்கு? வள்ளுவர், ‘கனியிருப்பக் காய் கவர்ந்தற்று’ என்றார். ‘யாகாவாராயினும் நா காக்க’ என்றார். கவனமாகப் பேச வேண்டும். கொட்டிய பொருளை அள்ளி விடலாம். சொன்ன சொல்லை திரும்பப் பெற முடியாது. சுனாமியை விட மோசம் தரும் தீச்சொல்!



வண்ணமோ வசீகரம்
நடனமோ ருசிகரம்
மயில்!



ஆண் மயிலுக்குத் தான் தோகை உண்டு. பெண் மயிலை மயக்கிட ஆண் மயில் நடனமாடுவது உண்டு. மழை வருவதையும் அறிவிப்பு செய்வது உண்டு. மேகம் கண்டு மகிழ்வில் ஆடுவது உண்டு. மயில் தோகையின் அழகிற்கு இணை வேறு இவ்வுலகில் இல்லை. அவ்வளவு அழகு.



கண்ணீர்
கண்ணின் நீரல்ல
மனதின் குருதி!



நான் பல ஆண்டுகளாக கவிதை எழுதி வருகிறேன். பலரின் கவிதைகளைப் படித்து மதிப்புரையும் வழங்கி வருகிறேன். கண்ணீரை மனதின் குருதி என்று இதுவரை யாருமே சொன்னது இல்லை. புதிய சிந்தனை, புதிய சொல்லாட்சி. பாராட்டுக்கள்.



எங்கே கற்றாய்?
பொறியியற் படிப்பை
தூக்கணாங்குருவி!



தூக்கணாங்குருவியின் கூட்டைப் பார்த்தவர்கள் நன்கு உணர முடியும். பொறியாளர்களை விஞ்சிடும் நேர்த்தியுடன் கட்டு இருக்கும். அதனை உற்றுநோக்கி வடித்த ஹைக்கூ நன்றி.



ஹைக்கூ உலகிற்கு புதிய கவிஞராக சாந்தி திருநாவுக்கரசு வந்துள்ளார். பாராட்டுக்கள். நூலை முழுவதும் வாசித்துப் பாருங்கள். ஹைக்கூ விருந்து, பல்சுவை இலக்கிய விருந்து வைத்துள்ளார்.

.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி. (1-Sep-18, 5:37 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 954

மேலே