காலாவதியான காதல்
கவிதை
தலைப்பு : காலாவதியான காதல்.
தாயும் தாரமும்
தன்மையில் ஒன்றே!
இருவருமே உன்னைக்
காதல் செய்கிறார்கள்.
இருவருமே உனக்காகத்
தியாகம் செய்கிறார்கள்.
தேவைக்கு அதிகமாய்
உண்ண செய்கிறார்கள்.
கல்லாலான கட்டிடத்தை
இல்லம் செய்கிறார்கள்.
உன்னை கவனிப்பதில்
தன்னைத் தொலைக்கிறார்கள்.
தனக்கான வாழ்வினை
உனது ஆக்குகிறார்கள்.
தாயை மாத்திரம்
தங்கத் தட்டில் தாங்கி,
தாரத்தை தரங்கெட்டு
மட்டம் தட்டுவதேன்?
ஒருத்தி உன்னை
உலகிற்கு கொணர்கிறாள்.
ஒருத்தி உன்னையே
உலகாக்கி வாழ்கிறாள்.
நம்பி வந்தவள்மீது
நம்பிக்கையற்ற நீ,
அறிவற்றவளென அவளை
அலட்சியம் செய்கிறாய்!
பேச எத்தனிக்கையில்
பேசாதே என்கிறாய்!
கனிவான கருத்திற்கும்
செவிசாய்க்க மறுக்கிறாய்!
அவசிய பேச்சுக்களில்
அவளை புறந்தள்ளுகிறாய்!
முக்கிய முடிவுகளை
முன்னின்று எடுக்கிறாய்!
இல்லத்தில் இருப்பவள்
இவளுக்கென்ன தெரியும்
திறமையற்றவள் என
தீர்மானம் செய்திட்டாய்!
முடிவெடுக்கத் தெரிந்தும்
விட்டுக்கொடுக்கும் தாய்,
தியாகத்தால் உன்னை
தலைவனாக்க விழைகிறாள்.
முடிவெடுக்கும் திறனிருந்தும்
விட்டுக்கொடுக்கும் மனைவி,
தலைவனாய் உன்னை
உணரச் செய்கிறாள்.
பெற்றெடுத்ததன் பயனாய்
வாழ்நாள் முழுவதும்
பாச மழையில் நனைகிறாள்
பெற்றெடுத்த அன்னை.
உடன் வந்ததன் பயனாய்
கவனத்தை கவர்வதில்
களைத்து போகிறாள்
கட்டிய மனைவி.
வாழ்வின் விளிம்பில்
இறப்பின் வாயிலில்
மரணத்தின் மடியில்
அவள் இருக்கையில்..
வார்த்தையில் அன்பை
வார்ப்பதில் பயனில்லை.
இருக்கும் பொழுது
சொல்லப்படாத அன்பை
இறக்கும் பொழுது
கொட்டி பலனில்லை.
இளமையில் அடிமையாக்கி
முதுமையில் முடிசூடுகிறாய்.
சூட்டிய கிரீடத்தோடு
சுடுகாடு செல்லமுடியாதே?!