மனிதன் - சுயத்தின் மொத்த உருவம்

உலகம் - இது அழகு கலைகளின் சுரங்கம் தானா ? இல்லை அழகு சுயங்களின் சுரங்கமா ?

உலகம் இது சுயத்தின் மொத்த உருவம். உலகம் தன்னை தானே சுற்றுவதாலோ என்னவோ அனைவரும் தனக்காக மட்டுமே சுற்றுகின்றனர், இது தவறில்லை உலகமே சுயநலத்தோடு இயங்குகிறதென்றால் மக்கள் மட்டும் விதிவிலக்கா என்ன ? ஆனால் ஒரு வேறுபாடு இங்கு உள்ளதே !
அது என்ன வேறுபாடு தெரியுமா உலகம் தான் இயங்க அல்லது தன்னில் உள்ள உயரினங்கள் வாழ காரணமாக உள்ள கதிரவனையும் சேர்த்து அல்லவா சுழலுகிறது அப்படியென்றால் மனிதனும் தான் வாழ காரணமாக உள்ள அல்லது தன் இருப்பிற்கு காரணமாக உள்ளவர்களையும் சேர்த்து அல்லவா இயங்க வேண்டும் அல்லது கொடுக்கும் நன்றிக்காவது பாத்திரமாக நடந்து கொள்ள வேண்டாமா இல்லையா ?
சரி பூமி அஃறிணை என வைத்துக்கொள்வோம் அதற்கு ஒரு சரியான பாதை அல்லது முறையான வழித்தடம் என்று ஒன்று உள்ளதே நமக்கெல்லாம் அதை போன்று மாறாத வழித்தடம் என எதுவும் இருக்கிறதா ? இல்லை என்பது தானே பதில்!!
சரி இன்னொரு கருத்திற்கு வருவோம் பூமிக்கான வழித்தடத்தை உருவாக்கியது யார் ! கடவுளா ? அல்லது இயற்கையா ? எதுவாக இருந்தாலும் அது ஒரு படைப்பாளி தானே அப்படியென்றால் படைப்பாளியால் பாதை சரியாக அமைக்கப்பட்டதா இல்லை படைப்பால் (பூமியால்) பாதை சரிசெய்யப்பட்டிருக்குமா ?
இதை அப்படியே மனித வாழ்வில் எடுத்துக்கொள்வோம் மனிதனின் சுயம் போன்ற குணங்களுக்கு யார் காரணம் படைப்பாளியா ? இல்லை படைப்பு மட்டும் தானா ? சிந்திக்க வேண்டிய நேரம் இது தான், முதலில் பார்த்த படைப்பால் தன்னை தானே மாற்றி கொள்ள இயலாது ஆனால் இரண்டாவது பார்த்த படைப்பால் தன்னை தானே மாற்றி கொள்ள இயலுமா இல்லை இயலாதா ? விடை நம் கையில் தான் உள்ளது. நன்றி மறப்பது நன்றன்று என்று கூறினாரே அப்படியென்றால் அது நன்று அன்று தானே !! நன்றி மறந்து சுயத்தில் ஈடுபடுவது சரியான நடைமுறை தானா ? யாரையும் பொதுநலம் கூட கருத சொல்லவில்லை தன்னலம் மட்டும் ஏன் என்பது தான் கேள்வி?
கலைஞரின் வார்த்தைகளில் சொல்வதென்றால், நாம் ஏன் மீனை மட்டும் உண்டு தன் பசியை போக்கும் ஒரு தன்னல கொக்கை போல் வாழ்கிறோம் ? அதே மீன் அழுக்கை தின்று தன் பசியையும் போக்கி கொண்டு தண்ணீரையும் சுத்தப்படுத்துகிறதே!! இது போல தன்னலத்திலும் பொதுநலம் கலந்த செயல் நமக்கு வராதது ஏன்? ஐந்தறிவு உள்ள ஜீவன்கள் கூட தன் இருப்பிற்கு ஒரு சோதனை என்றால் ஒன்று கூடுகிறதே, ஆறறிவு பெற்ற மனிதர்கள் இதை செய்ய விளையாதது ஏன் ? உலகம் என்பதற்கு ஒரு அழகான ஒரு கவிதையை சுரதா கூறுவார். அது
"வெள்ளாட்டு தலையை காட்டி
ஓநாயின் கறியை விற்கும்
கள்ளிமுள் நெஞ்சம் கொண்ட
கயவர் சூழ் உலகு"
எப்போது இம்மானிட பிறவிகள் திருந்தும் !!
ஒரே ஒரு ஷேக்ஸ்பியர்
ஒரே ஒரு லெனின்
ஒரே ஒரு காந்தி
ஒரே ஒரு பிடல்காஸ்ட்ரோ
ஒரே ஒரு நெல்சன் மண்டேலா
ஒரே ஒரு நெப்போலியன் மட்டும் இந்த உலகத்திற்கு போதுமா ?
வீட்டிற்கு ஒரு நாட்டை திருத்தும் மனிதன் கிளம்புவது எப்போது ?
தெருவில் உணவின்றி வாடும் குழந்தைகளை மீட்பது எப்போது ?
கைவிடப்பட்டு கையேந்துபவர்களுக்கு கைகொடுப்பது எப்போது ?
இயற்கையை மீட்டெடுக்கும் காலம் எப்போது ?
இழந்ததை எடுக்கும் காலம் எப்போது ?
தன்னலம் எனும் தீராத தாகம் தீருவது எப்போது ?
பிறர்நலம் கருதும் பி்தாமகன்களாய் மாறுவதெப்போது ?


சிறந்த மனிதனாய் நாம் மாற வேண்டும். மாற்றம் வேண்டி !!

எழுதியவர் : ஜெரோம் சகரியா (3-Sep-18, 7:21 pm)
சேர்த்தது : ஜெரோம் சகரியா
பார்வை : 209

மேலே