வந்ததே ஆழ்கலத் தன்ன கலி – நாலடியார் 12

நேரிசை வெண்பா

நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்
அ’ற்’புத் தளையும் அவிழ்ந்தன; - உட்காணாய்;
வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே
ஆழ்கலத் தன்ன கலி. 12

இளமை நிலையாமை, நாலடியார்

பொருளுரை:

நேயமும் கயிறு அறுந்தன; சான்றோரும் அணுக்கங் குறைந்தனர், பொது மக்களிடம் உண்டான அன்பு என்னுங் கட்டும் நெகிழ்ந்தன,

அகமாக எண்ணிப் பார், இளமையை மகிழ்ந்து வாழ்தலினால் பயன் என்ன உண்டு? கடலில் மூழ்கிவிடுகின்ற மரக்கலத்தை ஒத்த துன்பம் இதோ வருகின்றது.

கருத்து:

இளமையையே பொருள் செய்து வாழ்வதனால், நண்பர் சான்றோர் பொதுமக்கள் முதலியோரது தொடர்பு குறைந்து வாழ்நாளுங் கெடும்.

விளக்கம்:

அற்றன அவிழ்ந்தன என்று பன்மையாக வந்தமையால், நட்புகள் அன்புகள் என்று அவ்வினைகளின் வினைமுதல்களையும் பன்மையாகக் கொள்க; பலராற் பலவகையாகக் கொள்ளப் படுதலால் அவை பன்மையாயின.

அன்பு என்றது, அற்பு என்றாயிற்று! இடையிலுள்ள எழுத்து வலித்தது.

இளமையைப் பொருளாக நினைத்துப் பற்றுள்ளத்தோடு உயிர் வாழ்ந்தமையால், நண்பர் முதலியோர் அற்றனர்.

இங்ஙனம் நட்பு முதலியன அகல ஒருவன் உயிர் வாழ்தலால் உண்டான பயன்றானும் ஏதுமில்லை.

கடலுள் மரக்கலம் ஆழ்ந்தாற்போல இவ்வுடம்பு திடுமெனக் கூற்றுவன்வாய் அழிவதுதான் அதனாற் கண்ட பயன் என்றற்கு ‘வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே ஆழ்கலத் தன்ன கலி' என்றார்.

வந்தது என இறந்த காலத்தால் நின்றது, விரைவில் துணிவுப் பொருட்டு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Sep-18, 6:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 55

சிறந்த கட்டுரைகள்

மேலே