கடமைகள் எல்லாம் மங்குது

பூக்கள் பூப்பது புதுமை –இந்தப்
பூமிக்கு அதனால் பெருமை.- தேன்
ஈக்கள் சேர்த்திடும் இனிமை –அந்த
இனிமை போக்கிடும் தனிமை !

பூவில் தோன்றும் மென்மை –அது
புரிந்தால் தொலையும் வன்மை-பலர்
நாவில் பிறக்கும் நஞ்சும் –அதை
நினைத்தால் நெஞ்சும் அஞ்சும்.

பூவாய் மணத்து வாழு –உன்
புன்னகை அதிலே சேரு –தினம்
தேனாய் இனிக்கும் பாரு –பல
தொல்லையும் தொலையும் பாரு !

பூவை கசக்கிட துணியும் –அந்த
பொல்லார் இங்கே பணியும் –ஒரு
தேவை இங்கினி வளரும் –பின்
அல்லவை எல்லாம் அலரும்.

கொள்கைப் பூக்கள் பூத்தால் –பல
கொள்ளைகள் நாட்டில் மறையும்-நல்
உள்ளங்கள் சிரித்து மகிழும் –பிறர்
ஊழலைக் கண்டு உமிழும்.
*
பணத்தால் வந்திடும் பதவி –பசி
பட்டினி போக்குமா உதவி –ஒரு
பிணமும் இங்கே விழிக்கும் –தன்
பெட்டியில் பணத்தைப் பதுக்கும்.

நதிகள் நாட்டைக் காக்குமா ? –இலை
விதிவழி வந்தே தாக்குமா ? தம்
மதியால் மானுடம் பிழைக்குமா ? –தினம்
மதவெறி தன்னால் நிலைக்குமா ?

சுயநலம் எங்கும் பெருகுது –பலர்
சுதந்திரம் இங்கே தொலையுது -ஒரு
கயமை ஊற்றுப் பொங்குது- அதில்
கடமைகள் எல்லாம் மங்குது. ************* 16/09/2018 ************

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (25-Sep-18, 9:18 pm)
பார்வை : 106

மேலே