வாடகை மனிதர்கள்

விரதம் இருந்தும்
தவம் பல புரிந்தும் ,
நம் குறை நீங்க
இறைமுன் மன்றாடினாலும்
நம்முன் அவன் தோன்றுவதுமில்லை ….
நம் கஷ்டங்களை போக்குவதுமில்லை!!

மாறாக
நம்முடன் பழகும்,
நம்முடன் உறவாடும் ,
ஏதோ ஒரு மனித குணமே
நம் வாழ்வின் மாற்றத்திற்கும்
நம் முன்னேற்றத்திற்கும்
உறுதுணையாக அமையும்..

ஆதலால்
எவரையும் ஒதுக்காதீர்
மனத்தால் கூட இழிக்காதீர்...
மனிதத்தை யோசிப்போம்
பிழையே செய்திருப்பினும்
அதை மறந்து
அவர்களை நேசிப்போம் …

அகங்காரம் நம்மை அழித்துவிடும்
அன்பு மட்டுமே வாழவைக்கும்
கற்பனையில் இருக்கும் இறைவனை
தொழுவதிலும் பெரிது
நம் கண் முன் இருக்கும் மனிதத்தை
நேசிப்பது என்பதை உணர்வோம் …,

புதிய விடியல் ஒவ்வொன்றும்
நம் ஆயுளில் ஒரு நாளை
குறைக்கத்தான் செய்யும்
மரணத்தை நோக்கிய
இந்த பயணத்தில்
நான் என்றும்
எனது என்றும்
அகந்தை எதற்கு ??

இந்த புவிதனில்
வாழ வந்த
வாடகை மனிதர்கள் நாம்

இருக்கும் வரை
இறக்கும் வரை
இன்புற்று வாழ்வோம்
பிறர்
இன்புற வாழ்வோம்

என்றும் ...என்றென்றும்
ஜீவன்

எழுதியவர் : ஜீவன்.. (22-Sep-18, 8:29 pm)
பார்வை : 253

மேலே