இதயம் பேசுகிறேன்

இதயம் பேசுகிறேன்.

பெருமைக்குரியவளே
பேர்பெற்றவளே
உன் இதயம் பேசுகிறேன்
இறங்கிச் செவிகொடு.

நல்ல பண்புகள் உன்னிடத்தில்
ஆயிரம் உண்டு
நல் நம்பிக்கை தான்
உன்னிடத்தில் இல்லை.

மனிதர்களை நம்புகிற நீ, உன்
மனதை ஏன் நம்புவதில்லை?
உறவுகளை நம்புகிற நீ
உன்னை ஏன் நம்புவதில்லை?

எதிர்பார்ப்புகள் எங்குண்டோ,
அங்கே ஏமாற்றங்கள் உண்டு.
அறிவாயா?

உறவை வந்தவர்கள்
உன் தயவால் வாழ்ந்தார்கள்,
உண்மைதான், நீ உன்
கடமையைச் செய்தாய், ஏன்
கைமாறு எதிர்பார்க்கின்றாய்?

உன் தோளில் நீ சுமந்த
சுமை இறங்கி விட்டது,
நல்லது தானே, அதை ஏன்
இன்று இதயத்தில் சுமந்து
சோர்ந்து போகிறாய்?

உன்னால் இன்று
சொல்ல முடியுமா
இவைகள் சுகமான
சுமைகளென்று?

தோழி! உனக்குள் இருக்கும்
உன்னைத் தேடு.
உறவுகளைத் தேடாதே.

உனக்கு நீதான் உறவு, ஓத்துகொள்
யாரையும் உனக்கு ஒப்பிடாதே
நீ நீதான், கற்றுக்கொள்.

உலகம் உன்னை வெறுத்தாலும்
உன்னை நீ வெறுக்க மாட்டாய்.
உறவுகள் மாறினாலும்
நீ மாற மாட்டாய்.
ஏன் தெரியுமா? உன்னை பற்றி
உனக்குத் தெரியும்.

இப்பொழுதும் ஒன்றும்
கெட்டுப் போய் விடவில்லை.
என்னுயிர்த் தோழியே
விழுந்து கிடந்தது போதும்,
எழுந்து நில்.

நீ ஒரு கவிதை,
உன்னை நீ ரசித்தால்,
நீ ஒரு அழகோவியம்,
உன்னை நீ வரைந்தால்,
நீ ஒரு அதிசயம்,
உன்னை நீ வியந்தாள்,
நீ ஒரு ஆலயம், உன்னில்
ஆண்டவர் குடியிருந்தால்.

நீ ஒரு சிற்பி, உன்னை
நீயே செதுக்கிக் கொள்.
இன்னும் போக வேண்டிய
தூரம் அதிகம்,

உன் இதயத்துச் சுமையை
வெளியில் எடுத்துப் போட்டு விடு,
இலகுவாய் உணர்வாய்,
இறக்கை முளைத்து விடும்,
நடக்க வேண்டாம், பறக்கலாம்.

உன்னை நீதான் வெல்ல வேண்டும்,
ஜெயமா, தோல்வியா?
தீர்மானித்துக் கொள்.
வீர நடை போடு,
வெற்றி மங்கையே.

உன் நலம் மட்டுமே விரும்பும் , நான்
உன் பாதுகாப்பாக என்றும்
உன்னோடு இருக்கிறேன்,
என்னையும் இழந்து போகாதே.

இப்படிக்கு, உன்னை
உன்னை மட்டுமே
நேசிக்கும்,.....
உன் இதயம்.....!

எழுதியவர் : பிரின்சஸ் ஹாசினி (18-Sep-18, 5:16 am)
Tanglish : ithayam pesukiren
பார்வை : 915

மேலே