மாணவன்
செம்மறியாட்டு வாழ்க்கை
வாழாதே மாணவனே
செங்குருதி மண்ணில்
பிறந்தவன் நீ!
தோல்விகள் தொடர்வண்டி
பெட்டிகளாய் உன் முதுகில்
தொலைதூரம் தூக்கிச்செல்ல
ஆசைப்பட்டு விடாதே!
வையகம் யாவும் ஆளும்
தகுதி உன் எல்லை
வயல் வரப்புகளோடு வடிகட்டி
அணை கட்டிடாதே!
சாதிய சமூக சேற்றுக்குள்
களையெடுக்க கால் ஊன்று
சீர்கேடுகளை சிக்கெடுக்க
சிறகுகள் முளைக்கப் பெறுவாய்!
பட்டம் பெற்றும் பயனில்லை
பாடப் புத்தகம் போதாது
பகுத்தறிவு பக்ககங்களை
புரட்டிப்பார் புத்துணர்ச்சி கொள்வாய்!
வியர்வை துளிகள் மண்ணில்
விழுந்துவிட்டால் உன் தோள்கள்
வேர்பிடித்து விண்ணைத் தொட
கைகள் நீட்டிட வாடா மன்னவனே!