அகத்தின் இருளும் நீங்கிடுமே அன்பு நண்பன் மொழியாலே - ஆசிரிய விருத்தம்

அகத்தின் இருளும் நீங்கிடுமே அன்பு நண்பன் மொழியாலே!

அறுசீர் விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

முகத்தைப் பார்த்தால் தெரிந்திடுமா
முழுதாய் உன்றன் நண்பனையே?
முகத்தில் தெரியும் வெளிவேடம்;
.மூடி மறைத்தே குழிபறிப்பு!
தகுந்த நட்புக் கிடைப்பதுவும்
தக்க பண்பின் குணத்தாலே!
அகத்தின் இருளும் நீங்கிடுமே
அன்பு நண்பன் மொழியாலே! 1

தன்னலம் பாராத் தன்மையன் அவன்தானென் பேனே!

எழுசீர் விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச் சீர் வரலாம்)

நண்பனின் முகத்தைப் பார்த்ததும் உனக்கு
நல்லவன் எனவறி வாயா?
கண்ணியங் காக்கும் கருத்தினை ஈர்க்கும்
கற்பகத் தருவவன் தானா?
தண்ணில வெனவே குளிர்ந்திடும் நட்பைத்
தரணியில் உனக்களிப் பானா?
தண்கதிர் எனவே தன்னலம் பாராத்
தன்மையன் அவன்தானென் பேனே! 2

உரக்கச் சொல்வேன் நண்பனென்பான் இவனே என்று!

எண்சீர் விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)

யார்நண்பன்? எக்கணமுந் தோற்றந் தந்து
..யாதுமாகி நிற்பானோ? அறியேன் நானும்!
நேர்படுத்தும் பார்வையுடன் நெஞ்சில் அன்பும்
..நீங்கிடாத நன்னட்பும் நிலையாய்க் கொண்டே
பார்மிசையோர் போற்றவல்ல இனிய பண்பும்
..பக்கத்தில் துணையென்ற பாங்கும் பெற்ற
ஊரிலுள்ளோர் ஏத்திடவே உரக்கச் சொல்வேன்
.உரிமையுடை நண்பனென்பான் இவனே என்று! 3

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Sep-18, 10:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 161

மேலே