கேள்வியின் வாக்குமூலம்
கேள்வியின் வாக்குமூலம் !
விடைகளை தின்று
கொழுத்த குழந்தை நான்
எங்கே அநீதி குரல்வளை நெரிக்கிறதோ
அங்கே நான்
பிறப்பேன்
எனக்கான விடை பிறக்கும்போது
நான் சோர்ந்து போகிறேன்
உங்கள் விடைகள் கிடைக்கும்வரை
நான் வீரமிக்கவன்
என் விடைகுழந்தையை
பிரசவிக்கும் வாடகைத்தாய்
நீங்கள்
எனக்கான விடை தேடும் படலத்தில்
பல விஞ்ஞானிகளின் இரவுகளை
திருடிருக்கிறேன்
இந்த சமூக மாற்றத்தின்
முதல் அஸ்திவாரம் நான் தான்
நான் பிறக்க பிறக்கத்தான்
உங்களுக்கான தேசியகீதம் உருவானது
என்னில் இருந்து உருவான
விமர்சனங்கள் தான்
எதிராளனின் பகுத்தறிவை
பட்டை தீட்டியது
ஒவ்வொரு முறைக்கான
சமூக பரிணாம வளர்ச்சியின்
மூலக்கல் நானே
மாற்றங்கள் மட்டுமே
என் பிறப்புக்கான
அர்த்தங்கள்
இன்றோ
நான் அநீதியின்
பேரில் பிறக்கும் இடமெல்லாம்
எனக்கான விடையாக
துப்பாக்கி குண்டுகளும்
சிறைக்கதவுகளும்
இன்று உங்கள்
விடைகள் நான் தின்று கொழுக்கும்
உணவின்றி உயிர்கொல்லியானது
முதல் முறையாக
நான் பிறக்காமலே
மரிக்க முயல்கிறேன்