திகிலும் ருசிக்கும் 11

திகிலும் ருசிக்கும் 11
எவ்வளவு பிடிவாதம் பிடித்தும் உடனே கனகாவை அழைத்துவர மோகினி அனுமதிக்கவில்லை...

மோகினியின் பிடிவாதத்திற்கு வலுவான காரணம் இருக்குமென்று மனதிற்குள் பொறி தட்டியதால் அதன்பின் அந்த பேச்சை அப்படியே விட்டுவிட்டேன்...
"மோகினி இப்போ நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேனு தெரியுமா??"

"உங்க முகத்தை பார்த்தாலே தெரியுதுப்பா"

"ஆனா நீ ஏன் மோகினி இவ்வளவு சோகமா இருக்க..உன் முகம் வாடனாப்புல இருக்கே"

"எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்குப்பா"

அட போ மோகினி, எப்போ பாரு எல்லாத்துக்கும் காரணம் இருக்குனு சொல்ற, ஆனா என்னனு சொல்ல மாட்டேங்கற, என் கனகா உண்டாயிருக்கானு உனக்கு நல்லாவே தெரியும், ஆனா அதை ஏன் என்கிட்ட சொல்லலை, கேட் டா அதுக்கும் ஒரு காரணம் இருக்குனு சொல்லுவ...

அப்பா குழந்தையா இருக்குறப்போ சில விஷயங்கள் நமக்கு புரியாது, அதை தெரிஞ்சிக்க நாமளே நினைச்சாலும், அதை புரிய வைக்க மத்தவங்க முயற்சி பண்ணினாலும் அதை அந்த வயசுல புரிஞ்சிக்கிற பக்குவம் இருக்காது...பக்குவம் வந்தப்புறம் யாருமே சொல்லலைனாலும் சிலதை ஈஸியா காலமும், வாழ்க்கையம் புரிய வச்சிடும்...

மோகினி இப்போ நான் குழந்தை இல்ல, ஒரு குழந்தைக்கு அப்பா ஆக போறவன்...

அப்டினா நீங்க அப்பா ஆகப்போற விஷயத்தை ஏன் முன்னாடியே உணரலை...

மோகினி...

ஆமாப்பா, அம்மா உண்டானதை நீங்க ஏன் உணரலை, இத்தனை நாளும் அம்மா உங்க கூடவே தானே இருந்தாங்க, அதை கூட உணரமுடியாத அளவு நீங்க முட்டாளா...

மோகினியின் ஒற்றை கேள்வியில் என் புத்திசாலித்தனமெல்லாம் அடிபட்டு போனது, எனக்குள் நானே கேட்டுக்கொண்ட கேள்வி என்றாலும் என்னை அப்பாவென்று அழைக்கும் மோகினி இதை கேட்டதும் முகத்தில் யாரோ அறைந்தாற்போல் அவமானமாக உணர்ந்தேன்...
அதற்குமேல் ஒன்றும் பேசதோன்றாதவனாக நாற்காலிக்குள் முடங்கினேன்...

என் சோக முகம் மோகினியை பாதித்திருக்க வேண்டும், அவள் சோர்ந்து போனவளாக என் முன்னே அமர்ந்தாள்...

அப்பா, நான் பேசினது உங்களை கஷ்டப்படுத்திருந்தா மன்னிச்சிருங்க, ஆனா இது தான் நிதர்சனம், எதை எப்போ தெரிஞ்சிக்கணும்னு காலம் தான் முடிவுபண்ணும், எல்லாத்தையும் முன்கூட்டியே தெரிஞ்சிக்கிட்டா வாழ்க்கை சலிப்பு தட்டிரும், இத பத்தி இனி யோசிக்காதிங்க, அப்பா ஆகப்போற என் அப்பாவுக்காக நான் ஒரு பரிசு தர போறேன்...

பரிசு என்றதும் மனம் குழந்தையை போல துள்ளி குதிக்க ஆரம்பித்தது, அதுவும் மோகினி எனக்கு பரிசு தருவது சாதாரண விஷயம் அல்ல, நிச்சயமாக அது ஸ்பெஷலாக தான் இருக்கும்...

மனம் குதிப்பதை வெளிகாட்டிக்கொள்ளாமல் கண்கள் மின்ன என்ன பரிசு அது என்று மெல்லிய புன்னகையோடு கேட்டேன்...

அதுவா...

என்ன மோகினி யோசிக்கற?

முதல்ல கண்ண மூடுங்க,அப்புறம் ரெண்டு கையையும் நீட்டுங்க....

மோகினி சொன்னதும் கண்ணை மூடிக்கொண்டு கையை நீட்டியபடி நின்றேன்...

பரிசு வாங்கறதுல அப்பாக்கு இவ்ளோ அவசரமா, சரி சரி நான் சொல்ற வரை கண்ணை திறக்க கூடாது...

மெதுவாக சரி என்று தலையசைத்தேன்...

கைகளில் கணம் கூடியதை உணரவே வெடுக்கென்று கண்களை திறந்து பார்த்தேன்...பிறந்து சில நொடிகளே ஆன பச்சிளம் குழந்தை கண்மூடியபடி என் கையில் கிடக்க மனம் சொல்லமுடியாத ஓர் உணர்வை அடைந்தது....

கண்களில் இருந்து நீர் வழிய மோகினியை பார்த்தேன்...

நான் சொன்ன பரிசு இது தான் என்று கண்களாலே சைகை செய்தாள்....

கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு என் கைகளுக்குள் பொருந்தியிருந்த குழந்தையை பார்க்க பார்க்க உடலெல்லாம் பரவசம் பற்றிக்கொண்டது...

என் கைகளுக்குள் ஒட்டுமொத்த உடலையும் பொதிந்து எந்த சலனமும் இல்லாமல் என் மீது முழு நம்பிக்கையும் வைத்துவிட்டபடி கண்திறக்காமல் உறங்கிக்கொண்டிருக்கும் மழலையின் அழகை பார்த்தால் இந்த உலகத்தின் ஏழு அதிசயங்களும் தோற்றுப்போய் விடும் என்றே தோன்றியது..
இதெல்லாம் ஓர் நிமிடம் தான் நிகழ்ந்திருக்கும், அடுத்த நிமிடம் குழந்தை என் கையிலிருந்து மறைந்து விட்டது....

கையிலிருந்து மறைந்துவிட்டதென பதறி மோகினியை பார்த்தேன், அவள் அங்கே பாருங்கள் என சைகை செய்தாள் ...

மோகினி சுட்டிக்காட்டிய இடத்தை பார்த்தால் ஆறுமாத குழந்தையாக தவழ்ந்து கொண்டிருந்தது...கண் கொட்டாமல் ஆச்சரியம் பொங்க பார்த்து கொண்டிருந்தால் அடுத்த நிமிடத்தில் அங்கிருந்து மறைந்தது...

மோகினி கொடுத்த பரிசின் ரகசியம் புரிந்து இந்த முறை பதற்றமில்லாமல் பார்வையை அலையவிட்டேன்...

கொஞ்சம் தூரத்தில் தத்தி தத்தி நடந்து கொண்டிருந்தாள் என் மகள்...என் சாயலில் என்னை போல் ஒரு ஜீவன் என் வீட்டில் உலவியது மனதிற்கு குளிர்ச்சியை தந்தது...

குளிர்ந்த மனம் உலர்வதற்குள் என் மகள் ஓடி வந்து அப்பா என்று கட்டி கொள்ளும் பருவம் வந்தது...அடுத்து என்ன பருவம் என்று யோசித்து கொண்டிருக்கும்போது மோகினி என்னை எழுப்பினாள்...

அப்பா கண்ணை திறங்க..

என்ன, நான் இன்னும் கண்ணை மூடிட்டு தான் இருக்கேனா, அப்போ இவ்ளோ நேரம் பார்த்தது எல்லாம்...உணர்ந்தது எல்லாம்....குழம்பியபடியே கண்ணை திறந்தேன்...

மோகினி, இப்போ....நான் திக்கி திணறி சொல்லி முடிப்பதற்குள் மோகினி கேலிப்புன்னகை சிந்த எதோ ஓன்று மனதிற்கு புரிந்தது போல இருந்தது,ஆனால் தெளிவாக எதுவும் புரியவில்லை...

என்ன அப்பா, நான் கொடுத்த பரிசு எப்படி??

மோகினி நான் இப்போ அனுபவிச்சதெல்லாம் நிஜம் தானே, எல்லாம் கனவு மாதிரி இருக்கு...

அத்தனையும் நிஜமாகப்போற கனவுப்பா...

மோகினி உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை, எவ்ளோ பெரிய பரிசை குடுத்துருக்க, அந்த சில நிமிஷம் என் மனசு எவ்ளோ சந்தோஷமா உணர்ந்தது தெரியுமா..பூரிப்பில் நான் பேசிக்கொண்டே போக மோகினியின் முகம் இருண்டது ...

எழுதியவர் : ராணி கோவிந்த் (5-Sep-18, 4:38 pm)
சேர்த்தது : ராணிகோவிந்த்
பார்வை : 442

மேலே